கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில், மருத்துவமனைக்கு செல்லும் சூழல் ஏற்படுபவர்கள், செய்து கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பது பற்றி, பொது சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநரும் மருத்துவருமான குழந்தைசாமி, பரிந்துரைத்திருக்கிறார்.
அவர் குறிப்பிடும் முக்கியமான அறிவுரைகள், இங்கே :
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உறவினர்கள், நெருங்கிய நண்பர்களை நேரில் சென்று பார்ப்பதை பொதுமக்கள் இந்த நேரத்தில் தவிர்க்க வேண்டும். எவ்வளவு நெருக்கமான நபராக இருந்தாலும், இதுபோன்ற நேரத்தில் தொலைபேசியில் நலம் விசாரித்தலே, போதுமானது.
நடக்க முடியாதவர்கள் – விபத்தில் காயமடைந்து நகர முடியாமல் அனுமதிக்கப்பட்டவர்கள் – முதியோர் இவர்களெல்லாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டால், அவர்களை கவனித்துக் கொள்ள ஆரோக்கியமான இளவயதுடையோர் யாரேனும் ஒருவர், மருத்துவமனையில் உடனிருக்கவும். இப்படி உடனிருப்போர், தொடக்கம் முதல் இறுதி வரை குறிப்பிட்ட அந்த ஒரு நபர் மட்டுமே இருக்கவும். காலை ஒருவர், மாலை ஒருவர் என நபர்கள் மாறிக் கொண்டே இருக்கக்கூடாது.
சாதாரண பிரச்னைக்காக மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, பின் சூழல் காரணமாக உள்நோயாளியாக அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படுபவர்கள், முதல் நாள் செல்லும்போது யாரை துணையாக அழைத்துச் சென்றீர்களோ, அவர்களையே நீங்கள் டிஸ்சார்ஜ் ஆகும்வரையில் உதவியாளராக உடன் வைத்துக் கொள்ளுங்கள்.
கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு செல்லும்போது, தங்களை விட வயது அதிகமான நபர்களை (குறிப்பாக அம்மா – மாமியார் போன்ற வயது அதிகமானோரை) உடன் அழைத்துச் செல்ல வேண்டாம். மாறாக தன் வயதையொத்த ஆரோக்கியமானவர்கள் யாரையேனும் அழைத்துச் செல்லவும். பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பெண்களுக்கும், இந்த விதிகள் யாவும் பொறுந்தும்.
பிரசவத்துக்கு தயாராகும் பெண்களுக்கு, எப்படியும் மருத்துவமனையில் அட்மிட் ஆகும் தேதி தெரிந்திருக்கும். இப்படியானவர்கள், பிரசவ காலத்திலும் அதன்பின்னரும் உங்களோடு மருத்துவமனையில் தங்கப்போகும் நபர் யாரென்பதை இப்போதே முடிவு செய்து, உடன் வைத்துக் கொள்வது நல்லது. இப்படி நீங்கள் தேர்வு செய்யும் நபர், கட்டாயம் வயது முதிர்ந்தோராக இருக்கக்கூடாது. முக்கியமாக வாழ்வியல் பாதிப்புள்ளவராக இருக்கவே கூடாது.
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற வாழ்வியல் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு கிராமங்களில் மொபைல் மெடிக்கல் டீமிடமே மருந்துகள் கிடைக்கிறது. ஆகவே ரெகுலர் செக்-அப்பிற்கு ஆரோக்கியமானவர்கள் செல்வதை தவிர்க்கவும். மாறாக மெடிக்கல் டீமிடம் ஆலோசனை பெற்று, அங்கேயே மருந்தும் பெற்றுக்கொள்ளவும்.
மருத்துவமனைக்கு செல்லும் முன்னர் கைகளை கழுவிக் கொள்வதும், சென்றுவிட்டு வீடு திரும்பியவுடன் குளித்துவிடவும் ஆரோக்கியமான செயல்.
மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள், கட்டாயம் அங்கு முகக்கவசம் அணிந்து செல்லவும். மருத்துவமனையில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் வேண்டும்.
கொரோனாவுக்கான அறிகுறிகளான காய்ச்சல் – இருமல் – சளி போன்றவை தெரியவரும் பொதுமக்கள், தங்கள் பகுதிக்கான கிராம / நகர சுகாதார செவிலியருடைய தொலைபேசி எண் / 104 ஆலோசனை மையம் / டெலி மெடிசின் சேவையினர் / மாவட்ட அளவில் செயல்படும் கொரோனா தடுப்பு ஆலோசனை மையத்தின் எண் என அவசர கால மருத்துவ உதவிக்கான அரசு சார்ந்த யாராவதொருவரை தொடர்புக் கொண்டு முதற்கட்ட ஆலோசனை பெற்றுக் கொள்ளவும். அதன்பின் மருத்துவமனை சென்று மருத்துவ ஆலோசனையை பெறவும்.
இவற்றை சரியாக பின்பற்றினாலேவும், மருத்துவமனைகளிலிருந்து சமூகத்துக்குள் பரவும் கொரோனா தொற்றுக்கான அபாயம் குறைந்துவிடும்.
கொரோனா பரவலை பொறுத்தவரை, இன்னும் இரண்டாண்டுகளுக்காச்சும் இதன் தாக்கம் உலகம் முழுவதும் இருக்கும். இருப்பினும், இதுவரை நாம் பார்த்த அளவுக்கு சூழல் மோசமாக இருக்காது. சற்றே கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். கொரோனா முழுமையாக கட்டுக்குள் வரும்வரையில், இந்தப் பரவல் அதிகம் ஏற்படும் இடங்களுக்கான பட்டியலில் மருத்துவமனைகள் தான் முதலிடத்தில் இருக்கும். ஆகவே, இன்னும் இரண்டாண்டுகளுக்கு மேற்சொன்ன அனைத்தையும் பொதுமக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்”என்றார் அவர்.
விழிப்போடு இருந்து, கொரோனாவிலிருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் நாமே தற்காத்துக் கொள்வோம்!