ஐபிஎல்: பெங்களூரு Vs ஐதராபாத்.. சிறந்த பேட்டிங் Vs சிறந்த பவுலிங்

நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு-ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர், கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 19ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடரின் மூன்றாவது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இன்றைய போட்டியில் ஐபிஎல் தொடரின் சிறந்த பேட்டிங் வலு கொண்ட பெங்களூரு அணியும், சிறந்த பந்துவீச்சு வலு கொண்ட ஐதராபாத் அணியும் களம் காண உள்ளன. இதுவரை இந்த இரு அணிகளும் 15 முறை நேருக்கு நேர் மோதிய நிலையில், அதிகபட்சமாக ஐதராபாத் அணி 8 முறை வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றாத கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த முறையாவது ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக அணிக்கு வாங்கப்பட்டுள்ள ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரராக இறங்க உள்ளார். இது அவர் கால்பதிக்கும் 8-வது அணியாகும். கோலி, டிவில்லியர்ஸ் ஜோடி வழக்கம் போல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த முறை கோப்பையை வென்றே தீருவோம் என முனைப்புடன் ஆர்.சி.பி அணி தயாராகி வருக்கிறது.

பந்து வீச்சில் ஸ்டெயின், சாஹல், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர், கிரிஷ் மோரிஸ் வலு சேர்க்கிறார்கள். வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் வியூகங்களை தீட்டியுள்ளனர்.

வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த ஆண்டு பெங்களூருக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 185 ரன்கள் குவித்து சாதனை படைத்த வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் அதே போன்று மிரட்ட காத்திருக்கிறார்கள். வில்லியம்சனும் அணியில் இருப்பது பேட்டிங் ஆர்டருக்கு கூடுதல் பலமாக உள்ளது.

உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷித்கான், முகமது நபி இருவரும் இறங்கும் பட்சத்தில் கேன் வில்லியம்சனுக்கு அணியில் இடம் கிடைக்காது. புவனேஷ்வர்குமார், மனிஷ் பாண்டே, சஹா, கலீல் அகமது என்று திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை.

துபாய் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளதால், இரு அணி வீரர்களும் சற்று கூடுதல் கவனமுடன் ஆட வேண்டியுள்ளது. குறிப்பாக பெங்களூரு ரஷீத் கானின் சூழலை நேர்த்தியாக எதிர்கொள்ள வேண்டி உள்ளது. மற்றபடி இரு அணிகளும் சம பலம் கொண்டு இருப்பதால், இந்த போட்டி அதிரடியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version