14வது ஆண்டாக தொடரும் சோகம்… ஐபிஎல் கோப்பையை வெல்லாமலே கேப்டன் பதவியை துறக்கும் கோலி!!

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் புள்ளி பட்டியலில் 3-வது, 4-வது இடங்களை பிடித்த அணிகளான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக படிக்கல்லும், விராட் கோலியும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். படிக்கல் 21 ரன்னில் வெளியேறினார். பரத் 9 ரன்னில் வெளியேற அந்த அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. நிதானமாக விளையாடிய கோலி 39 ரன்களில் சுனில் நரேனிடம் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த டி வில்லியர்ஸ்சும் 11 ரன்னில் வெளியேற, பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ள மேக்ஸ்வெல் இம்முறை தனது அதிரடியை காண்பிக்கவில்லை. அவரும் 15 ரன்னில் நரின் பந்துவீச்சில் வெளியேற பெங்களூரு அணி இறுதியில் தடுமாறியது. இறுதியில் அந்த அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புற்கு138 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இதையடுத்து, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. ஷுப்மான் கில் 29 ரன்னும், வெங்கடேஷ் அய்யர் 26 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். ராகுல் திரிபாதி 6 ரன், நிதிஷ் ராணா 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சுனில் நரைன் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். தினேஷ் கார்த்திக் 10 ரன்னில் வெளியேறினார்.இறுதியில், கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேறியது.

கேப்டன் விராட் கோலியின் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கடைசி ஐபிஎல் தொடர் இது என்பதால், அவரது அணி வெற்றி பெற வேண்டும் என்று பெங்களூரு அணி ரசிகர்கள் மட்டுமல்லாது பிற அணி ரசிகர்களும் ஆவலோடு காத்திருந்தனர் அந்த ஆசை நிராசையானது.

Exit mobile version