தொப்பி வாப்பா பிரியாணி கடை – பெயரை கேட்டாவே சும்மா அதிருதில்ல…

வித்தியாசமான அறிவிப்புகளை வெளியிடும் தொப்பி வாப்பா பிரியாணி கடையின் இந்த அறிவிப்பும் பேச வைத்துள்ளது.

வித்தியாசமான முயற்சிக்கு கிடைக்கும் அங்கீகாரம்

கடந்த ஆண்டு அக்டோபர் 16ந் தேதி உலக உணவு தினத்தை முன்னிட்டு, 5 பைசா நாணயத்துக்கு பிரியாணி கொடுத்து அசத்தினர். ஆஃபர்களை அளிக்கும் உணவு நிறுவனங்களுக்கு மத்தியில், பழைய செல்லாத 5 பைசா நாணயத்திற்கு பிரியாணி அளித்தனர். அதற்காக ஊரே 5 பைசாவை தேடிய சுவாரஸ்யங்களும் நிகழ்ந்தன.

இது போன்ற வித்தியாசமான விளம்பரம் செய்வது முதல் முறையல்ல. இதற்கு முன்பு சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவிய போது, பிரியாணி வாங்கினால், ஒரு தண்ணீர் கேன் இலவசம் என நடைமுறைப்படுத்தியதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கடந்த ஜனவரி 6ந் தேதி உலக வேட்டி தினத்தை முன்னிட்டு 12 மணிக்கு வேட்டிக் கட்டி வரும் முதல் 50 நபர்களுக்கு ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என அறிவித்திருந்தது.கை நெசவாளர்களுக்கு உதவும் விதமாக பக்கெட் பிரியாணி ஒன்று வாங்கினால் வேட்டி இலவசம் எனவும் அறிவித்தனர்.

அதே போல, பிப்ரவரி 21 – உலக தாய்மொழிகள் தினத்தன்று தமிழில் பெயர் உள்ளவர்களுக்கும், குழந்தைக்கு தமிழில் பெயர் வைத்த பெற்றோர்களை கவுரவிக்கும் விதமாகவும் குடும்பத்துக்கு பிரியாணி விருந்து வைத்தனர்.

கடந்த டிசம்பர் இறுதியில்  கிலோ வெங்காயம் 150 ரூபாய்க்கு விற்ற போது, தொப்பி வாப்பா பிரியாணி கடை வெங்காயத்தை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய காவலாளி தேவை என்று வித்தியாசமான முறையில் விளம்பரம் வெளியிட்டது.

பிரியாணி அண்டாவை பாதுகாக்க ஹல்பர் தேவை என்றும், பாக்ஸிங் தெரிந்த சப்ளையர் தேவை என்றும் இவர்கள் விளம்பரப்படுத்தியது அனைவரையும் ரசிக்க வைத்தது.

இதே போல், நாள்தோறும் எகிறும் பெட்ரோல் விலை தொடர்பான இவர்களது விளம்பரம் பெரிதும் பேசப்பட்டது. பிரியாணி வாங்குங்க, பெட்ரோல் போடுங்க என்ற விளம்பரம் பேசுபொருளானதுடன், பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.

இது போன்று மனதை கவரும் விளம்பரத்தால், தொப்பி வாப்பா விளம்பரமும், அறிவிப்பும் இணையத்தில் வைரலாவது தொடர் கதையாகி வருகிறது.

புதிய முயற்சி

தொப்பி வாப்பா பிரியாணி உணவகத்தின் 9வது கிளை சென்னை தியாகராஜ நகர் பேருந்து நிலையம் எதிரில் கிருஷ்ணவேணி திரையரங்கம் வளாகத்தில், இன்று காலை 11.30 மணிக்கு தொடங்குகின்றனர். இந்த முறை திறப்பு விழாவிலும் வித்தியாசத்தை கடைப்பிடித்துள்ளனர். கொரோனா காலத்திலும் எந்த பெரிய அங்கீகாரமும் இல்லாமல், நமக்காக உழைக்கும் தூய்மை பணியாளர்களால் புதிய கிளையை திறக்க உள்ளனர். தூய்மைப் பணியாளர்களுக்கு சரியான அங்கீகாரம் தர வேண்டும் என்ற  எண்ணத்தை  ஏற்படுத்தவே இந்த முயற்சி என்கின்றனர், தொப்பி வாப்பா நிர்வாகத்தினர்.

