ஆன்லைனில் அனுமதியற்ற CCTV கேமராக்கள்!

புதுடெல்லி: இந்தியாவில் Amazon மற்றும் Flipkart இணையதளங்களில் விற்பனைக்குப் பட்டியலிடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான இணையவழி CCTV கேமராக்களிடம் அரசின் கட்டாயப் பாதுகாப்புச் சான்றிதழ் இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, இரண்டு நிறுவனங்களும் கேமரா விற்பனைப் பட்டியல்களை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன.

770 கேமராக்களில் 700-க்கும் மேல்

Amazon, Flipkart தளங்களில் பட்டியலிடப்பட்டிருந்த சுமார் 770 இணையவழி பாதுகாப்புக் கேமராக்களை ராய்ட்டர்ஸ் ஆய்வு செய்துள்ளது. அவற்றில் 700-க்கும் மேற்பட்ட மாடல்கள் இந்திய தரநிர்ணய அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

அரசின் அனுமதி இல்லாத கேமராக்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என விவகாரத்தை அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். செய்தி வெளியானதைத் தொடர்ந்து Hikvision நிறுவனத்தின் EZVIZ உள்ளிட்ட சில பிராண்டுகளின் குறைந்தது 12 விற்பனைப் பட்டியல்கள் நீக்கப்பட்டுள்ளன அல்லது விற்பனைக்குக் கிடைக்காதவையாக மாற்றப்பட்டுள்ளன.

எதற்காகப் பாதுகாப்புச் சான்றிதழ்?

இணையத்துடன் இணைக்கப்படும் CCTV கேமராக்களின் வன்பொருள், மென்பொருள் மற்றும் தரவுப் பாதுகாப்பு அம்சங்கள் பரிசோதிக்கப்பட வேண்டும். கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதையும், அவை இணையத் தாக்குதலுக்கான நுழைவுவாயிலாகப் பயன்படுத்தப்படுவதையும் தடுப்பதே இதன் நோக்கம்.

CCTV கேமராக்களுக்கான பாதுகாப்புப் பரிசோதனை மற்றும் கட்டாயப் பதிவுத் தேவைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவித்துள்ளது. பாதுகாப்புப் பரிசோதனை அறிக்கையை STQC அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு வழங்க வேண்டும்.

வாங்கும் முன் கவனம்

பாதுகாப்புக் கேமராவை ஆன்லைனில் வாங்குவோர், அந்த மாடலுக்கு BIS பதிவு மற்றும் தேவையான பாதுகாப்புச் சான்றிதழ் உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். கட்டாயச் சான்றிதழ் பெற வேண்டிய பொருட்களின் விவரங்களை BIS அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

விலை குறைவாக இருப்பதை மட்டும் கருத்தில் கொண்டு அங்கீகாரமற்ற Wi-Fi கேமராக்களை வாங்குவது, வீட்டின் நேரலைக் காட்சிகள் மற்றும் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Exit mobile version