ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில், பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
துபாயில் நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழப்பிற்கு 126 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பூரான் 32 ரன்களை சேர்த்தார்.
இதையடுத்து களமிறங்கிய வார்னர்-பார்ஸ்டோ ஜோடி ஐதராபாத் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தது. இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 56 ரன்களை சேர்த்தனர். அதிரடியாக ஆடிய வார்னர் 20 பந்துகளில் 35 ரன்களை சேர்த்து பிஷனோய் பந்துவீச்சில் வெளியேற, அவரைத்தொடர்ந்து பார்ஸ்டோவும் 19 ரன்களில் முருகன் அஷ்வின் பந்துவீச்சில் போல்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த அப்துல் சமாத் 7 ரன்களில் நடையை கட்ட, 67 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து, 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மணிஷ் பாண்டே- விஜய் சங்கர் இருவரும் நிதானமாக ஆடினார். பஞ்சாப் அணி வீரர்கள் சிறப்பாக வீசி அவர்களுக்கு அழுத்தம் கொடுத்தாலும், இருவரும் பொறுப்புடன் ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 15 ரன்கள் எடுத்து இருந்தபோது மணிஷ் பாண்டே ஜோர்டன் பந்துவீச்சிலும், 27 ரன்கள் எடுத்தபோது விஜய்சங்கர் அர்ஷ்தீப் சிங் ஓவரிலும் வெளியேற ஆட்டம் இருதரப்புக்கும் சாதகமாக மாறியது. அடுத்து வந்த ஹோல்டர் 5 ரன்களுக்கு நடையை கட்டினார். அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டால் ஆட்டத்தில் பரபரப்பு கூடியது. 19.5 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது..
இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் பஞ்சாப் நீடிக்கும் நிலையில், தொடரில் இருந்து லீக் சுற்றிலேயே ஐதராபாத் அணி வெளியேறுவது உறுதியாகியுள்ளது.