இவர்கள் கொரோனா காலத்தில் ஆதரவற்றவர்களுக்கு உணவு தருவது, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற பல சமூக செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

யார் இவர்கள் – ஸ்டார்ட் அப் நாயகர்களின் அசுர வளர்ச்சி!

சின்ன பிளாஷ்பேக் !

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை மடிப்பாக்கத்தில், தொப்பி வாப்பா பிரியாணி கடை ரொம்ப பிரபலம். கார்த்தி, முக்தா, புவனேஷ், அஷ்ரப், ராஜசேகரன், விமல் என்று பொறியியல் பட்டதாரிகள் இணைந்து இந்த பிரியாணி கடையை ஆரம்பித்தார்கள். இன்ஜினியரிங் படித்த இந்த இளைஞர்கள் பிரியாணி பிசினஸூக்குள் நுழைந்த கதை ரொம்பவே சுவாரஸ்யமானது.

“நாங்க எல்லோரும் படிச்சு முடிச்சு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலைல இருந்தோம். சமூகப் பிரச்னைகளுக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடக்கறப்போ அதில கலந்துகிட்டு நாங்க எல்லோரும் எங்களுக்குள் அறிமுகமானோம். எங்களால் ஆன சேவைகளையும் சமூகத்துக்கு செய்துகிட்டிருக்கோம். போராட்டங்களுக்குப் போறப்போ  நாங்க அதிகமாக கஷ்டப்பட்டது உணவுக்காக தான். காசு கம்மியா இருந்தாக்கூட எல்லோரும் சேர்ந்து தான் சாப்பிடுவோம்.

“சரி நாம ஏன், நம்ம பசங்கள வச்சு ஒரு ஸ்டார்ட் அப் மாதிரி ஒரு உணவுக்கடை வைக்கக்கூடாது?”ன்னு அப்போ தான் யோசனை வந்துச்சு.

அதோட எங்களுக்கு இன்னும் ரெண்டு விசயங்களும் தோணுச்சு. ஒண்ணு எங்களைப் போல போராட்டத்தில் ஈடுபடுகிற நண்பர்களுக்கும், உணவுப் பிரச்னை வராமப்  பண்ணணும். இரண்டாவது பசின்னு வர்றவங்களுக்கு நம்மலால முடிஞ்ச அளவுக்கு உணவு கொடுத்து உதவணும்.

உதவிகள் செய்யறது ஒரு பக்கம் இருந்தாலும், எங்களோட பொருளாதாரத்தை மேம்படுத்த இதை ஒரு பிராப்பர் உணவகமா நடத்தணும் அதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சோம்.

அப்போ தான் ஒரு செய்தி வந்தது. 3000 துப்புரவுப் பணியாளர்களுக்கு காலியிடம் இருந்தது. அதற்கு அதிகம் விண்ணப்பித்தது பொறியியல் பட்டதாரிகள் தான். கிளார்க் பணிக்கு 9000 காலியிடங்களுக்கு 20 லட்சத்துக்கும் மேலானோர் விண்ணப்பிச்சிருந்தாங்க. ஆக, இப்போ இருக்கிற இளைஞர்களுக்கு வேலை இல்லைன்னு தெளிவா தெரிஞ்சிது”. சரி பி.ஏ, எம்.இ, எம்பிஏ பட்டதாரிகள் சேர்ந்து நாம ஏன் ஒரு பிசினஸ் ஆரம்பிக்கக் கூடாது? இது மூலமா நிறைய பேருக்கு வேலை குடுக்கலாம்னு யோசிச்சோம். மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கும் இதுல பங்கு உண்டு. தவிர, இன்னொரு முக்கியமான விசயம் பி.இ படிச்சவன், எந்த வேலைனாலும் செய்வான்ற ஒரு பெரிய டெம்ப்ளேட் இருக்கு. காரணம் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவங்க தான் இந்த வேலை செய்யணுங்கிற சமுதாயக் கட்டமைப்பை உடைச்சது பி.இ முடிச்சவங்க தான். சமைக்கிறதும் அவன் தான், சப்ளை செய்யறதும் அவன் தான் அப்படிங்கிறப்போ நம்ம பையன் ஒருத்தன், சமைக்கிறான்டான்னு ஒரு பெருமை இருக்கும். இது மூலமா அப்படியே மார்க்கெட்டிங்கும் ஆச்சு. ஆனா மார்க்கெட்டிங்குக்கு இன்னொரு முக்கியமான விசயம் அந்த புரொடக்டோட பிராண்ட் நேம்!

