ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 7-ஆவது சீசன் இன்று கோவாவில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் கேரளாவும் கொல்கத்தாவும் மோதவுள்ளன.
ஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டி கோவாவில் இன்று முதல் துவங்க உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.எஸ்.எல். போட்டியில், இது 7-வது சீசன் ஆகும். பாம்போலிம் நகரில் உள்ள ஜி.எம்.சி. மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும் – கேரளா அணியும் மோதவுள்ளன.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தப்பட்ட நிலையில், தற்போது ஐ.எஸ்.எல். போட்டிகள் தான் இந்தியாவில் நடத்தப்படும் மிகப்பெரிய அளவிலான முதல் விளையாட்டுப் போட்டி ஆகும்.
ஐ.எஸ்.எல். போட்டிகள் வழக்கமாக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும். ஆனால், தற்போது நிலவி வரும் கொரோனா சூழல் காரணமாக, இம்முறை கோவாவில் குறிப்பிட்ட நகரங்களுக்குள்ளாக மட்டும் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நவம்பா் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தப் போட்டிகள் நடத்தப்படுகிறது. ஆனால், எந்தப் போட்டிகளிலும் ரசிகா்களுக்கு அனுமதி இல்லை என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சீசனில் கொல்கத்தா அணி, ஐ-லீக் போட்டியின் ஏ.டி.கே. மோகன் பகன் அணியுடன் இணைக்கப்பட்டு, அந்தப் பெயரிலேயே விளையாடுகிறது. மேலும், புதிதாக எஸ்.சி. ஈஸ்ட் பெங்கால் அணியும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அணிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
அணிகளின் விவரங்கள் :
- எஃப்.சி. கோவா
- ஏ.டி.கே. மோகன் பகன்
- பெங்களூா் எஃப்.சி
- ஜாம்ஷெட்பூா் எஃப்.சி
- சென்னையின் எஃப்.சி
- மும்பை சிட்டி எஃப்.சி
- ஒடிஸா எஃப்.சி
- நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்.சி
- கேரளா பிளாஸ்டா்ஸ்
- ஹைதராபாத் எஃப்.சி
- எஸ்.சி ஈஸ்ட் பெங்கால்
இதனிடையே இந்த சீசனில் நடைபெறவிருக்கும் ஐ.எஸ்.எல். போட்டிகள் அனைத்தும் எந்த தடையும் இல்லாமல் சுமூகமாக நடைபெற்றால், இந்தியாவில் மற்ற அனைத்துப் போட்டிகளையும் தொடங்க இது ஒரு ஊன்றுகோலாக அமையும் என்று பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.