10 வயதில் பேக்கரிக்கே ஓனர் : சாதிக்க வயது தடையல்ல என நிரூபித்த “செஃப் வினுஷா”..

கடந்த எட்டு மாதங்களாக, கொரோனாவால் உலகமே முடங்கி கிடக்கிறது. இந்திய பொருளாதாரம், வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியில் இருக்கிறது. நிச்சயமில்லாத வேலையில், எப்போது என்ன ஆகுமோ என்ற பயத்தில், அனைவரும் இருக்கிறார்கள். எதிர்காலம் பற்றியும், தொழில் பற்றியும் எல்லோருக்கும் ஒருவித பயம் இருந்துக் கொண்டே இருக்கிறது. அனைவருமே, எதிர்க்கால தேவை வேண்டி, சுயத்தொழில் ஒன்றை இப்போதே கற்றுக் கொள்ளலாம் என சுயத்தொழிலை கற்கத் தொடங்கிவிட்டனர்.

“இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும், ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது” என்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் வார்த்தைகளுக்கு ஏற்ப, இப்போதும் சந்தோஷமும் நிம்மதியுமாய் கழிவது குழந்தைகளின் வாழ்வுதான்.

குழந்தைகள் எல்லா நேரமும், குழந்தையாக மட்டுமே இருந்து விடுவதில்லை. சில நேரம், பெரியவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களாகவும் இருந்து விடுகிறார்கள். அப்படியொரு குழந்தைதான், வினுஷா.

வினுஷா, ஒரு சுட்டி செஃப். படிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், சிறுவயதிலேயே பேக்கரி ஒன்றை நடத்தி வரும் சுட்டி சி.இ.ஓ. வினுஷா, சென்னையை சேர்ந்த ஸ்மார்ட் கேர்ள்!

வினுஷாவின் பேக்கரிக்கு பெயர், “Four Seasons Pastry”. இதன்மூலம், கப் கேக்ஸ் – பிறந்தநாளுக்கான கேக் போன்றவற்றை ஆர்டர் எடுத்து, தன் சிறிய கைகளால் அசத்தலாக செய்து தருகிறார், வினுஷா. நம்மை போல, லாக்டௌனால் தெளிவு பெற்றவரல்ல வினுஷா. லாக்டௌனுக்கெல்லாம் முன்னதாகவே, பள்ளியில் இருக்கும்போதே சுயத்தொழில் பற்றியும் – பேக்கரி மீதான தன்னுடைய பெர்சனல் ஆசை பற்றியும், அறிந்து புரிந்து, அப்போதே இதை தொடங்கிவிட்டார், வினுஷா.

வினுஷாவுக்கு இப்போது வயது 10. சில வருடங்களுக்கு முன், “என்ன தொழில் செய்யலாம்?” என்பதுதான் வினுஷாவுக்கு எழுந்த முதல் யோசனை. அதை தீவிரமாக சிந்தித்தபோது, “நீதான் சூப்பரா கேக் செய்வியே…” எனக்கூறி, அவருக்கு திசை காட்டியவர்கள் அவளின் பெற்றோர்தான். ஒன்றரை வருட கற்றல்கள், அனுபவங்கள், முயற்சிகளுக்குப் பிறகு, தன் ஆசையைக் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றியிருக்கிறார் வினுஷா. “ஃபோர் சீஸ்ன்ஸ் பேஸ்டரி” என்பது வினுஷாவின் கேக் நிறுவனத்தின் பெயர். அதன் சி.இ.ஓ. (தலைமை செயல் அதிகாரி) குட்டி வினுஷாவேதான்!

முதலில் வினுஷாவின் அம்மா கவிதாவிடம் வினுஷாவின் இந்த சி.இ.ஓ. பொறுப்பு குறித்துக் கேட்டோம்.

நான் சென்னை, ராமாபுரத்தில் ஒரு தொடக்கப்பள்ளி நடத்திட்டு வர்றேன். வினு, முதன்முதலா அவ ஸ்கூல் ஃப்ரெண்டு கூட சேர்ந்து, என் பிறந்தநாளுக்கு ஒரு கேக் செஞ்சா. எப்படி கேக் செய்யுறதுன்னு, அவ ஃப்ரெண்டுதான் இவளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கா. நான் ஸ்கூல் போயிருந்த கேப்ல, ரெண்டு பேரும் சேர்ந்து, அழகா கேக் ரெடி பண்ணி வெச்சிருந்தாங்க. யூ ட்யூப் பார்த்து செஞ்சிருக்கா!

