ஐபிஎல் 2021: நான்காவது முறையாகக் கோப்பையை வென்றது சென்னை அணி!

2021 ஆண்டின் ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் நேற்று (அக்டோபர் 15) இரவு துபாயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பல பரீட்சை நடத்தின.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. கொல்கத்தா அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இதனால் ரஸ்செல் விளையாடவில்லை.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், டூ பிளெசிஸ் முதலில் நிதானமாக ஆடினர். பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. கெய்க்வாட் 32 ரன்கள் சேர்த்த நிலையில், சுனில் நரைன் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ராபின் உத்தப்பா களமிறங்கினார்.

கொல்கத்தா பந்து வீச்சை வெளுத்து வாங்கிய டூ பிளெசிஸ், 35 பந்துகளில் அரை சதம் கடந்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய உத்தப்பா, தன் பங்குக்கு 31 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலியும் பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்டார். 86 ரன்கள் குவித்த டூ பிளெசிஸ் கடைசி பந்தில் அவுட் ஆகினார்.

20 ஓவர் முடிவில் சென்னை அணி மூன்று விக்கெட்களை இழந்து 192 ரன்கள் குவித்தது. மொயீன் அலி 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் நிலைத்து இருந்தார்.

இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். இதில் ஷுப்மன் கில் 51 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களும் குவித்து அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ஆனால், இவர்களுக்குப் பிறகு வந்தவர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் ஆட்டம் சென்னை அணிக்கு சாதகமாக மாறியது.

கொல்கத்தா அணியில் நிதிஷ் ரானா (0), சுனில் நரேன் (2), இயன் மார்கன் (4), தினேஷ் கார்த்திக் (9) என வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து ஐ.பி.எல். 2021 இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி, சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்று பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.

கிரிக்கெட்டில் பல்வேறு சாதனையை படைத்துள்ள தோனி நேற்று புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல்லின் இறுதிப்போட்டியில் விளையாடியதின் மூலம் டோனி டி20 கிரிக்கெட்டில் 300 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 213 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதில்130 வெற்றி மற்றும் 81 தோல்விகளும் அடங்கும்.

இந்தியாவுக்காக கேப்டன் பொறுப்பிலிருந்து டி 20 போட்டிகளில் 41 வெற்றியைக் கொடுத்துள்ளார். இதில் கேப்டன் பொறுப்பு வகித்த ஆரம்பக்கட்டத்திலே இந்தியாவுக்கு 2007ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பையைப் பெற்றுக்கொடுத்த பெருமையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version