ஆஸ்திரேலியா அணியை ஆட்டம் காண செய்யும் ஆட்டநாயகன்..இந்திய வீரர் நடராஜனின் தொடர் பயணம்..

ஒரு சிலர் வாழ்க்கையில் பெரிதாக வெற்றி பெறும் போது தான் அந்த வெற்றி நமக்கே ஏற்பட்ட நிகழ்வு போல் மனம் மகிழ்ச்சி அடையும்.அப்படித்தான் இந்த சேலத்தை சேர்ந்த நடராஜன் வெற்றி நமக்கே உரித்தானதாக மாறியது.தமிழகத்தில் இருந்து எத்தனையோ தமிழக வீரர்கள் இந்திய அணியில் தடம் பதித்தாலும் நடராஜனின் தடம் தமிழகத்தில் அனைத்து நடுநிலை குடும்பத்தை சார்ந்த ஒவ்வொரு இளைஞனின் வெற்றியாகவே கருதப்பட்டது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டியில் நடராஜன்,ஆஸ்திரேலியா வீரர் லபுசனே விக்கெட்டை வீழ்த்திய போது அதுவே அவரது சர்வதேச போட்டிகளின் முதல் விக்கெட்.அப்பொழுது நடராஜனுக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சியை விட 100 மடங்கு மகிழ்ச்சியை தமிழக நடுநிலை குடும்பத்தை சார்ந்த ஒவ்வொரு இளைஞர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கொண்டாடினர்.அடுத்த இரண்டு நாட்களில் சமூக ஊடகங்களில் நடராஜன் மட்டுமே ஹீரோவாக திகழ்ந்தார்.யார் இந்த நடராஜன் ? அவரது வெற்றி ஏன் நமது வெற்றி? வாருங்கள் பார்க்கலாம்..

சேலம் சின்னப்பம்பட்டி முதல் ஆஸ்திரேலியா அணி வரை நகர்ந்த நடராஜன்,ஜொலித்த இடம் தமிழகத்தில் நடக்கும் TNPL கிரிக்கெட் தொடர் தான்.2017 ம் ஆண்டு தனது தனித்திறமையினால் அந்த தொடரில் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணிக்காக களம் இறங்கி மற்ற அணிகளுக்கு சிம்ம சொற்பனமாய் திகழ்ந்தார்.அதன் பிரதிபலனாக அந்த வருடம் நடக்க இருந்த ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்காக 3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த நடராஜன் சிறுவயது முதலே அரசு பள்ளியில் படித்து முறையான எந்த ஒரு பயிற்சியும் எடுக்காமல் தனது 21 வயதில் தான் ஸ்டிச் பால் என்று அழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் பந்தை கையில் எடுத்தார்.இப்படிப்பட்ட ஒருவர் தான் இன்று ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்களுக்கு எதிரியாக இருக்கிறார்.

தங்கராசு-சாந்தா தம்பதியினருக்கு மகனாக பிறந்த இவர்.ஆரம்பம் முதல் வறுமையால் வாடினார்.5 வயதில் கையில் தூக்கிய டென்னிஸ் பந்தை 20 வயதில் தான் கீழே போட்டார்.ஜெயபிரகாஷ் என்ற பயிற்சியாளர் மூலம் தனது 21 வயதில் சென்னையில் உள்ள ஒரு கிரிக்கெட் கிளப்பில் இணைக்கப்பட்ட நடராஜன்.அவரது தொடர் விடாமுயற்சியால் 2014 ம் ஆண்டு தமிழக ரஞ்சி அணியில் சேர்க்கப்பட்டார்.விளையாடிய முதல் போட்டியிலேயே இவரது பந்துவீச்சில் சர்ச்சை கிளம்ப,ஓராண்டு தமிழக அணியில் இருந்து விலக்கப்பட்டார்.அதன்பிறகு மீண்டும் தமிழ்நாடு ரஞ்சி கோப்பை போட்டியில் 2016\17 விளையாடி அசத்தினார்.

2017ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக களமிறங்கிய நடராஜன் 6 போட்டிகளில் விளையாடி வெறும் 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.அப்பொழுது அந்த அணியின் கேப்டனாக இருந்த மேக்ஸ்வல் ஆங்கிலத்தில் உரையாற்ற,தன் தாய் மொழி தமிழை தவிர வேறுமொழியை அறியாத நடராஜன் திணறியது நாம் அனைவரும் அறிந்ததே.அந்த வருட மோசமான பந்துவீச்சால் அந்த அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார்.
அப்பொழுது பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் நடராஜனிடம் ஆங்கிலம் பொறுமையாய் கற்று கொண்டாலும் பரவாயில்லை. ஹிந்தியாவது சீக்கிரம் கற்றுக்கொள்.அது உனது வருங்கால பயணத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று அறிவுரை வழங்க,அதுவும் நடராஜனுக்கு பெரும் சவாலாகவே இருந்தது.