அன்னிக்கு முழுக்க, தான் கேக் செஞ்சதைப் பற்றி அனுபவிச்சு பேசிட்டிருந்தா வினு. கேக்கோட சுவையைவிடவும், அதைச் செய்த அனுபவம் அவளுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அடுத்து, இவங்க அப்பா ஃப்ரெண்டு ஒருத்தருக்குப் பிறந்தநாள் வந்துச்சு. அவருக்கு ஒரு கேக் செஞ்சு கிஃப்ட் பண்ணா. இப்படி தெரிஞ்சவங்களுக்கெல்லாம் செஞ்சு கொடுக்க ஆரம்பிச்சப்போதான், சுயதொழில் தொடர்பான எண்ணம் அவளுக்கு வந்துச்சு. எதுவா இருந்தாலும், தெளிவா யோசிச்சுச் செய்யணும்னு அவளுக்கு அறிவுறுத்தினோம். அப்படிக் காத்திருந்து தேர்ந்தெடுத்ததுதான், இந்த கேக் தொழில்” என்றார் வினுஷாவின் அம்மா கவிதா முத்துராமலிங்கம்.

வினுஷாவின் அப்பா முத்துராமலிங்கம், “வினு ஒரு விஷயத்தை ஆசைப்படுறா, அதை அவளை நேர்த்தியா செய்யவைக்கணும்னு நினைச்சோம். அதனால, குழந்தைகளுக்கான பிரத்யேக சுயதொழில் தொடக்க வகுப்புகள்ல சேர்த்துவிட்டோம். மனசளவுல வினு எல்லாத்துக்கும் தயாரான பிறகுதான், தொழில் தொடங்கினோம். நிறுவனத்தின் பெயர், ஸ்டைல், தீம் எல்லாமே வினுவோட ஐடியாதான். இதுல வர்ற வருமானத்தை ஒரு பேங்க் அக்கவுன்ட்ல போட்டு வெச்சு, 18 வயசுக்குப் பிறகு, அதை அவ கையில கொடுத்திடலாம்னு இருக்கோம்’’ என்றார் பெருமிதத்துடன்.

அடுத்த வினுஷாவிடம் பேசினோம். “ஃபோர் சீசன்ஸ் பேஸ்டரி” என்பதன் பெயர்க்காரணம் என்ன என்று அவரிடம் கேட்டோம்.

“எனக்கு சீஸன்ஸ் (பருவநிலைகள்) ரொம்பப் பிடிக்கும். அதனாலதான் “ஃபோர் சீஸன் பேஸ்டரி”ன்னு பெயர் வெச்சேன். நான் தனிப்பட்ட முறையில ஆர்டர் எடுக்கும் முன்னாடி, ஒரு டப்பால, நான்கு வகை கப் கேக் செஞ்சு, அதை விற்பனை செய்வேன். அந்தக் கப்ல, குளிர்காலத்தை குறிக்கிற கேக்கோட க்ரீம், வெள்ளை கலர்ல இருக்கும். அதேபோல வெயில் காலம்னா, ஆரஞ்சு நிறம். இலையுதிர் காலத்தோட கேக் க்ரீம்ல, இலை இருக்கும். இளவேனில் காலத்தை, பச்சை நிற க்ரீம்ல குறிச்சிருப்பேன். அப்படித்தான் என்னோட பேக்கிங் ஆசை வளர்ந்துச்சு. பேக்கரியா இதை மாற்ற வேண்டும் என்ற நிலைமை வந்தப்போ, என்னோட ஐடெண்டிட்டி-யா என்னோட ஃபேவரைட்டான ஃபோர் சீஸன் கப் கேக்ஸையும் மாத்திக்கிட்டேன்” என்கிறார் குஷியாக. கடந்த வருடம், கொரோனாவுக்கு முன், ஒரு ஸ்டார் ஹோட்டலில் ஸ்டால் போட்டிருந்தபோது, 100 கப் கேக்ஸ் மொத்தமாக ஆர்டர் கிடைத்திருக்கிறது, வினுஷாவுக்கு. அசத்தலாக டெலிவரி முடித்திருக்கிறார்.

