அமெரிக்காவின் நிறவெறி – ப்ளாக் லிவ்ஸ் மேட்டர்ஸ்

வெளிநாடு என்றவுடன் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அமெரிக்கா தான். உலக பணக்கார நாடுகளில் ஒன்றாகவும் அமெரிக்கா இருக்கிறது. இன்று அமெரிக்காவுக்கு பல பக்கங்கள் இருந்தாலும், வரலாற்றின் பழைய பக்கங்களின் பெரும் பகுதி நிறவெறியால் இரத்தத்தில் எழுதப்பட்டது.  சரி, அப்போது தான் நிறவெறி இருந்ததா, இப்போது இல்லையா? இந்த கேள்விக்கான பதிலை மே மாதம் அமெரிக்காவில் நடந்த கருப்பின இளைஞரின் கொலையே சொல்லிவிடும். அமெரிக்காவில்  வசிக்கும் ஜார்ஜ் பிளாயிடு என்ற கருப்பின இளைஞர் போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

வெள்ளையின போலீஸ் அவரை கீழே தள்ளி கழுத்தில் சுமார் 9 நிமிடங்கள் அழுத்தி கொன்றார். இந்த சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி, பார்ப்போரை உலுக்கியது என்று தான் சொல்ல வேண்டும். சரி,  ஒருவரை கதற கதற கொல்லும் அளவிற்கு  அப்படி என்ன வன்மம்? இந்த கேள்விக்கான விடை தான் நிறவெறி. நவீன வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய காலகட்டத்திலேயே இவ்வளவு நிறவெறி இருக்கிறது என்றால் அன்றைய காலகட்டத்தை நினைத்துப் பார்க்கவே பயமாகத் தான் இருக்கிறது.  

நிறவெறி              

வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்களால் உருவானது தான் அமெரிக்கா. அமெரிக்காவில் உள்ள முதலாளிகள் தங்கள் வீடுகளில் மற்றும்  தோட்டங்களில் வேலை செய்வதற்காக, ஆப்பிரிக்காவில் இருந்து நீக்ரோ எனப்படும் கருப்பின மக்களை விலை கொடுத்து வாங்கி வந்து கொத்தடிமைகளாக வைத்திருந்தனர். இதன் மூலம் வெள்ளையின மக்களுக்கு கருப்பின மக்கள் அடிமை என்ற தோற்றம் ஏற்பட்டது. கருப்பின மக்கள் தங்களுக்கு கீழே தான் இருக்க வேண்டும் அவர்களுக்கு எந்த அதிகாரமும் வழங்கக்கூடாது என்று வெள்ளையின மக்கள் அதிகாரத்தை ஏற்படுத்தினர். இப்படி ஆரம்பித்தது தான் நிறவெறி.

அடிமைகளாக கொண்டுவரப்பட்ட கருப்பர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் நிர்வாணப்படுத்தி அடித்து கொடுமைப்படுத்தினார்கள். தப்பி ஓட முயன்றால் குழி வெட்டி அதில் நிர்வாணப்படுத்தி அமர்த்தி மேலே விறகை வைத்து எரித்து விடுவார்கள். இப்படி பல கொடுமைகளை தாங்கிக் கொண்டு இருந்த கருப்பினர்கள் தங்களுக்கும் உரிமை உண்டு, நாமும் மனிதர்கள் தான் என உணரத் தொடங்கினர். பிறகு, தங்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளுக்காக கருப்பின மக்கள் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். கருப்பின மக்கள் போராட ஆரம்பித்ததும் வெள்ளையர்கள் அவர்களை ஒடுக்க நினைத்து அடக்குமுறையை கையில் எடுத்தனர். அந்த அடக்குமுறை கருப்பினத்தவர்களின் உயிரை பறிக்கும் அளவிற்குச் சென்றது.  


