சென்னை, எண்ணுரில் இருக்கும் காட்டுப்பள்ளி துறைமுகம் பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம். சரி, இந்த துறைமுகத்தைப் பற்றி இப்பொழுது ஏன் பேசுகிறோம் என்று நமக்கு தோன்றலாம். ஆனால் இன்றைக்கு நேற்று இல்லை ஒரு மூன்று நான்கு வருடங்களாவே அங்கே இருக்கும் மக்களும், மாணவ அமைப்பினரும் போராட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள். நமக்கு தான் இதைப்பற்றிய அதிகமாக விழிப்புணர்வு இல்லை. அங்கே இருக்கும் மக்கள் எதற்காக போராடுகிறார்கள்? இப்பொழுது அதானி குழுமத்துக்கு சொந்தமான 330 ஏக்கர் அளவில் இருக்கும் துறைமுகத்தை 3200 ஏக்கர் என்ற அளவில் விரிவுபடுத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
சரி, விடுவுபடுத்துவதில் என்ன தவறு இருக்கப்போகிறது. நல்லது தானே இதுக்கு ஏன் போராடுகிறார்கள் என்று தோன்றலாம். விரிவுபடுத்தப் போவது நிலப்பகுதியில் இல்லை கடல்பகுதில். கடல்கரையில் இருக்கும் மணலை எல்லாம் தோண்டி ஆழப்படுத்தி விடுவார்கள். கப்பல்களை நிறுத்துவதற்கு ஏற்ற மாதிரி கரைல இருக்கும் ஆழம் இல்லாத மணல்திட்டுக்களை எல்லாம் மண்ணை போட்டு மூடி நிலப்பரப்பாக மாற்றப் போகிறார்கள்.
இந்த ஆழம் இல்லாத கடல்பரப்பில் தான் மீன், நண்டு, இறால் என கடல் உயிரினங்கள் இருக்கும்.அதுமட்டுமல்லாமல் இங்கே இருக்கும் மணல்திட்டுகள் தான் கடலிடம் இருந்து மக்களை பிரித்து வைக்கும் ஒரு கோடாக இருக்கும். பேரலைகள் வரும்போது, கடலிடம் இருந்து மக்களை காப்பாற்றுவதும் இந்த மணல்திட்டுகள் தான். இத்தகைய மணல்திட்டுகளையே மொத்தமா மணல போட்டு மூடிவிட்டால் அங்கே இருக்கும் உயிரினங்கள், மணல்திட்டுகள் எல்லாம் அழிந்துவிடும். பிறகு, ஒரு முக்கியமான விஷயம்; வெள்ளம் வரும் போது, வெள்ள நீர் அனைத்தும் இந்த வடிகால் வழியாகத் தான் கடலுக்குச் செல்லும்.
இப்பொழுது, அந்த வடிகால்களையே நாம் மணல் போட்டு மூடி விட்டால் என்ன ஆகும்? வெள்ள நீர் போக வழி இல்லாம் ஊருக்குள்ளேயே தேங்கி விடும். இதற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு சொன்னால் நன்றாக புரியும். நம் வீட்டில் தண்ணீர் கொட்டி விடுகிறது. அந்த தண்ணீர் எல்லாம் எங்க போகும்? நாம் தண்ணீர் போவதற்காக போட்டு வைத்திருக்கும் ஓட்டை வழியாக வெளியே போய் விடும். நாம் அந்த ஓட்டையை அடைத்து விட்டால் என்னாகும்? தண்ணீர் எல்லாம் வெளிய போக வழி இல்லாமல் நம்ம வீட்டிற்கு உள்ளேயே தான் இருக்கும். இதே மாதிரி தான் நாம் வெள்ளநீர் போகும் வடிகாலை அடைக்கும் போதும் குடியிருப்புப் பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கிவிடும்.
சுனாமி வரும் பொழுது, இந்த மணல் திட்டுகள் தான் கடல் அரிப்பில் இருந்து நம்மை சிறிதளவாவது காப்பாற்றும். மீன்கள், நண்டுகள், இறால்கள் எல்லாம் அழிந்துவிட்டால் அதை சார்ந்து அந்தப் பகுதியில் இருக்கும் மீனவ மக்களின் வாழ்வாதாரம் மொத்தமாக பாதிக்கும். மனிதனுக்கு உதவும் இயற்கை அமைப்பையே நாம் மாற்ற நினைக்கும் போது சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கும்.