“2019-ஆம் ஆண்டு தீபாவளிக்கு, 50 கப் கேக் ஆர்டர் வந்துச்சு. வார நாள்கள்ல, படிப்புதான் ஃபர்ஸ்ட். வீக்-எண்ட்ல, கேக் செய்வேன். பெரிய ஆர்டர்னா, வார நாள்கள்லேயே சீக்கிரமா படிச்சு முடிச்சுட்டு, நைட் 8 மணிக்கு மேல கேக் செய்ய ஆரம்பிச்சுடுவேன். அம்மா எனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க. சமையல்ல இன்னும்கூட சில சந்தேகம் இருக்கு. ‘பழகப்பழக அதுவும் வந்துடும்’னு அம்மா சொல்லியிருக்காங்க. சீக்கிரம் சமையலை நல்லா கத்துக்கணும்! சமையலைப் பொறுத்தவரைக்கும், செஃப் சுரேஷ் சின்னசாமி, செஃப் லக்‌ஷ்மி ரெட்டி, செஃப் கீதா கிருஷ்ணன் – இவங்க எல்லாரும் தான் என்னோட குரு!” என சொல்லும் வினுஷா, தொழிலில் மட்டுமல்ல, படிப்பிலும் டாப்பர் தானாம். படம் வரைவதிலும் இந்தச் சுட்டி கெட்டி!

“இன்றைய சூழல்ல, நம்ம ஊர்ல நியாயமான விலையில குழந்தைகளுக்குச் சமையல் சொல்லித் தர்ற சரியான கேட்டரிங் இன்ஸ்டிட்யூட்டே கிடையாது. நான் வளர்ந்து பெரியவளான பிறகு, குழந்தைங்களுக்கான அப்படியொரு இன்ஸ்டிட்யூட் ஆரம்பிக்கணும்னு இருக்கேன்” என்கிற வினுஷாவுக்கு, அட்வான்ஸாக வாழ்த்துச் சொல்லி வைத்தோம்.

லாக்டௌன் காலத்தில் வினுஷாவின் தொழில் எப்படி போகிறது என்பது பற்றி தெரிந்துக்கொள்ளும் ஆவல் அதிகரிக்கவே, அவரிடமே அதுபற்றிக் கேட்டோம்.

“இந்த லாக்டௌன்ல, ப்ரொஃபெஷனால எனக்கு நிறைய எக்ஸ்போஷர் கிடைச்சுது. நிறைய புது விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன். 30-க்கும் மேற்பட்ட வெப்மினார்ஸ்ல பங்கெடுத்து, எனக்குத் தெரிஞ்ச விஷயங்களையெல்லாம், நிறைய பேர்கிட்ட பகிர்ந்துக்கிட்டேன். ரொம்ப முக்கியமா, என்னோட ஃபோர் சீசன்ஸ் பேஸ்டரியை, ப்ரைவேட் லிமிடெட்-ஆ பதிவு செஞ்சுகிட்டேன். BRIC என்ற சர்வதேச சேனல்ல, என்னோட சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிட்டு இருக்கேன். நம்ம ஊர்ல, சன் குழுமத்தோட ‘சுட்டி டி.வி’ல ஷோ பண்றேன்.

ஓயோ நிறுவனத்தோட சீஃப், என்னோட செயல்களை பாராட்டி வாழ்த்து தெரிவிச்சிருக்கிறார். அமுல் நிறுவனத்தின் சமூக வலைதளம், என்னை பெர்சனலா அங்கீகரிச்சிருக்கு. அதேபோல, மய்யம் நீதி கட்சியுடைய, சமூக வலைதள பக்கத்திலயும், என்னைப் பத்தி பேசியிருக்கேன்.

இப்படி இந்த லாக்டௌன்-ஐ, ரொம்ப ரொம்ப ஆக்கப்பூர்வமா செலவழிச்சிருக்கேன்” என்கிறார் புன்முறுவலுடன்!

மேலும் மேலும் வளர, வாழ்த்துகள் வினுஷா!

– ஜெ.நிவேதா

Exit mobile version