அர்ஜென்டினா கால் பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா மாரடைப்பின் காரணத்தால் நேற்று காலமானார். அவருக்கு வயது 60.
1977 முதல் 1994 வரையிலான கால கட்டத்தில் சர்வதேச கால்பந்து உலகின் அசைக்க முடியாத வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர். உலகின் கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர் 4 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். 1982, 1986, 1990, 1994 ஆண்டுகளில் நடந்த உலக போட்டிகளில் பங்கேற்ற இவர் 1986ம் ஆண்டுக்கான கோப்பையை கைப்பற்றினார்.
கால்பந்து ஆடும்போது இவரின் வேகம், விவேகமாக இவர் எடுக்கும் முடிவுகள், நளினமான இவரின் ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. கால்பந்து உலகின் முடிசூடா மன்னரான பீலேவுக்கு நிகராக கருதப்பட்டார்.
ஓய்வுக்கு பிறகு பல்வேறு அணிக்கு பயிற்சியாளராக இருந்த இவர், போதை பழக்கத்துக்கு அடிமையாகி அதற்கான சிகிச்சையும் எடுத்துவந்தார். 60 வயதான மரடோனா 2 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பியூனஸ் அயர்சில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார்.
