நாள் முழுவதும் இந்த லாக்டவுனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டே இருப்பதால் சிலருக்கு கேமில் வரும் கற்பனை உலகத்திற்கும், நிஜ உலகத்திற்கும் இடையே வித்தியாசம் தெரியாமல் போகிறது. இதனால் நிஜ உலகிலும் தங்களால் யாரை வேண்டுமானாலும் அடித்து வீரத்தை நிரூபிக்க முடியும் என நினைக்கிறார்கள் என்கின்றது சமீபத்திய ஆய்வு.
வீடியோ கேமை மொழுதுபோக்குக்காக விளையாட ஆரம்பித்து பின் அதுவே வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிய பலரை நம்மால் தினமும் பார்க்க முடிகிறது. பெரியவர்களை அதிகம் பாதித்த வீடியோ கேம்கள் எல்லாம் இப்போது சிறுவர்களையும் அதிகம் பாதிக்க வைத்துள்ளது. காலப்போக்கில் அதற்கு அடிமையாகி நிஜ உலகில் அவர்களால் ஒத்து வாழ முடியாமல் போகலாம்.
சிறுவர்கள் மிகவும் இளம் வயதிலேயே வீடியோ கேமுக்கு அடிமையாவது அவர்களின் குணாதியசத்தைப் பெரிதும் பாதிப்பதாகக் கூறுகிறார்கள் உளவியல் நிபுணர்கள். “சிறுவர்கள் இது போன்ற கேம்களில் அதிக நேரத்தைச் செலவிடுவதால், குடும்பத்துடன் செலவு செய்யும் நேரம் குறைகிறது. அதனால், அவர்களின் மனநலம் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறது. அதோடு வன்முறையை அவர்கள் விரும்பவும் செய்துவிடுவார்கள். இப்போது வரும் கேம்கள் எல்லாம் துப்பாக்கி, ரத்தம் என கொடூரமானதாக உள்ளது. அதை தான் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்புகிறார்கள்.” என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
ஆனால், உலக கேமிங் துறை இதைத் திட்டவட்டமாக மறுக்கிறது. உலகின் முன்னணி நாடுகள் பலவும் உறுப்பினர்களாக இருக்கும் இந்தக் கூட்டமைப்பு, இந்த மனநல பாதிப்பானது வீடியோ கேம் ஆடும் வெகு சிலருக்கே இருப்பதாக அடித்துக் கூறுகிறார்கள். அதுவும் தனிமையில் தவிக்கும் சிலருக்கு தான் கேமிங்கால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அசால்டாக பதிலளித்து விட்டு அடுத்த கேமை உருவாக்க திட்டம் தீட்டுகிறார்கள்.
கேமிங் டிஸ்ஆர்டர் நோய்க்கு இருக்கும் ஒரே தீர்வு நம்முடைய அன்றாட நடத்தை முறைகளை மாற்றியமைப்பது மட்டுமே. இந்த மனநல பாதிப்பில் இருந்து மீள குழந்தைகளுடன் குடும்பத்தினர் அதிக நேரம் செலவிடுவது, புத்தகங்கள் படிப்பது, உடற்பயிற்சிகளில் ஈடுபட வைப்பது ஆகிய செயல்களை தொடர்ந்து செய்துவந்தால் மட்டுமே இந்த நோயில் இருந்து விடுபடலாம். லாக்டவுன் நேரத்தில் எவ்வளவு வேலைகள் இருந்தாலும், குழந்தைகளுடனும் நேரத்தை செலவிடுவது இன்றியமையாதது.
கேமால் உலகம் முழுவதும் பலர் தற்கொலை செய்து கொள்வதும், கொலை செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் பப்ஜி விளையாட அப்பாவின் வங்கிக் கணக்கில் இருந்து 16 லட்சம் ரூபாய் பணத்தை அப்கிரேட் செய்ய செலவு செய்த 11-ம் வகுப்பு சிறுவனைப் பற்றிய செய்தி எல்லாம் அச்சத்தையே உண்டாக்குகிறது. விழிப்புடன் இருப்போம், வலிமையான எதிர்காலத்தை குழந்தைகளுக்கு கொடுப்போம்.
கட்டுரையாளர் :புவனேஸ்வரி