சென்னை அணி நிர்வாகம் மற்றும் தோனியுடன்ஏற்பட்ட மோதல் காரணமாகவே, சுரேஷ் ரெய்னா ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு வார கால பயிற்சியை முடித்துக் கொண்டு, நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பதற்காக சிஎஸ்கே அணி வீரர்கள் தனி விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றனர். ஆனால், திடீரென யாரும் எதிர்பாரத விதமாக தொடரில் இருந்து விலகுவதாக கூறி சுரேஷ் ரெய்னா நாடு திரும்பினார்.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் இருந்த அவரது மாமா கொள்ளையர்களால் அடித்துக் கொல்லப்பட்டதே, ரெய்னா நாடு திரும்பியதற்கு காரணமாக கூறபட்டது.
ஆனால், அவரது மாமா 19 – ம் தேதி இறந்த நிலையில் 21 – ம் தேதி சுரேஷ் ரெய்னா சி.எஸ்.கே அணியுடன் துபாய் சென்றடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ரெய்னா தொடரில் இருந்து விலகியது தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.
இந்நிலையில் தான் சி.எஸ்.கே அணி நிர்வாகிகள் மற்றும் கேப்டன் தோனியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் கருத்து மோதல் காரணமாகவே ரெய்னா சி.எஸ்.கே அணியிலிருந்து விலகி நாடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் மற்ற அணிகள் அனைத்தும் நேரடியாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்ற நிலையில் சென்னை அணி மட்டும் சென்னையில் ஒருவாரம் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் பயிற்சி முடிந்த பிறகே சி.எஸ்.கே அணி துபாய் சென்றது. அங்கு ஒரு வார காலம் வீரர்கள் தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர். அதன்பிறகு 28 – ம் தேதி கொரோனா பரிசோதனை செய்தபோது 13 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த ரெய்னா, “சென்னையில் ஒரு வாரம் தங்கி பயிற்சி மேற்கொண்டது தான் கொரோனா பிரச்னைக்குக் காரணம். சென்னையில் ஏன் கேம்ப் அமைத்தீர்கள் ” என்று அணிநிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு காசி விஸ்வநாதன், “இது தோனியின் முடிவு” என்று பதில் கூறியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் வீரர்கள் தனிமைப்படுத்துதலைச் சரியாக மேற்கொள்ளவில்லை எனவும், தோனிக்கு வழங்கியதை போன்று கொரோனா முன்னேச்சரிகையுடன் சகல வசதிகளுடன் கூடிய அறையை தனக்கும் ஒதுக்க கோரி அது சாத்தியமாகாத கோபமும் ரெய்னாவுக்கு இருந்துள்ளது.
இதையடுத்து தோனியிடம் சென்ற சுரேஷ் ரெய்னா வீரர்கள் செயல்பாடு குறித்தும், சென்னை கேம்ப் குறித்தும் கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த விவகாரத்தில் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின் முடிவில் தான் சுரேஷ் ரெய்னா போட்டித் தொடரிலிருந்து விலகி இந்தியாவுக்குத் திரும்பிவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அணி உரிமையாளர் ஸ்ரீனிவாசன் அவுட்லுக் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ரெய்னா சினிமா நாயகியை போன்று நடந்து கொண்டதாகவும், தோனிக்கு வழங்கியதை போன்று பால்கனியுடன் கூடிய அறையை கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தொடரில் பங்கேற்காவிட்டால் அவருக்கு தான் சம்பள பணம் ரூ.11 கோடி இழப்பு என்றும், சென்னையில் உள்ள இளம் வீரர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் எனவும் பதிலளித்ததாக கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 15 – ம் தேதி தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தபோது அவருடன் சேர்ந்து ஓய்வை அறிவித்தவர் சுரேஷ் ரெய்னா. இந்த நிலையில் தோனியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் சுரேஷ் ரெய்னா போட்டித் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இனி சுரேஷ் ரெய்னா சி.எஸ்.கே அணியுடன் விளையாடுவதும் சந்தேகம் தான் என்கிறார்கள்