1970களில் நம்பிக்கையை மட்டும் மூலதனமாக வைத்து சென்னைக்கு பிழைக்க வந்த சரவணா ஸ்டோர்ஸ் செல்வரத்தினம், இன்றைக்கு தனது உழைப்பால் இந்தியாவின் பெரும்பணக்காரர்களுள் ஒருவராக உயர்ந்து இருக்கிறார்.
அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்திலும் இப்போதைய தூத்துக்குடி மாவட்டத்திலும் இருக்கிறது, பணிக்கர் குடியிருப்பு என்ற கிராமம். இந்தக் கிராமத்தில் விவசாயம்தான் முக்கியத் தொழில். அப்பகுதியை சேர்ந்த சரவணனின் மகன்களான செல்வரத்தினம், ராஜரத்தினம், யோகரத்தினம் ஆகியோர் விவசாயம் பார்த்து வந்தனர். அத்துடன், ஓர் அரிசி ஆலையையும் நடத்தி வந்தனர். அந்தச் சமயத்தில், செல்வ ரத்தினத்துக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது. 1970ம் ஆண்டு சென்னைக்குச் சென்று மளிகைக் கடை வைக்க வேண்டும் என்று திட்டமிட்டார். அதற்காகத் தன்னுடைய சேமிப்பை எடுத்துக்கொண்டு சென்னைக்கு ரயில் ஏறினார்.
மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கிய அவர், தனது உறவினர் பார்க்கச் சொன்ன சுந்தரம் காபி உரிமையாளர் சோமசுந்தரத்தை தேடிச் சென்றார். அவரிடம், ‘”மளிகைக் கடை வைக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்” என்று கேட்டார். அதற்கு சோமசுந்தரம், “மளிகைக் கடை வைத்தால் அது இந்தப் பகுதியில் இப்போதைக்கு எடுபடாது. எல்லோரும் கொத்தவால் சாவடி போய் அங்குதான் மளிகைப் பொருள்கள் வாங்குகிறார்கள். ரங்கநாதன் தெருவில் கும்பகோணம் பாத்திரக்கடை இருக்கிறது. அதை நடத்துகிறவர், கடை மற்றும் கட்டடத்தை அப்படியே விலைக்குக் கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறார். நீங்கள் வேண்டுமானால், அதை வாங்கிப் பாத்திர வியாபாரம் செய்யுங்கள். நன்றாகப் போகும்” என்று அறிவுறுத்தினார்.
சோமசுந்தரத்தின் யோசனைப்படி கும்பகோணம் பாத்திரக் கடையைக் கட்டடத்தோடு சேர்த்து தனபாலிடமிருந்து செல்வரத்தினம் விலைக்கு வாங்கினார். 1970 செப்டம்பர் 4-ம் தேதி பாத்திரக்கடையாக மட்டுமே சரவணா ஸ்டோர்ஸ் தொடங்கப்பட்டது. இந்தப் பாத்திரக் கடைதான் இன்றைக்கு சரவணா ஸ்டோர்ஸ் ஆக உருவாகி இருக்கிறது.
ரங்கநாதன் தெரு 1970-க்குப் பிறகுதான் கொஞ்சம்கொஞ்சமாக முகம் மாறத் தொடங்கியது. அதுவரை ஓட்டுவீடுகளுமாய், கொல்லைப்புறத்தில் தென்னை மரங்களுமாய், மாட்டுத் தொழுவங்களுமாய் இருந்த வீடுகளின் பகுதிகள் எல்லாம் கடைகளுக்காக வாடகைக்கு விடப்பட்டன. வீடுகளின் முதல் மாடியில் வீட்டு உரிமையாளர்கள் வசிக்கத் தொடங்கினர். மாம்பலம் ரயில் நிலையத்துக்கு அருகே ஹோட்டல், மளிகைக் கடை, பாத்திரக் கடை என்று ஒரு கதம்பக் கடைத்தெரு உருமாறத் தொடங்கியது.
