செலவை குறைத்த இந்தியர்கள்-‘கொரோனா உபாயம்’

உலக அளவில் பல்வேறு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா இந்தியாவில் சில நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஆம் கொரோனா காலத்தில் 90 விழுக்காடு இந்தியர்கள் சிக்கனதாரர்களாக மாறியுள்ளனர். இந்த சுவாரஸ்ய தகவல் ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

2020 ஆம் ஆண்டு தொடங்கியபோது தொலைக்காட்சி நேரலைகளில் பங்கேற்ற பல ஜோஸ்யர்கள் இந்த ஆண்டு ஆகா… ஓகோ என இருக்கும் என்று சிலாகித்தனர். ஆனால் ஆண்டு தொடங்கி சுமார் 60 நாட்களுக்குள்ளாகவே உலகம் முழுவதும் கொரோனா என்னும் அரக்கன் தனது கோரத்தாண்டவத்தை தொடங்கிவிட்டான். லட்சக்கணக்கில் உயிர்களை பலி வாங்கிய இந்த நோய்தொற்று உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்தது. இதனால் உலக இயக்கமே முடங்கிப் போய் பெரும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டது. மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல் சாலையோரக் கடைகள் வரை அனைத்தும் மூடப்பட்டன. இதனால் கோடீஸ்வரர்கள் முதல் சாமானியர்கள் வரை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டனர். அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் சாமானியர்கள் பாடு படு திண்டாட்டமாகிப் போனது. இது போன்ற விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்திய கொரோனாவால் சில நன்மைகளும் விளைந்திருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா?. ஆம் .. உலகளாவிய பொது முடக்கத்தால் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. வாகன இயக்கங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் உலக அளவில் சுற்றுச்சூழல் மாசு பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது. இந்தியாவில் சுற்றுச்சூழல் தூய்மை 60 விழுக்காடு அளவு முன்னேறியுள்ளதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. இதே போல் மற்றொரு முக்கியமான நன்மையும் கொரோனாவால் ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் இந்தியர்களின் தனி நபர் சராசரி வருமானம் மிக குறைந்த அளவில் இருந்தாலும் செலவு செய்வதில் இந்தியர்கள் சளைத்தவர்கள் இல்லை. இதனால் சேமிக்கும் பழக்கம் இந்தியர்களிடம் மிகக்குறைவு. ஆனால் இந்த கொரோனா காலத்தில் 90 விழுக்காடு இந்தியர்கள் தங்கள் செலவை வெகுவாக குறைத்துள்ளதாக ஒரு ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. கொரோனா காலத்தில் மக்களின் செலவு குறித்து ஸ்டாண்டர்ட் சாட்டர்டு வங்கி உலக அளவிலான ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் பங்கேற்ற 76 விழுக்காடு இந்தியர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செலவையும் இது தனக்கு தேவையா, அவசியமா என ஒரு முறைக்கு இரு முறை மிக கூர்மையாக ஆராய்ந்த பிறகே மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர். அதேவேளை தாங்கள் மேற்கொள்ளும் செலவு மீதான மறுசீராய்வை உன்னிப்பாக மேற்கொண்டதாக உலக அளவில் 62 விழுக்காடு மக்கள் கூறியுள்ளனர். பொதுமுடக்க காலத்தில் எந்த வகையான ஷாப்பிங் செய்தார்கள் என ஹாங்காங், இந்தியா, இந்தோனேசியா, கென்யா, சீனா, மலேசியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், தைவான், சவுதிஅரேபியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 12 ஆயிரம் இளையோரிடம் 12 வகையான சந்தை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சர்வேயில், 78 விழுக்காடு இந்தியர்கள் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு திரும்பியிருப்பதாக கூறியுள்ளனர். மேலும் இந்த கொரோனா பொதுமுடக்க காலத்தில் பணமில்லா பரிவர்த்தனைக்கு(Casless Spending) திரும்பியுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் நுகர்வோர் மிக அத்தியாவசிய தேவைகளான உணவு, மளிகை, மருந்து பொருட்களுக்கு மட்டுமே தங்கள் செலவில் அதிக முக்கியத்துவம் தருவதாகவும், அநாவசிய செலவுகளை பெரும்பாலும் தவிர்த்து விடுவதாகவும் கூறியுள்ளனர். பொதுமக்களின் செலவு மீதான நேர்மறை மனோநிலை இன்னும் குறைந்தது ஐந்து வருடங்களுக்காகவது நீடிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனாவால் கடும் நெருக்கடியை சந்தித்துள்ள உலக பொருளாதாரம் பொதுமக்களின் இந்த மனநிலை மாற்றத்தால் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. அநாவசிய செலவுகளை மக்கள் குறைத்துக் கொள்ளும் போது சேமிப்பில் கவனம் கூடும். இதனால் சிறிய அளவில் இருந்து பெரிய அளவில் வரையிலான முதலீடுகளில் மக்களின் ஆர்வம் கூடும். இது பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மிக நல்ல ஆரம்பம். ஐந்து வருடங்களுக்கு மட்டுமல்ல நிரந்தரமாகவே மக்கள் தாங்கள் செய்யும் செலவுகளை ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செய்ய ஆரம்பத்தால் தனி மனித பொருளாதார நிலையும் தன்னிறைவடையும். மூன்றாந்தர மற்றும் கீழ் அடித்தட்டு மக்கள் நிறைந்துள்ள நம் இந்தியா போன்ற நாடுகளுக்கு இந்த மாற்றம் மிகப் பெரிய முன்னேற்றத்தை கொண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை. அடி உதவுது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள் என தமிழில் ஒரு பழமொழி உண்டு. அது தற்போது உண்மையாகியுள்ளது. செலவைக் குறைப்போம்… சேமிப்பை அதிகரிப்போம் என எவ்வளவோ முறை சொன்னாலும் கேட்காத நம் செவிகளில் கொரோனா விட்ட அறை நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்ந்தால் நாமும் உலக அரங்கில் பொருளாதார தன்னிறைவை மிக விரைவில் எட்டிவிடுவோம் என்ற நம்பிக்கை துளிர்த்துள்ளது.

நன்றி:சுரா

Exit mobile version