பெங்களுர் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் அணி 177 ரன்களை சேர்த்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில், கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. நடப்பு தொடரில் 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில், பெங்களூர் அணி 5வது இடத்தில் உள்ளது. அதேசமயம், ராஜஸ்தான் வெறும் 3 வெற்றிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.
பிளே-ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து இருக்க, ராஜஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டியது அவசியம். இந்நிலையில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, தொடக்க வீரர்களாக உத்தப்பா-ஸ்டோக்ஸ் ஆகியோர் களமிறங்கினர்.
இதுவரை தொடரில் சொதப்பலாக ஆடி வந்த உத்தப்பா, இன்றைய போட்டியில் அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தார். மறுமுனையில் ரன் சேர்க்க தடுமாறிய ஸ்டோக்ஸ், 19 பந்துகளில் 15 ரன்கள் மட்டும் எடுத்து மோரீஸ் பந்துவீச்சில் வெளியேறினார். அவரை தொடர்ந்து உத்தப்பாவும், 22 பந்துகளில் 41 ரன்களை சேர்த்து சாஹல் பந்துவீச்சில் வெளியேற, அதே ஓவரில் சஞ்சு சாம்சனும் 9 ரன்களில் நடையை கட்டினார்.
இதன்மூலம், 69 ரன்களை சேர்ப்பதற்குள் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுக்களை இழந்தது. 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்மித்-பட்லர் ஜோடி பொறுப்புடன் ஆடி றன் குவிப்பில் ஈடுபட்டது. நிதானமாக ஆடிய பட்லர் 24 ரன்களில் வெளியேற, மறுமுனையில் அதிரடி காட்டிய ஸ்மித் அரைசதம் கடந்தார்.
36 பந்துகளில் 57 ரன்களை சேர்த்து ஸ்மித் வெளியேற, இறுதியில் திவேத்தியா 19 ரன்களை சேர்க்க ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை சேர்த்தது. பெங்களூர் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மோரீஸ் 4 விக்கெட்டுகளையும், சஹால் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.