மொத்த பரிசுத்தொகை 108 மில்லியன் டாலர்; ஒற்றையர் சாம்பியன்களுக்கு தலா 5.5 மில்லியன் டாலர்
டென்னிஸ் உலகின் நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான US Open தொடரின் பிரதான சுற்று ஆகஸ்ட் 30-ஆம் தேதி நியூயார்க்கில் தொடங்குகிறது. இந்த ஆண்டு வீரர்களுக்கான மொத்த பரிசுத்தொகை மற்றும் இழப்பீடு 108 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் உள்ள USTA Billie Jean King National Tennis Center-ல் நடைபெறும் இந்தத் தொடரின் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரதான சுற்றுப் போட்டிகள் ஆகஸ்ட் 30-ஆம் தேதி தொடங்குகின்றன. இந்த ஆண்டுக்கான US Open தொடரில் வீரர்களுக்கு வழங்கப்படும் மொத்த தொகை 108 மில்லியன் அமெரிக்க டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது டென்னிஸ் வரலாற்றில் மிகப்பெரிய பரிசுத்தொகை தொகுப்பாகும்.
ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர்களுக்கு தலா 5.5 மில்லியன் டாலர் வழங்கப்பட உள்ளது. இறுதிப்போட்டியில் தோல்வியடையும் வீரர்களுக்கு தலா 2.8 மில்லியன் டாலரும், அரையிறுதிக்கு முன்னேறும் வீரர்களுக்கு தலா 1.45 மில்லியன் டாலரும் வழங்கப்படுகிறது.ஆடவர் மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வெல்லும் ஜோடிக்கு 1 மில்லியன் டாலர் வழங்கப்பட உள்ளது. கலப்பு இரட்டையர் சாம்பியன் ஜோடிக்கும் 1 மில்லியன் டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
US Open தொடர்பான Fan Week மற்றும் தகுதிச்சுற்றுப் போட்டிகள் ஏற்கெனவே நடைபெற்று வரும் நிலையில், உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் பிரதான ஒற்றையர் சுற்று ஆகஸ்ட் 30 முதல் தொடங்குகிறது. செப்டம்பர் 13-ஆம் தேதி வரை US Open தொடர் நடைபெற உள்ளது.
