பயிற்சியின்போது கணுக்காலில் ligament tear; 2026 சீசனின் மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகல்
இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரும் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா, கணுக்காலில் ஏற்பட்ட ligament காயம் காரணமாக 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க மாட்டார். மேலும், இந்த ஆண்டின் மீதமுள்ள போட்டிகளிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற Lausanne Diamond League போட்டிக்குப் பிறகு பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நீரஜ் சோப்ராவின் கணுக்காலில் ligament tear ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தனது மருத்துவர் மற்றும் அணியினருடன் ஆலோசனை நடத்திய அவர், காயத்திலிருந்து முழுமையாக மீள்வதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் 2026 சீசனின் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியை தவறவிடுகிறார்
ஜப்பானின் Aichi-Nagoya நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா இந்தியாவின் முக்கிய பதக்க நம்பிக்கையாக இருந்தார்.
தற்போதைய காயம் காரணமாக அந்தப் போட்டியில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியுடன், செப்டம்பர் 5-ஆம் தேதி பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் Diamond League Final போட்டியையும் நீரஜ் தவறவிடுகிறார்.
மேலும் செப்டம்பர் 11 முதல் 13 வரை புடாபெஸ்டில் நடைபெறவுள்ள World Athletics Ultimate Championship போட்டியிலும் அவர் பங்கேற்க மாட்டார்.
Lausanne-ல் சீசனின் சிறந்த செயல்பாடு
2026 சீசனில் காயத்துக்குப் பிறகு மீண்டும் போட்டிகளுக்குத் திரும்பிய நீரஜ் சோப்ரா, சமீபத்திய Lausanne Diamond League போட்டியில் 88.05 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இந்த சீசனின் தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்திருந்தார்.
இதனால் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முன்பாக அவர் மீண்டும் சிறந்த form-க்கு திரும்பி வருவதாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் Lausanne போட்டிக்குப் பிறகு பயிற்சியின்போது ஏற்பட்ட புதிய கணுக்கால் காயம் அவரது 2026 சீசனை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
“மீண்டு வலிமையாகத் திரும்புவதே இலக்கு”
காயம் குறித்து சமூக வலைதளத்தில் அறிவித்த நீரஜ் சோப்ரா, கடின உழைப்புக்குப் பிறகு தான் எதிர்பார்த்த momentum கிடைக்கத் தொடங்கியிருந்த நிலையில் இந்தக் காயம் ஏற்பட்டது ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
தற்போது காயத்திலிருந்து முழுமையாக மீண்டு, மீண்டும் வலிமையாக போட்டிகளுக்குத் திரும்புவதிலேயே தனது கவனம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நீரஜ் சோப்ராவின் விலகல், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய தடகள அணியின் பதக்க வாய்ப்புக்கு குறிப்பிடத்தக்க பின்னடைவாக அமைந்துள்ளது.
