என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே….

“கருணாநிதி” இந்த பெயர் கடந்த 60 ஆண்டு கால அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்று. இத்தனை ஆண்டு கால அரசியலை தன்னையே மையப்படுத்தித் சுழல வைத்த பெருமைக்கு சொந்தக்காரர்.

அரசியல் களத்தில் மட்டுமின்றி  அனைத்துத் துறைகளிலும் அதிநுட்பம் வாய்ந்த ஆற்றலாளராக முத்திரை பதித்தவர். எழுத்தை காதலியாக நேசித்த அவர், தனது பள்ளிப் பருவம் முதலே நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். சிவாஜி, எம்ஜிஆர் என அன்றைய இரண்டு உச்ச நட்சத்திரங்களை அடையாளப்படுத்திய தமிழுக்குச் சொந்தக்காரர் கருணாநிதி. அவரிடம் இருந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல் இவை தான் அவரை இருகரம் பிடித்து முதல்வர் பதவி நோக்கி அழைத்துச்சென்றன. பேச்சாற்றல் மிக்க அவரின் சொல்வீச்சு அனைவரையும் கட்டிப்போட்டது.

ஒடுக்கப்பட்டவர்களுக்காக இவர் முன்னின்று நடத்திய போராட்டங்களும், இவர் ஆற்றிய உரைகளும் கூர்மையான வாள் போல் ஆணவத்தை கிழித்தெறிந்தது. சாதி மற்றும் மதவெறிகளுக்கு எதிராக இவர் வீசிய வார்த்தைகள் அனைத்தும் எரிமலையில் இருந்து குமிழ்ந்த நெருப்பு துகள்களாக வெடித்தது. பெண்களின் சமஉரிமைகளுக்காக கைகோர்த்து நின்ற நாயகன் கருணாநிதி.

உரிமை மற்றும் சுய மரியாதையை நிலைநாட்ட இவர் தூக்கி நிறுத்திய ஒரே வாள் தமிழ்.. இவரின் பல பேச்சுகள் வரலாற்றில் இருந்தும் நம் மனதை விட்டும் என்றுமே அகலாது.

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் நீதிக்கட்சியின் தலைவராக இருந்து செயல்பட்ட பட்டுக்கோட்டை அழகிரியின் பேச்சு கருணாநிதியை பெரிதும் கவர்ந்தது. அதில் ஈர்க்கப்பட்டு தன் பள்ளி நண்பர்களை ஒருங்கிணைத்து, `இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பு’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார். இந்தி எதிர்ப்புப் பேரணிகளையும் நடத்தினார்.போராட்டத்திற்கு மாணவர்களைத் திரட்ட அந்த சிறுவயதிலேயே `மாணவநேசன்’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார் கருணாநிதி.

1939ல் எட்டாம் வகுப்பு மாணவராக இருந்தபோது, பள்ளியில் நடந்த பேச்சுப்போட்டியில் ‘நட்பு’ என்ற தலைப்பில் பேசினார். இதுதான் கருணாநிதியின் முதல் மேடை பேச்சு.

மக்களின் எண்ணத் துடிப்பை அறிந்து வைத்திருந்தவர் மட்டுமல்ல. மிகப் பெரிய அறிவாளி, சிறந்தபேச்சாளர், நாவலாசிரியர், வசனம் மற்றும் திரைக்கதை ஆசிரியர், அரசியல்வாதி என பன்முக வித்தகர் கருணாநிதி. தன் காந்த குரலால் என்ணற்ற தொண்டர்களை கட்டி போட்டவர்.

அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான போது தான் ’உடன்பிறப்பே’ என முரசொலியில் கடிதம் எழுத தொடங்கினார் கருணாநிதி. 1971 முதல் ’உயிரினும் மேலான உடன்பிறப்பே’ என்று பேசவும் செய்தார்.

பெரியாரின் கொள்கையும், அண்ணாவின் லட்சியத்தை கொண்டவர் கருணாநிதி. 1986 ஆம் வருடம் செப்டம்பர் 15ஆம் நாள் சென்னை மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும் விழா கவியரங்கில் கருணாநிதி ஆற்றிய தலைமை கவிதை. அப்போது ஆட்சியில் இருந்த எம்ஜிஆரையும் ரசித்து கேட்க வைத்தது என்றே சொல்லலாம்.