கிராம புறங்களில் தமிழ் மொழி மட்டுமே அறிந்து அதிகபட்சமாக சென்னை வரை வந்து கிரிக்கெட் விளையாடிய ஒருவருக்கு இந்த இரண்டு மொழியின் தேவை எட்டா கனியாகவே இருந்தது.அடுத்த இரண்டு ஆண்டுகளில் தோள்பட்டை காயம் காரணமாக ஐபிஎல் தொடர்களில் இருந்து வெளியேற,2019 ம் ஆண்டு ஹைதராபாத் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட நடராஜன்.புவனேஷ்வர் குமார் போன்ற முன்னணி பந்து வீச்சாளர்களின் இடத்தினால் ஹைதராபாத் அணியில் முழுவதும் வலை பயிற்சியில் மட்டுமே பந்து வீசினார்.

2020 ம் ஆண்டு தான் இவருக்கு மிகவும் திருமுனையாக அமைந்தது.சென்னை அணிக்கு எதிரான ஹைதராபாத் அணி விளையாடிய முதல் போட்டியில் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற,ஹைதராபாத் அணியின் முழுநேர பந்து வீச்சாளராக களமிறங்கினார் நடராஜன்.2020 ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்கள் மட்டுமே எடுத்தாலும் இவர் எடுத்த விக்கெட்கள் அனைத்துமே முக்கியமான நேரத்தில் முக்கியமான விக்கெட்கள்.உலகம் தரம் வாய்ந்த எம்.எஸ்.டோனி,விராட் கோலி,ஏ.பி.டிவில்லியர்ஸ் போன்றவர்களின் விக்கெட்களை எளிதாக தனது யார்க்கர் பந்துகளின் மூலம் தட்டி தூக்க,அதுவே இந்திய அணியில் இடம் பிடிக்க இவருக்கு முக்கிய வாய்ப்பாக அமைந்தது.

வாழ்க்கையில் வரிசையாக தோல்வியையும்,வறுமையும் பார்த்து வந்த நடராஜன்,அன்றைய காலத்தில் காலில் அணிய காலனி இல்லாமலும்,சேலத்தில் இருந்து சென்னை சென்று வர பணம் இல்லாமலும் ரயிலில் பயண சீட் இல்லாமல் கிரிக்கெட் விளையாட பயணம் சென்று வந்துள்ளார்.அப்படிப்பட்டவருக்கு இன்று இந்திய அணியில் இடம் பிடித்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு இந்திய அணியின் சொந்த பணத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அசத்தி வருகிறார்.முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பவர் பிளேவில் விக்கெட் எடுக்கமுடியாமல் திணறிய இந்திய அணி அந்த போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.அடுத்து நடந்த 3 வது ஒருநாள் போட்டியில் நடராஜன் சர்வதேச ஒருநாள் போட்டியில் கால் பதித்து அந்த போட்டிகளில் 2 விக்கெட் எடுத்து இந்திய அணியை வெற்றியடைய செய்தார்.அதுமட்டுமில்லாமல் அடுத்து நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் களமிறங்கி தனது முதல் ஐபிஎல் கேப்டனான மேக்ஸ்வல் விக்கெட்டை வீழ்த்தி மேலும் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

சர்வதேச முதல் டி-20 போட்டியில் 3 விக்கெட் எடுத்து ஒட்டுமொத்த உலகத்தையும் தன் பக்கம் திரும்ப செய்தார்.அதன் பிறகு நடந்த 2 வது டி-20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவிக்க,இந்திய பௌலர்கள் ரன்களை வாரி வழங்கி இருந்தனர்.அந்த போட்டியிலும் நடராஜன் 4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவராக இல்லாமல் ஒரு வேக பந்துவீச்சாளராக களமிறங்கி அசத்திய இவர் இப்பொழுது ஒவ்வொரு தமிழகத்தில் இருக்கும் வீடுகளிலும் தன் பிள்ளையாய் கொண்டாடுவதில் தவறு ஒன்றும் இல்லையே!

இந்த ஐபிஎல் தொடரில் அதிக யார்க்கர் வீசிய வரிசையில் முதல் இடம்.இவரது இந்த வெற்றிக்கு சேவாக்,ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் போன்றவர்கள் முக்கிய அங்கமாக திகழ்கின்றனர்.இவர்கள் நடராஜன் மீது வைத்த நம்பிக்கை தான் இன்று இந்திய அணியில் இவருக்கு ஒரு இடம்.இவர் வாழ்வில் மாறியது புது தடம்…

ஒருவரின் வெற்றிக்கு பின்னால் நிச்சயம் பல தடைக(ல்)ள் இருக்கும்.அதை ஏறி கடப்பதும்,அதனுடன் போர் தொடுப்பதும் அவரவர் மனதின் தன்னம்பிக்கையில் தான் இருக்கிறது.

முழுமனதாய் போராடு,அந்த தோல்வியை வேரோடு புடுங்கி எரியும் வரை….

கட்டுரையாளர்:மு.முகேஷ் கண்ணன்.

Exit mobile version