ஆபாச பேச்சு அச்சச்சோ போச்சு – போலீஸ் நடவடிக்கை (யூடியூப் அலப்பறை)

நாம் ஓய்வு நேரத்தில் பிடித்த பாடல்களையோ, வீடியோக்களையோ பார்த்துக் கொண்டிருப்போம். அப்படி பார்த்து கொண்டிருக்கும் போது, ஒரு வீடியோவின் முகப்பு படத்தில், ‘ஆபாசமாக பேசியாதல் இளைஞர்களை போலீஸ் கைது செய்தனர்’ என்று ஒரு வசனம். இன்னோரு வீடியோவின் முகப்பு படத்தில்,  ’ஆபாச பேச்சு அச்சச்சோ போச்சு’ ,என்று ஒரு வசனம். உடனே, நமக்கு என்ன தோன்றும், என்ன இது வித்தியாசமா இருக்கே சரி போய் பார்ப்போம் என்று வீடியோவை க்ளிக் செய்து பார்ப்போம்.

நாம் இப்படி வீடியோவை க்ளிக் செய்து பார்க்க வேண்டும், என்று தான் முகப்பு படம் அப்படி வைப்பது. இது தான் யூடியூப்பில் சேனல் வைத்திருப்பவர்களின் ஸ்டட்டர்ஜி. நம் ஆர்வத்தை தூண்டி, அதன் மூலம் அவர்களுக்கு தேவையான ஆதாயத்தை பெற்றுக்கொள்வது. ஆனால், இரண்டு வீடியோக்களிலும் இருப்பது என்னவோ ஒரே செய்தி தான். ஆக இங்கே மாறுபடுவது சிந்தனை முறை தான். பார்த்தவுடன் அது என்ன? என்ற கேள்வியை நமக்குள் எழுப்பி ஆர்வத்தை தூண்டுவது தான் ஸ்டட்டர்ஜி.

இந்த வித்தியாசமான சிந்தனை முறையை சமூகத்துக்கு ஆரோக்கியமான முறையில் செயல்படுத்தினால் வளரும் இளம் தலைமுறையினரும் ஆரோக்கியமான சிந்தனையுடன் வளர்வார்கள். ஆனால், இப்போது நடந்து கொண்டிருப்பது என்ன?

நான் ஒரு யூடியூப்பர் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு யூடியூப்பில் சேனல் வைத்து சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. முதலில் யூடியூப் சேனல்களை பிரபலப்படுத்தியவர்கள் பெண்கள் தான். யூடியூப்பில் ஒரு சேனல் ஆரம்பித்து, சமையல் வீடியோக்களை போட்டு கூட சம்பாதிக்கலாம் என்று உணர்த்தியவர்கள்.

அதன்பின், அனைவரும் பேஸ்புக் கணக்கு போல தங்களுக்கு என்று ஒரு யூடியூப் சேனல் வைக்கும் வரை வந்துவிட்டது. சமையல் வீடியோ மட்டுமல்ல டெக்னாலஜி சம்மந்தமான விளக்க வீடியோக்கள், தினசரி செய்திகள், பாடல்கள் பாடுவது, ஒரு விஷயத்தில் தன்னுடைய நிலைப்பாடு என்ன என்று கூறுவது இப்படி பல வீடியோக்கள் வலம் வருகிறது யூடியூப்பில். சினிமாவில் சாதிக்க நினைக்கும் இளைஞர்கள் தங்கள் படைப்புகளை வெளிப்படுத்தும் தளமாகவும் உள்ளது. இப்படி விஞ்ஞான வளர்ச்சியை ஆரோக்கியமாக பயன்படுத்துபவர்களும் இருக்கதான் செய்கிறார்கள்.

ஆனால், சிலர் காமெடி என்ற பெயரில் அடிக்கும் லூட்டியைத் தான்  மக்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அந்த வகையில், தற்போது பெரும்பான்மையான யூடியூப்பர்கள் கையில் எடுத்திருப்பது ப்ராங்க் வீடியோக்கள். இவர்களைப் பொறுத்த வரை ப்ராங்க் என்றால் ஒருவரை தொந்தரவு செய்து அதனை காமெடி என்று பார்ப்பவர்களை நம்ப வைப்பது.  சாலையில் ஒருவர் நடந்து சென்று கொண்டிருப்பார். திடீரென அவர் காதில் அருகில் சென்று பலூனை உடைப்பது. அவர் திகைக்கும் நொடியை மறைந்திருந்து கேமிராவில் படம் பிடித்து காட்டுவார்கள். அது தான் காமெடியாம்.

இன்னும் சிலர், தங்கள் சேனலுக்கு குறுகிய காலத்தில் பெரிதாக ரீச் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பொது மக்களிடம் கருத்து கேட்கிறேன் என்று சொல்லி ஒரு மைக்கை நீட்டி விட்டு இரட்டை அர்த்த கேள்விகளை  கேட்கிறார்கள். இதற்கு பதில் சொல்வது பெரும்பாலும் இளைஞர்கள் தான். இரட்டை அர்த்தத்தில் பேசுவது இப்போது ஒரு பேஷன் போல் ஆகிவிட்டது.இந்த வீடியோக்களை பார்க்கும் போதே, முகம் சுளிப்பது போல இருந்தாலும் யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை.

இந்நிலையில் ஒரு யூடியூப் சேனல் பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளதாக, அந்த சேனல் மீது சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரை தொடர்ந்து நடிவடிக்கை எடுத்துள்ள போலீஸ் அந்த யூடியூப் சேனலின் உரிமையாளர் தினேஷ்  மற்றும் ஊழியர்கள் ஆசின் பத்சா , அஜய்பாபு  என மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.

சீக்கிரம் பிரபலமாக வேண்டும் அதற்காக நான் என்ன வேண்டுமாலும் செய்வேன் என்று கிளம்புபவர்களுக்கு இந்த கைது ஒரு பாடமாக இருக்கவேண்டும்.

Exit mobile version