“நான் செய்த இரண்டு தவறுகள்” – மனம் திறந்த பிரபல கிரிக்கெட் நடுவர்…

பொதுவாக விளையாட்டு துறையை பொருத்த வரை வீரர்கள், ரசிகர்களை கவர்வது வாடிக்கையான ஒன்று, அதிலும் கிரிக்கெட், பேட்ஸ்மேன்களுக்கும் பவுலர்களுக்குமான யுத்தம், அதில் நடுவர்களின் பங்கு மிக முக்கியமான ஒன்று. வீரர்களுக்கு இணையாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடுவர்கள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சிலரே, அதில் ஸ்டீவ் பக்னர் மிக முக்கியமான ஒருவர்.தொடர்ச்சியாக 5 உலக கோப்பை இறுதிப் போட்டிகளில் நடுவராக பணியாற்றிய சாதனைக்கு சொந்தகாரரான ஸ்டீவ் பக்னர், அவரது இரண்டு தவறான தீர்ப்புகள் குறித்து மனம் திறந்துள்ளார்.

ஹர்பஜன் சிங் – சைமன்ட்ஸ் மோதல், தவறான தீர்ப்புகள் என பல்வேறு மாறுபட்ட காரணங்களுக்காக இந்த நூற்றாண்டின் பிரபலமான ஒரு டெஸ்ட் போட்டி என்றால் அது 2008ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான டெஸ்ட் போட்டி தான்.
அந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைய தனது தவறான தீர்ப்புகள் கூட ஒரு காரணம்தான் என்று கூறியுள்ளார் பக்னர்.
இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில் ” 2008 சிட்னி டெஸ்ட் போட்டியில் நான் இரண்டு தவறான தீர்ப்புகளை வழங்கிவிட்டேன், முதல் தீர்ப்பு இந்திய அணி நன்றாக விளையாடி கொண்டிருக்கையில், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் சதம் அடிப்பதற்கு காரணமாக அமைந்து விட்டது” என்று ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

135 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் இஷாந்த் சர்மா வீசிய பந்து சைமன்ட்ஸ் பேட்டில் இன்சைட் எட்ஜ்ஜாகி கேட்ச்சானது, அதை தவறுதலாக நாட் அவுட்டாக அறிவித்தார் பக்னர், அதன் விளைவாக தொடர்ந்து ஆடிய சைமன்ட்ஸ் 162 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியை சரிவிலிருந்து மீட்டதோடு ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

தனது இரண்டாவது தீர்ப்பு குறித்து கூறுகையில் “ஆட்டத்தின் கடைசி நாளில் நான் வழங்கிய அந்த தீர்ப்பால் இந்திய அணி தோல்வியை தழுவியதாக நினைக்கிறேன், ஐந்து நாட்களுக்குள் இரண்டு தவறான தீர்ப்புகள் வழங்கிய முதல் நடுவர் நானாகத்தான் இருக்ககூடும், அந்த உறுத்தல் இன்றளவும் உள்ளது” என்றார்.


கடைசி நாளில் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு வெற்றியை நோக்கி பயணிக்க காரணமாக அமைந்தது சச்சின் – டிராவிட்டின் 61 ரன்கள் பார்ட்னர்ஷிப்தான், இருவரும் பொறுப்புடன் விளையாடி வந்த நிலையில் , சைமன்ட்ஸ் பந்து வீச்சில் பக்னரின் தவறான தீர்ப்பால் டிராவிட் வெளியேற நேர்ந்தது.

“தவறுக்கான காரணத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும், வேண்டுமென்றே யாரும் தவறு செய்வதில்லை, நான் என் தவறுகளை நியாயப்படுத்தவில்லை, சில நேரங்களில் காற்று பலமாக வீசும்போது துல்லியமான ஒலிகள் கேட்பதில்லை, வர்ணனையாளர்களுக்கு ஸ்டம்ப்பில் பொருத்தப்பட்டுள்ள மைக் மூலம் அனைத்து ஒலிகளும் நன்றாக கேட்கும், நடுவர்களுக்கு அந்த வாய்ப்புகள் இல்லை என்பது ரசிகர்களுக்கு தெரிவதில்லை ” இவ்வாறு தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ஸ்டீவ் பக்னர்.

Exit mobile version