பஞ்சு மிட்டாய் என்றாலே குழந்தைகளுக்கு மட்டுமில்ல, பெரியவர்களுக்கும் மிகவும் விருப்பமான ஒன்று. அதன் வண்ணமும், மிருதுத் தன்மையும், இனிப்புச் சுவையும் உடனே சுவைக்கத் தூண்டும். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக பஞ்சுமிட்டாய் குறித்து வரும் செய்திகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன. இதையா இத்தனை நாட்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்தோம் என்கிற அச்சம் மேலிடுகிறது. புதுச்சேரி மற்றும் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிரமான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்பெல்லாம் ரோஸ் கலர் நிறத்தில் மட்டுமே கிடைத்து வந்த பஞ்சுமிட்டாய் தற்போது பல்வேறு வண்ணங்களில் கிடைக்கின்றன. காரணம் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் இருக்கும் பொருட்களின் மீது குழந்தைகளுக்கு எப்போதுமே ஆசை மேலோங்கும். அதனடிப்படையில் நிறத்திற்காக பல்வேறு இரசாயனங்கள் சேர்க்கப்பட்டு விற்பனையாகி வந்திருக்கிறது. நிறமி கூட்டப் பயன்படும் இந்த இரசாயங்கள் புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு கொணடு போய் விடுவதாக கண்டறிப்பட்டுள்ளது. புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் இது குறித்த ஆய்வுகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் பத்துக்கும் மேற்பட்ட பஞ்சுமிட்டாய் விற்பனையாளர்களை அழைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதிஷ் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது. ஆபத்திற்குரிய இரசாயனங்கள் விற்கப்படும் கடைகளிலும் சோதனை நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.