விடுதலைப் பிரகடனம் 

        அமெரிக்கா வடக்கு, தெற்கு என இரு பகுதிகளாக பிரிந்து இருந்தது. வடக்கு பகுதிகளைக் காட்டிலும் தெற்கு பகுதிகளில் அடிமைமுறை அதிகளவில் இருந்தது. ஆப்ரகாம் லிங்கன், தான் ஒரு வெள்ளையராக இருந்தாலும் கருப்பின அடிமைமுறைக்கு எதிரான கருத்தை கொண்டிருந்தார்.1861 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், “அடிமைத்தனம் என்பது தார்மீக மற்றும் சமூக அரசியலிலும் தவறானது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவில் கொள்கை மாற்றம் கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அடிமைமுறையையே ஒழிப்போம்” என பிரச்சாரம் செய்தார். குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட  ஆப்பிரகாம் லிங்கன் 1861 ஆம் ஆண்டு  அமெரிக்க அதிபராக பதவியேற்றார்.

அடிமைமுறை அதிகம் கொண்டிருந்த சில தெற்கு மாகாணங்கள் அமெரிக்க ஒன்றியத்திலிருந்து விலகியது. ஒன்றியத்திலிருந்து விலகிய தெற்கு மாகாணங்களுக்கும் அமெரிக்க ஒன்றியத்திற்க்கும் உள்நாட்டுப்போர் ஏற்பட்டது. அடிமை முறையை ஒழிக்காமல் அமெரிக்காவுக்கு எதிர்காலம் கிடையாது என முழங்கினார் ஆபிரகாம் லிங்கன். லிங்கனின் பதவிக்காலத்தின் நான்கு ஆணடுகளும் உள்நாட்டுப்போரிலேயே கழிந்தது. இறுதியில் தெற்கு மாகாண படைகள் அமெரிக்க ஒன்றிய படைகளிடம் சரணடைந்து தோல்வியை ஒப்புக் கொண்டது. அதன்பின், அடிமை முறையில் இருந்த கருப்பின மக்களுக்காக விடுதலைப் பிரகடனம் ஆபிரகாம் லிங்கனால்1863 ஆம் ஆண்டு ஐனவரி 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 

ப்ளாக் லிவ்ஸ் மேட்டர்ஸ் 
           

ஜார்ஸ் ப்ளாய்ட் கொலையை கண்டித்து அமெரிக்கா மட்டுமல்ல பிரிட்டன், சிட்னி போன்ற இடங்களிலும் “ப்ளாக் லிவ்ஸ் மேட்டர்ஸ்” என்ற பெயரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டத்தில் வெள்ளையின மக்களும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.  
  நிறவெறிக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றிருந்தாலும் முக்கியமான போராட்டம் 1921 ஆம் ஆண்டு நடைபெற்ற துல்சா தாக்குதல் தான் மறக்க முடியாதது. சுமார் 300 கருப்பர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நிறவெறிக்கு எதிராக விடுதலைப் பிரகடனம் போடப்பட்டிருந்தாலும் இன்றும் நிறவெறி குறைந்த பாடில்லை.

2016 ல் நடைபெற்ற ஆஸ்கர் நிகழ்ச்சியை கருப்பின நடிகர்கள் புறக்கணித்தனர். புகழ்பெற்ற நடிகர் வில் ஸ்மித், ” நிற வெறி என்பது மோசமடையவில்லை; காட்சிப்படுத்தப்படுகிறது ” என்று கூறுகிறார்.

அமெரிக்காவின் நிறவெறியை இந்தியாவுடன் ஒப்பிடலாம். இந்தியாவில் சாதிவெறி என்றால் அமெரிக்காவில் நிறவெறி. நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதெல்லாம் இளைஞர்களிடம் தான். முடிந்து விட்ட வரலாற்றை மாற்ற முடியாது. ஆனால், நிகழ்ந்து கொண்டிருக்கும் அடக்குமுறையை திருத்தி, நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும். ஜார்ஸ் ப்ளாய்ட் போன்று இனி ஒரு உயிர் போகக்கூடாது என்பதே லட்சியமாக இருக்க வேண்டும்.

Exit mobile version