விஹாரி, அஸ்வின் நிதான ஆட்டம் : இந்தியா-ஆஸ்திரேலியா 3 வது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்தது

விஹாரி மற்றும் அஸ்வினின் நிதான ஆட்டத்தால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்தது.

சிட்னி:

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. விராட் கோலி தலைமையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்தது. இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதன்பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் கடந்த 7 ம் தேதி தொடங்கியது. முதலில் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 131 ரன்கள் எடுத்து இருந்தார்.அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

Read more – இந்தியாவில் பெண் விமானிகள் புது சாதனை : முற்றிலும் பெண்கள் மட்டுமே இயக்கிய நீண்ட தூர விமானம் பெங்களூரில் வெற்றிகரமாக தரையிறங்கியது

ஆஸ்திரேலியா அணி 2 வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 312 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக க்ரீன் 84 ரன்னும், ஸ்மித் 81 ரன்னும், லபுசேன் 73 ரன்கள் எடுத்தனர். 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர்.

நேற்று 4 வது நாள் ஆட்ட நேர முடிவில் முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்து இருந்தனர். சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா அரை சதம் கடந்து அவுட் ஆக , கேப்டன் ரஹானே 4 ரன்களில் வெளியேறினார். புஜாராவுடன் இணைந்த ரிஷப் பண்ட் அதிரடியை வெளிப்படுத்தினார். சதம் அடிப்பார்
என்று எதிர்பார்க்கப்பட்ட பண்ட் 97 ரன்களில் வெளியேற, புஜாரா 77 ரன்களில் கிளீன் போல்ட் ஆகி நடையைக்கட்டினார். பொறுப்புடன் விளையாடி விஹாரி மற்றும் அஸ்வின் இந்திய அணியை தோல்வியில் இருந்து மீட்டு 3 வது டெஸ்ட் போட்டியை ட்ரா செய்தனர்.

விஹாரி 161 பந்துகளில் 23 ரன்களுடனும், அஸ்வின் 128 பந்துகளில் 39 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.

இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கான 3 வது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்த நிலையில் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 4 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகின்ற 15 ம் தேதி பிரிஸ்பேனில் நடக்கிறது.

Exit mobile version