இதுதவிர, தெரு முழுவதும் பிளாட்ஃபாரத்தில் காய்கறிக் கடைகள், பழக்கடைகள் இருந்தன. வெளியூர்களில் இருந்து ரயிலில் காலையில் கொண்டுவரப்படும் காய்கறிகள்… விலை மலிவாக ரங்கநாதன் தெருவில் விற்கப்பட்டன. ரயில் நிலையத்தில் இருந்து இறங்கிச் செல்வோர், வேலை முடிந்து ரயில் நிலையத்துக்கு வருவோர்களைக் குறிவைத்துத்தான் ரங்கநாதன் தெருவில் காய்கறிக் கடைகள் முளைத்தன.
கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த சரவணா ஸ்டோர்ஸ், 1988ல் வீட்டுக்குத் தேவையான எல்லா பொருட்களும், ஒரே இடத்தில் கிடைக்கும் மல்டி ஷாப்பிங் தளமாக மாற்ற முடிவு செய்தனர் இதற்காக 1 லட்சம் சதுர அடியில் ஐந்து மாடிகட்டிடமாக பிரமாண்ட சரவணா ஸ்டோர்ஸ் உருவானது.
மக்களின் தேவை, சந்தையின் போக்கு எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து சிறு, சிறு மாற்றங்களையும் விட்டுவிடாமல் செயல்படுத்தி மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்ததுதான் இத்தகைய வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் காரணம். இதனால் எண் 45, ரங்கநாதன் தெரு என்ற முகவரி என்றால் இந்தியா முழுவதும் அது சரவணா ஸ்டோர்ஸ் என்று தெரியும் அளவுக்கு அடையாளத்தைப் பெற்றுள்ளனர்.
சென்னையில் அப்போதெல்லாம் நிறைய இடங்களில் பஸ் ஸ்டாண்ட் இல்லாமல் இருந்தபோது, தி.நகரில் பஸ்டாண்டும், மாம்பலம் ஸ்டேசனும் இருந்தது. இது தான் ரங்கநாதன் தெரு முக்கிய வர்த்தக தளமாக உருவெடுக்க முக்கிய காரணமாக அமைந்தன. காலையில் 9 மணிக்கு கடை திறக்க, ஏழு மணிக்கெல்லாமே மக்கள் கூட்டம் கடை முன் காத்துக்கொண்டிருக்கும். அப்படி இருந்தது ரங்கநாதன் தெரு. அதன்பிறகு சென்னை விரிவடைந்துகொண்டே இருக்க, சரவணா ஸ்டோர்ஸ் கடையும் அதற்கேற்ப விரிவடைந்தது.
நிறைய பிராண்டுகள், நிறைய நிறுவனங்கள் இந்த தொழிலுக்குள் வர ஆரம்பித்தன. ஆனால், அத்தனை போட்டிகளையும் தாண்டி சென்னையின் எல்லா பிரதான இடங்களிலும் சரவணா ஸ்டோர்ஸ கால்பதித்தது. பெரிய அளவில் அப்போதெல்லாம் விளம்பரமெல்லாம் இல்லை. டிவியிலும் பெரிதாக விளம்பரங்கள் கொடுத்ததில்லை. எல்லாமே செவி வழிசெய்தி மூலம் வளர்ந்ததுதான். இப்போது சரவணா ஸ்டோர்ஸில் கருப்பட்டி முதல் கம்ப்யூட்டர் வரை கிடைக்கும்.
குடும்ப சகிதமாக வந்து கல்யாணம், சுப நிகழ்ச்சிகளூக்கு ஒரே இடத்தில் வந்தது சரவணாவில்தான். இந்த கான்செப்ட் வேறு எங்கும் இல்லை. இந்த வர்த்தக யுத்தியை, ஸ்பேஸ் மேனேஜ்மென்ட் அதாவது பொருட்களைக் காட்சிப்படுத்தும் விதம் உள்ளிட்டவற்றை பல பன்னாட்டுநிறுவனங்கள் ஆய்வு செய்து கற்றுக்கொண்டு பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் மக்களையும் அவர்களுடைய வாங்கும் திறனையும் சரவணா ஸ்டோர்ஸ் புரிந்துகொண்டதுதான்.
