உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கொரனோ வைரஸ். மக்கள் அனைவரும் கொரனோவுக்கான தடுப்பு மருந்து எப்போது வரும் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.நாம் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த தடுப்பு மருந்தும் ஒரு வழியாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சீரம் நிறுவனத்தின் கோவிட்ஷீல்டு மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் இந்திய நிறுவனங்கள்.
ஜனவரி 16ஆம் தேதி முதல் இந்த இரண்டு தடுப்புசிகளும் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களான துப்புரவு தொழிலாளர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் போடப்பட்டது. தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் முதன் முதலில் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. இந்நிலையில் கொரனோ தடுப்பூசியை போட்டுக்கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். தடுப்பூசியால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் தான் காரணம்.
இதுவரை, 6 மாவட்டங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 17,072 பேர்களில் 447 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. அவர்களில் 4 பேருக்கு மட்டுமே மருத்துவமனை சிகிச்சை தேவைப்பட்டது. 3 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்று விட்ட நிலையில் ஒருவர் மட்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர் கண்காணிப்பில் உள்ளார். அவரும் இயல்பாக உள்ளதாக கூறப்படுகிறது.
உத்திரபிரதேச அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் கொரனோ தடுப்பூசி போடப்பட்ட பின் உயிரிழந்துள்ளது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் முராதாபாத்தின் அறுவைசிகிச்சை பிரிவில் வார்டு பாயாக பணியாற்றி வருபவர் மஹிபால் சிங். கொரனோ தடுப்பூசி போடப்பட்ட மறுநாள் உயிரிழந்துள்ளார். திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு நெஞ்சுவலியும் அதிகமாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரனோ தடுப்பூசி போட்டுக் கொண்ட அன்று இரவு மஹிபால் வழக்கம் போல இல்லை எனவும், காலை லேசான காய்ச்சல் ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் இதுவரை இப்படி உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பதே ஆறுதலாக உள்ளது.
இந்தியாவின் இரண்டு நிறுவனங்களின் கொரனோ தடுப்பூசி மருந்துகளும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனையில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.