ஒரு முறை கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா???? இது தான் இன்று மில்லியன் டாலர் கேள்வி…

அதற்கான ஒரு விடையாக இன்னும் அச்சில் ஏற்றப்படாத ஆய்வு முடிவு வெளிவந்திருக்கிறது. அந்த ஆய்வு முடிவுகள் நம் வயிற்றில் சிறிது பாலை வார்ப்பது போல் இருக்கின்றன தொடர்ந்து அந்த ஆய்வுக்குள் செல்வோம் .

பிரிட்டன் நாட்டைச்சேர்ந்த பொதுசுகாதாரத்துறையைச் சேர்ந்த நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு செய்யும் சம்மேளனம் ஒரு அறிவியல் ஆய்வை செய்தது அதில் கடந்த மார்ச் 2020 முதல் ஏப்ரல் 2020 வரை 2000 மருத்துவ ஊழியர்களிடம் குருதி தானமாக பெறப்பட்டது. அந்த 2000 பேர்களுள் 100 பேர் அந்த இரண்டு மாதங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் 22 முதல் 65 வயது வரை இருக்கும் அந்த குழுவில் 23 பேர் ஆண்கள் 77 பேர் பெண்கள். இவர்களிடம் பிரதிமாதம் தொடர்ந்து குருதி மாதிரி கொடையாகப்பெறபட்டு அதில் கொரோனா தொற்றுக்கு எதிரான ஹூயூமோரல் இம்யூனிட்டி ( எதிர்ப்பு சக்தி) உண்டாகியிருக்கும் அளவுகளை அளந்தனர்.

ஆறுமாத காலம் முடிந்த பின்னும் இந்த நூறு பேர்களில் செல்லுலார் இம்யூனிட்டி எவ்வளவு இருக்கிறது என்பதையும் அளவீடு செய்தனர்.

அது என்ன…

ஹூயூமோரல் இம்யூனிட்டி ???

செல்லுலார் இம்யூனிட்டி ???

இரண்டுக்கு என்ன வித்தியாசம்…

அதை ஒரு சிறு கதை கொண்டு கூறினால் புலப்படும் என்று நம்புகிறேன்

ஒரு சிற்றூர் இருக்கிறது அங்கு ஒரு சமயம் வேறொரு ஊரில் இருந்து கத்தி வேல் போன்ற ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்து மக்களை கொல்ல ஆரம்பிக்கின்றனர். உள்ளே நுழைந்த ஊடுறுவல்காரர்கள் தான் தீநுண்மிகள் (Virus) இதில் அந்த வெளி ஊர் ஊடுறுவல்காரர்களை எதிர்த்து அந்த ஊரில் உள்ள பலம் பொருந்திய மக்கள் எதிர்ப்பார்கள் அல்லவா?


அவர்கள் தான் (Humoral antibodies)அதாவது நமது எலும்பு மஜ்ஜையில் இருந்து உருவாகும் எதிர்ப்பு சக்தி செல்கள் அவை.

இந்த எதிர்ப்பு சக்தி உடனடியாக அதிரடியாக இருக்கும்.

அதே சமயம் ஊரில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் ஊரை விட்டும் ஓடிப்போய் வெளியே சென்று இன்னும் சிலரை கூட்டிவரச்சென்றிருப்பார்கள். அவர்கள் எதிரியை நன்றாக நினைவு வைத்திருப்பார்கள். தங்களது பிள்ளைகளுக்கும் எதிரிகள் குறித்து கூறியே வளர்த்திருப்பார்கள். இவைகள் தான் T-cell immunity அல்லது செல்லுலார் இம்யூனிட்டி.

பிற்காலத்தில் மீண்டும் அதே ஊரைச்சேர்ந்த எதிரிகள் உள்ளே நுழைய முற்பட்டால் உடனே தாய்மார்களிடம் பாலபாடம் கற்ற இந்த T செல்கள் உடனே செயலில் இறங்கி ஊரை உசுப்பி விட்டு பெரிய சமர் புரிந்து எதிரியை வென்றுவிடுவார்கள்.

