உலக நாய்கள் மற்றும் வளர்ப்போர் தினமான இன்று (ஆகஸ்ட் 26) நாய்கள் மீது அளப்பெரிய காதல் கொண்டு அவைகளுக்காகவே தனி வீடு கட்டி வளர்க்கும் அலங்காநல்லூர் புஷ்பத்தின் பாசம் பற்றி தெரிந்து கொள்வோம்.
”நாய்களுக்கு மட்டும் பேசும் திறன் இருந்தால் நிச்சயம் மற்ற மனிதர்களோடு நட்பு வைத்திருக்க வாய்ப்பில்லை என்பார்கள். அதற்கேற்ப நம்மை வளர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தன்னிடம் இருக்கும் விசுவாசத்தை மட்டும் பரிசாக அளிப்பதில் ஐந்தறிவு ஜூவனான நம் நாய்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அப்படி சிறப்பு குணம் வாய்ந்த இந்த நாய்களை தன் பிள்ளைகள் போல் வளர்ப்போரையும், நாட்டு நாய் இனங்களை காக்கும் வகையில் கொண்டாடப்படும் தினம் தான் இன்று.
எத்தனையோ செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்த்து வந்தாலும் நம்மோடு நடைபயிற்சி முதல் விளையாடுவது வரை சந்தோஷத்தினை பகிர்ந்து கொள்வதில் நாய்களுக்கென்று தனிச்சிறப்பு உண்டு. வீட்டில் ஒரு நாய்க்குட்டி மட்டும் வளர்த்தாலே நமக்கு நேரம் போதாது.
ஆனால் நாய்களுக்காகவே ஒரு வீட்டினை கட்டி அதற்கு தேவையான உணவுகளை தயார் செய்து தன் பிள்ளைகள் போல் வளர்த்து வருகிறார் “மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த புஷ்பம் என்ற பெண்”. உலக நாய்கள் மற்றும் வளர்ப்போர்க்கான தினத்தில் அவரைப்பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
அலங்காநல்லூரை பூர்வீகமாக கொண்ட இவர், நாய்கள் மீது அளப்பெரிய காதல் கொண்டவராய் வாழ்ந்து வருகிறார். இதற்காக தன் காம்பவுண்டில் உள்ள 12 வீடுகளில் ஒரு வீட்டினை ஒதுக்கி அதில் 10க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வருகிறார்.
ஏன் உங்களுக்கு மட்டும் இந்த நாய் வளர்ப்பில் இவ்வளவு ஈடுபாடு வந்தது எனக்கேட்ட போது, ”தான் கடந்த 26ஆண்டுகளாக நாய்களை பராமரித்து வருகிறேன். தன்னுடைய மகன் மற்றும் மகள் பள்ளி பருவத்திலேயே வெளியூரில் தங்கி படிக்க தொடங்கிவிட்டனர். அதனால் தனிமையை உணர்ந்த நான் தன்னுடன் இருப்பதற்காக ஒரு நாய்க்குட்டியை வளர்க்க ஆரம்பித்தேன்” எனவும் அந்த ஒற்றை நாய்க்குட்டி தன் மீது வைத்த பாசம் தான் தற்போது 10க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வருவதற்கு காரணமாக இருப்பதாக மகிழ்வுடன் தெரிவிக்கிறார்.
அதோடு, தன்னுடைய காம்பவுண்ட் வீட்டில் இதற்காக ஒரு வீட்டினை தனியாக ஒதுக்கியதோடு, அதற்காக தனி சமையலும் செய்து வழங்கி வருகிறார். தன் பிள்ளைகள் போல் வளர்ப்பதால் இதன் உணவு மற்றும் பராமரிப்பு செலவுத்தொகையை ஒருபோதும் கண்டுக்கொள்வதில்லை என்று சொல்லும் போதே அவர் நாய்கள் மீது கொண்ட காதல் வெளிப்பட்டது. இதற்கு ஒரு படி மேல் போய், வயது முதிர்வின் காரணமாக நாய் எதுவும் இருந்து விட்டால் மனிதர்களைப்போல இறுதி சடங்கு செய்து நல்ல முறையில் அடக்கம் செய்து விடுவோம் என்று கண்கள் கலங்க தெரிவிக்கிறார் அலங்காநல்லூர் புஷ்பம். நாய்களின் மீது இவர் வைத்த பாசமும், அரவணைப்பும் இன்னும் பல ஆண்டுகள் நிச்சயம் தொடர இந்நாளில் நாமும் சேர்ந்து அவரை வாழ்த்துவோம்.
இந்த அலங்காநல்லூர் புஷ்பம் மட்டுமில்லை, உலகில் வாழும் அனைவரும் நாய்கள் மீது கொண்ட அன்பும் பாசமும் எப்பொழுதும் மாறாத ஒன்றாக தான் இருக்கும். இந்நாளில் நம் நாட்டு இன நாய்களாக சிப்பிப்பாறை, கோம்பை, இராஜபாளையம் நாய் போன்றவற்றை காக்க வேண்டும் என்ற குரலும் ஒருபோதும் இளைஞர்களிடம் வலுத்துவருகிறது.