“கடைக்கு என்ன பேரு வைக்கலாம்?ன்னு தீவிரமா யோசிச்சோம். அப்படி உருவானது தான் “தொப்பி வாப்பா பிரியாணி. நாங்க எல்லோரும் கடலோர மாவட்டத்தை சேர்ந்தவங்க. எங்க ஊருல இஸ்லாமியர்கள் மட்டுமில்லாமல் , எல்லோருமே தங்களோட அப்பாவ “வாப்பான்னு” தான் கூப்பிடுவாங்க. அங்கிருந்து வந்தது தான் வாப்பா. இதோட சேர்த்து இன்னொரு வார்த்தை வைக்கணும். அதுவும் டிரெண்டியா இருந்தா நல்லா இருக்குமேனு முண்டாசு, தலைப்பாகைக்குப் பதிலா, பெரியப் பெரிய ஹோட்டல்களில் செஃப்கள் உபயோகிக்கிற தொப்பிங்கிற பெயரையும் சேர்த்து தொப்பி வாப்பான்னு வச்சோம். பிராண்ட் நேமுக்கு ஏத்த மாதிரி லோகோவும் கேச்சியா இருக்கணும்னு முடிவு பண்ணினோம். நம்ம மண்ணுக்கு ஏத்த மாதிரி தொப்பியோட வாப்பாவ வரைஞ்சோம். தவிர, சமையல் உபகரணங்களையும் இணைச்சுக்கிட்டோம். இப்படி தான் எங்க பிராண்டுக்கான லோகோவும் ரெடியாச்சு. இந்த கடையை ஆரம்பிக்கலாம்னு முடிவெடுத்த அன்னிக்கு சாப்பிடக்கூட எங்ககிட்ட காசு இல்ல. பேரு ரெடி! வேலை செய்ய ஆட்களும் ரெடி! ஆனா பணத்துக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சோம். பல்வேறு போராட்டங்களுக்கு போய் வந்த எங்களுக்கு நிறைய அனுபவங்கள் மட்டுமல்ல. நிறைய நல்ல மனிதர்களோட நட்பும் கிடைச்சுது. கடை ஆரம்பிக்கிற விவரங்களை எங்கள வாட்ஸ் அப் குரூப்பில போட்டோம். அதை பார்த்ததும், அருண், சோழன், வில்லியப்பன், மஞ்சுநாத் செல்வா, சுனில், ப்ரக்ஷித்னு பலரும் எங்களுக்கு பண உதவி பண்ணாங்க. இவர்களை தவிர நிறைய நண்பர்களுக்கு உதவ முன் வந்தாங்க.

உமர், தொப்பி வாப்பா பிரியாணி கடை

அவங்க ஒவ்வொருத்தரும், ஒவ்வொரு துறையை சேர்ந்தவங்க. அவங்களும் இதுக்கு நிறைய ஐடியா கொடுத்ததோட டீமையும் அழகாக வழி நடத்தினாங்க. தொப்பி வாப்பாவோட முக்கிய இலக்கு எங்களை மாதிரி நிறைய பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கணுங்கிறது தான். ஒரு இளைஞன் எந்த தளத்திலயும் அவனோட திறமையை காட்டினால், அவனுக்கு தொப்பி வாப்பா கடை என்றும் துணை நிற்கும். ஸ்டார்ட் அப்  தானேன்னு முயற்சியை போடாமல் இருந்திடாதீங்க. முயற்சிக்கு பலன் நிச்சயம் கிடைக்கும். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் என தன் அனுபவத்தையும் பகிர்ந்தார் உமர்.

ஸ்டார்ட் அப் இப்போது பல கிளைகளாக வளர்ந்து நிற்கிறது. முடிவு செய்த படி பிறகுக்கு தொண்டு செய்வதும் தொடர்ந்து வருகிறது. நண்பர்களின் கூட்டு முயற்சியின் பயனாகவும், விடா முயற்சியின் பலனாலும் அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறார்கள்.

விவசாயம் எப்படி ஒரு நாட்டின் முதுகெலும்போ, அதே போல, ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாய் இருப்பவர்கள் இவர்களை போன்ற துடிப்பான இளைஞர்கள் தான். தானும் முன்னேறி, முன்னேற துடிப்பவர்களையும் கை தூக்கி, முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் தொப்பி வாப்பா கடை நிர்வாகத்தினரின் முயற்சிக்கு ராயல் சல்யூட்!

Exit mobile version