மைக்ரேன் எனும் ஒற்றைத்தலைவலி குறித்து நம் அனைவருக்கும் புரியும் வகையில் சிவகங்கை பொது நல மருத்துவர் Dr.ஃபரூக் அப்துல்லா அவர்கள் தெரிவித்துள்ளார் .
அவர் தெரிவித்துள்ள விவரங்கள் பின்வருமாறு:
மைக்ரேன் மிகவும் கொடியது தலையில் டம் டம்மென சுத்தியல் வைத்து அடித்தார் போல் வலிக்கும் என்று என்னை சந்திக்க வருபவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்.குமட்டல் வாந்தியும் தலைவலியுடன் சேர்ந்து கொள்ளும் வெயிலில் சென்றால் மனம் அமைதி கொள்ள மறுத்தால்சரியான உறக்கம் இல்லாமல்போனால்
சரியாக நீர் அருந்தாமல் இருந்தால் ,மாதவிடாய் காலங்களில் ,அதிக மன அழுத்தம் தரும் பணி செய்தால் இப்படி பல விசயங்கள் ஒற்றைத்தலைவலியை உண்டாக்க வல்லது.
அதில் முக்கியமான ஒன்று
“வாசனை”
ஆம்.. வேலை செய்யும் அறை / அலுவலகம் / வீடு போன்றவற்றில் யாரேனும் செண்ட் ஸ்ப்ரே அடித்துக்கொண்டு வந்தாலோ மல்லிகை முதலான கும்மென வாசனை வீசும் மலர்களை அணிந்து கொண்டு வந்தாலோ பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருள் வாசனை என இந்த வாசனைகளை சில நிமிடங்களுக்கு மேல் நுகர்ந்தால் தலைவலி ஆரம்பிக்கும் குமட்டல் வாந்தியும் ஏற்படும்.
இதுபோன்ற உபாதையுடன் இருக்கும் பல சொந்தங்கள் நண்பர்களுடன் நாம் வாழ/ பணிபுரிந்துகொண்டிருப்போம். இவர்களுக்கு தோன்றும் இந்த அறிகுறிகள் அனைத்தும் உண்மையானவை .அவர்கள் எதையும் பூதாகரமாகவோ பொய்யாகவோ கூறுவதில்லை. அவர்கள் சாதாரண வாசனையை கூட பல மடங்காக கூட்டி உணர்வார்கள். இதற்கு Osmophobia என்பது பெயர்
கூடவே தலைவலி உச்சத்தில் இருக்கும் போது சிறு வெளிச்சம் கூட அதிக வலியை உண்டாக்கும் (Photophobia)
சிறு சத்தம் கூட அதிக வலியை உண்டாக்கும் ( phono phobia )
மைக்ரேன் எனும் இந்த பிரச்சனை திடீரென மூளைக்குச்செல்லும் ரத்த நாளங்கள் விரிவடைந்து குறுகிய காலம் மீண்டும் சுருங்காமல் பிடிப்பாகிக்கொள்வதால் நேர்வதாகும் இதற்கு முறையான மருத்துவம் உண்டு. இத்தகைய ஒற்றைத்தலைவலி இருப்பவர்கள் மருத்துவரை நாடி சிகிச்சை எடுப்பது சிறந்தது.
நம்முடன் வாழும் சொந்தங்கள் / நண்பர்களுக்கு மைக்ரேன் இருக்கிறதா என்பதை அறிந்து அவ்வாறு இருப்பின் கட்டாயம் வாசனை திரவங்கள் பூசுவது/ வாசனை மிகுந்த மலர்களை அணிவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் . அல்லது தங்களது அலுவலக நண்பர்களிடத்தில் தங்களுக்கு இருக்கும் இந்த உபாதையை தெளிவாக எடுத்துக்கூறுவது மைக்ரேன் இருப்பவர்களின் கடமை.
மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டு தினமும் தலைவலியுடன் கஷ்டப்படத்தேவையில்லை.பொதுவாக அலுவலகங்களுக்கு உடல் முழுவதும் ஸ்ப்ரே அடித்துக்கொண்டு செல்வதையும் சிரம் முழுவதும் மலர் சூடிக்கொண்டு செல்வதையும் தவிர்க்கலாம். மைக்ரேன் உபாதையுடன் வாழும் நம் சகோதர சகோதரிகளுக்கு உகந்த ஒரு பணிச்சூழலை உருவாக்குவோம் .
இவ்வாறு Dr.ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.