ஐபிஎல்: கோலியின் மிரட்டலான பேட்டிங்.. இலக்கை எட்டுமா தோனி படை?..

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில், பெங்களூர் அணி 169 ரன்களை சேர்த்தது.

துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மோசமான பேட்டிங்கால் கடும் விமர்சனத்திற்கு ஆளான ஜாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தமிழக வீரர் ஜெகதீசனுக்கு சென்னை அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களான பின்ச் மற்றும் தேவ்தத் ஜோடி, சாஹரின் ஸ்விங்கிங் பந்தில் திணறியது. காற்றில் பேட்டை வீசிக் கொண்டு இருந்த பின்ச், 9 பந்துகளில் 2 ரன்களை மட்டும் எடுத்து சாஹர் பந்தில் க்ளீன் போல்டானார். தொடர்ந்து வந்த கேப்டன் கோலி, பொறுப்புடன் விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால், பெங்களூர் அணி வீரர்கள் அதிரடியாக ஆட முடியாமல் திணறினர்.

நிதானமாக ஆடி வந்த தேவ்தத் 34 பந்துகளில் 33 ரன்களை எடுத்து வெளியேற அடுத்து வந்த டிவிலியர்ஸ் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். வாஷிங்டன் சுந்தரும், 10 ரன்களில் வெளியேற 93 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

விக்கெட் சரிவிக்கு மத்தியிலும், மறுபுறம் சிறப்பாக ஆடிய கோலி சீரான இடைவெளியில் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை விளாசினார். அவருக்கு துணையாக ஷிவம் துபே ரன் சேர்க்க தொடங்கினார். இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்த கோலி 90 ரன்களையும், துபே 22 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை சேர்த்தது.

Exit mobile version