சின்ன தல ரெய்னாவுக்கு கிடைத்த நியாயம்..சொன்னதை செய்த கேப்டன்

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் உறவினர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக, சிஎஸ்கே அணியுடன் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற ரெய்னா திடீரென தொடரில் இருந்து விலகி தாயகம் திரும்பினார். இதற்கு, பஞ்சாபில் இருந்த ரெய்னாவின் மாமா குடும்பத்தார் மீது நள்ளிரவில் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதால் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ரெய்னா உறவினர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், எனது குடும்பத்திற்கு நேர்ந்த கொடுமைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என ரெய்னா தெரிவித்து இருந்தார். அதற்கு, பஞ்சாப் முதலமைச்சரும், நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் மாநிலம் விட்டு மாநிலம் சென்று கொள்ளையடிக்கும் கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்திருப்பதாக பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். பதான்கோட் ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த 3 பேரை போலீசார் கைது செய்துவிட்டதாக அமரீந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version