மேற்சொன்ன விசயத்தை அப்படியே நினைவில் வைத்து ஆய்வு முடிவுகள் என்ன கூறுகின்றன என்பதைக் காண்போம்

✅ தொற்று ஏற்பட்டவுடன் உடனே ஏறும் IgM , IgG ஆண்ட்டிபாடிகளின் அளவு இரண்டு மாதங்களில் ஐம்பது சதவிகிதம் குறைந்து பிறகு சமநிலையை எட்டுகின்றன

✅ நோய் தொற்று ஏற்பட்ட ஆறுமாதங்களுக்குப்பிறகும் கூட செல்லுலார் இம்யூனிட்டி அந்த மக்களுக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

✅ நோய் தொற்று கண்டவர்களில் யாருக்கெல்லாம் அதிக அறிகுறிகள் இருந்தனவோ அவர்களுக்கு அறிகுறிகள் இல்லாமல் அல்லது குறைவான அறிகுறிகள் இருந்தவர்களை விட 50% அதிக எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கிறது.

அதாவது முதல் தொற்று தீவிரமாக இருந்தவர்களுக்கு எதிர்ப்பு சக்தி சிறப்பாக உருவாகியிருக்கிறது.

✅ அதற்காக அறிகுறிகளின்றி முதல் தொற்றைக் கடந்தவர்களுக்கு திரும்ப கொரோனா கட்டாயம் வரும் என்று கூற அவசியமில்லை . அவர்களது எதிர்ப்பு சக்தி கிருமியை சிறப்பாக கையாண்டு துரத்தியதே அவர்களுக்கு அறிகுறிகள் தோன்றாமல் இருந்ததற்கு காரணம்.

✅கொரோனா வைரஸின் வெளிப்புற பகுதியில் இருக்கும் ஸ்பைக் புரதம் மட்டுமின்றி உள்ளே இருக்கும் நியூக்லியஸ் புரதம் மற்றும் வைரஸின் செல் சுவரில் உள்ள புரதங்களுக்கு எதிராகவும் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதை கண்டறிந்துள்ளனர்.

இதுவரை ஆய்வில் இருக்கும் வேக்சின்கள் பலவும் ஸ்பைக் புரதத்தை மையமாக வைத்தே நடந்து வரும் நிலையில் நியூக்லியஸ் புரதம் மற்றும் மெம்ப்ரேன் புரதம் கொண்டும் ஆய்வுகள் செய்து தடுப்பூசி கண்டறியப்படலாம்

இந்த ஆய்வின் வழி அறியும் விசயங்கள்…

✅முதல் கொரோனா தொற்று( அது அறிகுறிகள் இல்லாமல் இருந்தாலும் சரி.. சாதாரண அறிகுறிகளோடு இருந்தாலும் சரி.. ) வந்த சில மாதங்களில் முதல் நிலை ஆண்ட்டிபாடிகள் அளவில் குறைந்து போனாலும் ஆறுமாதம் கழித்து கூட அந்த தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி உடலில் இருக்கிறது.

இது ஆறுதலான செய்தி…

ஆனால் அந்த தொற்று அடைந்தவர்களை தொடர்ந்து எத்தனை மாதங்கள் அந்த எதிர்ப்பு சக்தி மறுதொற்றில் இருந்து காக்கும் என்பதை காலம் தான் பதில் சொல்லும். இருப்பினும் 100 பேரிடம் மட்டுமே செய்யப்பட்டுள்ள இந்த ஆய்வை இன்னும் பல்லாயிரம் பேருக்கு செய்த பின்பே நாம் இதுகுறித்து தெளிவான முடிவைப்பெற முடியும்.

அதுவரை கொரோனா மறுதொற்றைப்பெறும் வாய்ப்பு அனைவருக்கும் உண்டு என்றே நம்பி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இந்த கட்டுரையைப் படித்த பின் ஓரளவு ஆறுதல் அடையலாமே அன்றி அலட்சியம் கொண்டு எனக்கு ஏற்கனவே தொற்று வந்து விட்டது அதனால் மீண்டும் வராது என்று வெளியே முகக்கவசம் இன்றி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கேலிக்கூத்தாக்கக்கூடாது.

தொடர்ந்து முகக்கவசம் கைகழுவுதல் இடைவெளி பேணுதல் ஆகிய இம்மூன்றுமே நமது தற்காப்பு ஆயுதங்களாய் விளங்கட்டும் .

நன்றி..

மருத்துவ கட்டுரை ஆய்வு
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

ஆதாரம்
https://www.bmj.com/content/371/bmj.m4257

Exit mobile version