எதிர்பார்க்காத வாய்ப்பு இது, இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடுவேன் : தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் டி20 அணியில் இடம் பெற்றுள்ள வருண் சக்கரவர்த்தி, இந்திய அணிக்கு தேர்வானதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும், இது முற்றிலும் எதிர்பார்க்காத வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
varun chakravarthy

நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடர் முடிந்தவுடன், அடுத்த மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. அதில், டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள் நடைபெற உள்ளது. அதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் தற்போது ஐ.பி.எல்.-ல் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, இந்திய டி20 அணியில் விளையாட தேர்வாகியுள்ளார்.

இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது பற்றி வருண் சக்கரவர்த்தி கூறும்போது, இது எனக்குக் கிடைத்த பெரிய விஷயம், இதுப்பற்றி சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை.  இதை நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம் முடிந்தப்பிறகு தான், இந்திய அணிக்கு தேர்வான விஷயம் எனக்குத் தெரிந்தது. இதை என்னால் நம்பாமல் இருக்கமுடியவில்லை. நான் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடுவேன் என்றும், என் மீது நம்பிக்கை வைத்து, என்னை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவினருக்கு நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version