2000-ம் ஆண்டுக்கு முன்புவரை, குறைந்த வருமானம், நடுத்தர வருமானம் ஈட்டும் மக்களுக்கான பொருட்களை வழங்குவது தான் அந்நிறுவனத்தின் நோக்கமாக இருந்தது. வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளைத் திருப்திகரமாக அவர்களிடம் இருக்கும் பணத்துக்கு ஏற்ப பொருட்களை வாங்கும் இடமாக சரவணா ஸ்டோர்ஸ் இருந்து வருவது மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. மக்களின் பேராதரவால் தொடர்ந்து தரத்தில் சமரசம் செய்யாமல் பட்ஜெட்டுக்கு ஏற்ப பொருட்களை வழங்கி வருகிறது.
2000-க்குப் பிறகு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. வருமானம் பெருகியது. பல நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் நுழைந்தன. மக்களின் டேஸ்ட்டும் ட்ரெண்டும் மாறத் தொடங்கியது. அதற்கேற்ப சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனமும் அப்டேட் ஆனது. காலத்துக்கு ஏற்ப மக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு தொடர்ச்சியாக மாற்றங்களைப் புகுத்திக்கொண்டே இருக்கிறது.
அதே போல், மக்கள்நெரிசல் அதிகமுள்ள குரோம்பேட்டை, பாடி உளிளிட்ட இடங்களில் சரவணா ஸ்டோர்ஸ் கிளைகள் பல்கி பெருகி வருகின்றன. திருமணத்திற்கான ஆடைகள் வாங்கும் அதே இடத்தில் நகைகளும், சீர்வரிசை பாத்திரங்களும் கொண்டு வந்ததில் இருக்கிறது, சரவணா ஸ்டோர்ஸின் வெற்றியாக சூட்சுமம்.
ஒரு கடையாகத் தொடங்கி இன்று பல கிளைகளுடன் ஆலமரமாக வளர்ந்திருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் வளர்ச்சிக்கு அண்ணாச்சியின் சகோதரர்கள் யோகரத்தினம், செல்வரத்தினம் இருவருமே பக்கபலமாக இருந்திருக்கிறார்கள் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று.
பக்கவாதம் காரணத்தால் செல்வரத்தினம் மரணமடைந்தார். இவர் இறந்த பிறகு, பிள்ளைகளுக்குள் பிரிவு வந்தது. யோகரத்தினம் மற்றும் ராஜரத்தினம் அவர்களுடைய பிள்ளைகள் நடத்துவது தான் சரவணா ஸ்டோர்ஸ்.
செல்வரத்தினம் அவருடைய மகன் சரவணன் அருள் தனது தங்கை கணவருடன் இணைந்து நடத்தி வரும் கடைகள் தான் சரவணா செல்வரத்தினம். இதை இவர் நாடு முழுக்க பல முன்னணி நகரங்களில் கிளைகள் பரப்பி பெரிதாக்க பெரும் முயற்சி செய்து வருகிறார். அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
விளம்பரங்களில் பிரம்மாண்டம் காட்டிய அருள் அடுத்து இரட்டை இயக்குநர்களான ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இன்றைக்கு நவீன ரங்கநாதன் தெரு, கலர்கலர் பல்புகள் மின்னும் பல அடுக்கு சென்னை தி.நகரை உருவாக்கியதில் இவர்களுக்கும் பங்கு உண்டு.
ஆன்லைன் வர்த்தகத்திலும், சில்லறை வர்த்தகத்தில் யார் வேண்டுமானாலும் வரட்டுமே ஒருகை பார்த்துவிட தயாராகவே இருக்கிறது இந்த அண்ணாச்சியின் கடை.