கருணாநிதியின் தமிழ் பேச்சை மட்டும் கேட்டு அசந்து போயிருந்த அவரின் உடன்பிறப்புகள், டெல்லியில் அவர் ஆற்றிய அழகான ஆங்கில பேச்சை கேட்டு அசத்து தான் போனார்கள்.

பெரியார் சமத்துவபுரம் அமைத்தது, இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கியது, ரேஷன் கடைகளில் 1 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்று தான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டினார் கருணாநிதி. 

பெண்களுக்கு சொத்துரிமை சட்டம், விவசாயிகள் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரத் திட்டம், பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அரசு போக்குவரத்து கழகம் அமைப்பு, பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், சத்துணவில் வாரம் 3 நாட்கள் முட்டை, பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம், தைத் திங்களே தமிழ் புத்தாண்டு என்று சட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், உழவர் சந்தைத் திட்டம், சென்னையில் வள்ளுவர் கோட்டம், குமரியில் 133 அடியில் திருவள்ளுவர் சிலை என்று கருணாநிதி தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்திட்ட திட்டங்களும், சட்டங்களும் ஏராளம்.

 1957 முதல் 2016 வரை தான் போட்டியிட்ட தேர்தலில் ஒன்றில் கூட தோல்வியை சந்திக்காமல் 13 முறை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். 5 முறை முதல்வர் நாற்காலியை அலங்கரித்தவர். தமிழக சட்டசபையில் கொறடா, சட்டமன்றத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் என்றும் திமுகவில் ஆண்டுகள் தொடர்ந்து தலைவராகவும் இருந்து எம்ஜிஆர், வைகோவால் கட்சி பிளவுபட்ட போதும் துவண்டுவிடாமல் தனது இறுதிமூச்சு வரை திமுகவை வழிநடத்தியவர்.

வயது மூப்பின் காரணமாக நடை தளர்ந்து சக்கர நாற்காலியில் அமர்ந்த போதும் தனது அரசியல் மற்றும் மக்கள் பணிக்கு ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தவர். கடைசியாக 2016ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உடல்நிலை சரியில்லாமல் போகும் வரை தினசரி கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்று கட்சிப் பணியை செய்தவர்.

60 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத மாபெரும் தலைவர்களில் ஒருவர் கருணாநிதி. தினசரி பத்திரிக்கைகளை படித்துவிட்டு துறை சார்ந்த குறைகளை குறிப்பெடுத்து அதனை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு ஆணையிட்டவர். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஜாம்பவான்களின் கேள்விகளுக்கெல்லாம் அசராமல் ஒற்றை வார்த்தையை பதிலாக்கிவிட்டு அதன் அர்த்தம் என்ன என்பதை அவர்களே புரிந்து கொள்ளட்டும் என்று சாதுர்யமாக பதில் அளித்தவர். 

அரசியல் தலைவர்கள் தாங்கள் என்ன பேசுவது என்பதை எழுதிக் கொடுப்பதற்காகவே தனியாக ஆட்களை வைத்திருக்கும் காலகட்டத்தில் தனது அரசியல் வாழ்வில் தனது மேடைப் பேச்சுகள் அனைத்தையும் அவரே தயார்படுத்தியவர். தன் மூளையே தனக்கு டைரி என்பார் கருணாநிதி. அந்தளவுக்கு ஞாபக சக்தி கொண்டவர் அவர். நகைச்சுவையான அதே சமயம் சிந்திப்பவையாக இருக்கும் கருணாநிதியின் பேச்சு கடைசி வரை மக்களை கட்டிப்போட்டே வைத்திருந்தது.

பேச்சையும் எழுத்தையும் முழு மூச்சாகக் கொண்டிருந்த  கருணாநிதியின் பேனா இன்று ஓய்வு எடுத்துக் கொண்டது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்த தமிழ் மகன்  கருணாநிதி தமிழ் அன்னையின் மடியில் துயில் கொள்ள சென்றுவிட்டார்.

ஒவ்வொரு மேடைகளிலும் ”என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே” என சொல்லும் கருணாநிதியின் அந்த ஒற்றை மந்திர வார்த்தை தான் அவரை கோட்டையில் உட்கார வைத்து தொண்டர்களின் இதயத்தில் குடிகொள்ள வைத்தது என அரிதியிட்டு சொல்லலாம்.

Exit mobile version