தவான் அரைசதம் : மும்பை அணிக்கு 163 ரன்கள் இலக்கு

தவானின் நிதான அரைசதத்தால் டெல்லி அணி 162 ரன்கள் அடித்து மும்பை அணிக்கு 163 ரன்கள் இலக்காக வழங்கியது.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 27 வது லீக் ஆட்டம் அபு தாபியில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்கியது.மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.அதனை தொடர்ந்து டெல்லி அணி சார்பில் தொடக்க வீரர்களாக பிரித்திவி சா,தவான் தொடக்கம் தந்தனர்.பிரித்திவி சா 4 ரன்களில் ஏமாற்றம் அளிக்க,அடுத்து வந்த ரஹானே(15 ரன்கள்,15 பந்துகள்)குர்னால் பாண்டியா பந்தில் L B W ஆகி நடையைக்கட்டினார்.

தவானுடன் இணைந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நிலைத்து நின்று அதிரடியை வெளிப்படுத்த,13.2 ஓவர்களில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை கடந்தது.குர்னால் பாண்டியா வீசிய அடுத்த ஓவரில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்(42 ரன்கள்,37 பந்துகள்) ஒரு பௌண்டரி அடித்து அடுத்த பந்தே போல்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.மறுமுனையில் அதிரடி காட்டிய தவான் 39 பந்துகளில் 50 ரன்களை கடந்து இந்த தொடரில் முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

போல்ட் வீசிய 16 வது ஓவரில் ஸ்டொய்னிஸ் தொடர்ந்து 2 பௌண்டரிகளை ஓட விட, அடுத்து ராகுல் சகார் வீசிய ஓவரில் ஸ்டொய்னிஸ்(13 ரன்கள்,8 பந்துகள்)ரன் அவுட் ஆனார்.17 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து இருக்க,போல்ட் வீசிய 19 வது ஓவரில் தவான் ஒரு பௌண்டரி அடிக்க,டெல்லி அணி 150 ரன்களை கடந்தது.கடைசி ஓவர் போட்ட பும்ரா அந்த ஓவரில் 12 ரன்கள் விட்டுக்கொடுக்க டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 162 ரன்கள் அடித்து மும்பை அணிக்கு 163 ரன்கள் இலக்காக வழங்கியது.

டெல்லி அணியில் தவான் 69 ரன்களுடனும்,கேரி 14 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.

Exit mobile version