கொரோனா, நம் வீட்டுக் குழந்தைகளை இன்னும் இன்னும் வீட்டுக்குள்ளேயே பத்திரமாக இருக்க சொல்லிக் கொண்டிருக்கிறது. அரசும், கொரோனாவின் கோரத்தாண்டவத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்க, போராடிக் கொண்டிருக்கிறது.
இத்தனை ஆண்டுகளாக இந்த நவீன யுகத்தில் வளரும் குழந்தைகள் மீது வைக்கப்பட்ட மிக முக்கியமான குற்றச்சாட்டே, அவர்கள் வெயிலுக்கே படாமல் வளர்கிறார்கள் என்பதுதான். குறிப்பாக பெருநகர அபார்ட்மெண்டில் வளரும் குழந்தைகள், அந்த நான்கு சுவற்றுக்குள், பேச ஆளின்றி, குளுகுளுவென ஏ.சி. காற்றை பெற்றுக் கொண்டு, மொபைலிலும் டிவியிலும் நேரத்தை கழிக்கின்றனர் என்று பலரும் விமர்சித்து வந்தனர். இந்த விமர்சனங்கள் யாவும், நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் உண்மையும் கூட! இந்தத் தலைமுறை குழந்தைகள், நிஜமாகவே அப்படித்தான் இருந்தனர்.
கொரோனா, இந்தச் சூழலை இன்னும் மோசமாக்கியிருக்கிறது. இதுநாள் வரை குழந்தைகளின் கைகளிலிருந்து பெற்றோர் எதைப் பறிக்க நினைத்தார்களோ, அதை `ஆன்லைன் வகுப்புகள்’ என்ற போர்வையில், இப்போது அவர்களே கொடுக்க நிர்ப்பந்தப் பட்டிருக்கின்றனர். ஆம், ஸ்மார்ட் ஃபோனைத்தான் குறிப்பிடுகிறோம். இவையாவும் குழந்தைகளை செல்போனுக்கு அடிமையாக்கும் என தெரிந்த போதிலும், இப்போதைக்கு இந்த நோய்த்தொற்று காலத்தில் வேறு வழியும் இல்லை.
சரி, நம் வீட்டு குழந்தைகள்தான் மொபைல் அடிமைகளாக இருக்கின்றார்களா என்றால், இல்லை. இந்த தொற்று நோய் காலத்தில், குழந்தைகளை விடவும், பெரியவர்களாகிய நாம்தான் அதீத மொபைல் அடிமைகளாக மாறியிருக்கிறோம். அதிலும், சிறு குழந்தைகளின் பெற்றோர்கள், மிகவும் மாறியிருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.
இதில் அதிர்ச்சிதரும் விஷயம் என்னவென்றால், இவர்களெல்லாம் தொற்றுநோய்க் காலம் வருவதற்கு முன்பாகவே, தீவிரமான மொபைல் அடிக்டாக இருந்திருக்கிறார்களாம்! இதை சொல்வது, அமெரிக்காவின் ஒரு ஆய்வு.
கடந்த வருடம், அதாவது தொற்று நோய்க் காலத்துக்கு முன்பு, அமெரிக்காவின் காமென் சென்ஸ் மீடியா’ என்ற அமைப்பு பெற்றோர் - குழந்தைகளை ஆய்வொன்றுக்கு உட்படுத்தியிருந்தது. அதன் முடிவில்,
குழந்தைகளைவிட அதிகமாக செல்போனுக்கு அடிமையாகியிருப்பது அவர்களின் பெற்றோர்கள்தாம்’ என்பது தெரியவந்திருக்கிறது. பிரச்னை என்னவென்றால், நாம் செல்போனுக்கு அடிமையாகி இருக்கிறோம்’ என்கிற புரிந்துணர்வு 45 சதவிகித பெற்றோர்களுக்கு இருக்கிறது. ஆனாலும் அந்தப் பழக்கத்திலிருந்து அவர்களால் வெளியேவர முடியவில்லை. ஆய்வாளர்கள் தரப்பில்,
செல்போன் உபயோகத்தைக் கட்டுப்படுத்த குழந்தைகளைவிடப் பெற்றோர்களே கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்கள்.
பெற்றோர்களை பொறுத்தவரை, மொபைல்ஃபோன் உபயோகத்தில், எப்போதும் குழந்தைகள்தான் தவறு என்றும், அவர்கள்தான் அதிக நேரம் மொபைலில் கழிக்கின்றனர் என்றும் கூறுவார்கள். ஆனால் மொபைல் உபயோகத்தில், குழந்தைகளை மட்டுமே குற்றம் சாட்டிவிட முடியாது என்கிறது, மேற்கூறிய அந்த அமெரிக்க ஆய்வு! இதை அவர்கள் குறிப்பிட்டு சொல்ல முக்கிய காரணம், குழந்தைகளால், அந்தச் சிறு வயதில் எதையும் சுயமாக யோசித்து, முடிவு செய்து செய்யாது. மாறாக அனைத்தையுமே பெற்றோரிடமிருந்துதான் கற்றுக்கொண்டிருக்கும். அப்படிப்பார்த்தால், அடிக்கடி செல்போன் பார்க்கும் பெற்றோரின் குழந்தைகளும் அதைத்தான் செய்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை படிப்பது, விளையாடுவதுபோல செல்போன் உபயோகிப்பதும் இயல்பான ஒரு செயல், பழக்கம். அவ்வளவுதான்.
குழந்தைகளை மூன்று வயதுக்குட்பட்டவர்கள், பத்து வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் பதின் பருவத்தினர் எனப் பிரிக்கலாம். இவர்கள் அனைவருக்குமே, அவர்களது வயதுக்கேற்ப பெற்றோர்களிடமிருந்து சில எதிர்பார்ப்புகளும் தேவைகளும் இருக்கும். உதாரணமாக, மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைக்கு, பசியும் தூக்கமுமே பிரதானம். அவை தேவைப்படும்போதெல்லாம், குழந்தையின் மனம் பெற்றோரைத் தேடத் தொடங்கும். இந்த இடத்தில்தான் பெற்றோர்கள் தவறு செய்கின்றனர். பல பெற்றோர்கள் குழந்தையின் கைகளில் செல்போனைக் கொடுத்து சமாதானப்படுத்துவார்கள். செல்போனின் இரைச்சலைக் கேட்டு வளரும் குழந்தை, நாளடைவில் மனதளவில் செல்போனோடு ‘கனெக்ட்’ ஆகிவிடும். குழந்தையின் நடத்தை தொடர்பான வளர்ச்சியில் செவிகளுக்கும் மூளைக்கும் முக்கியப் பங்கு உண்டு. பெற்றோர் சொல்வதைச் செவிகளால் கேட்டு வளரும் குழந்தை, சிறப்பான நடத்தையுடன் இருக்கும். ஆனால், நிதர்சனத்தில் இன்றைய குழந்தைகளுக்கு அது கிடைப்பதில்லை. கதை கேட்க வேண்டுமென்றால்கூட குழந்தைகள் அம்மாவைத் தேடுவதில்லை. யூடியூபைத்தான் நாடுகின்றனர். ‘கதை சொல்லிகள்’ கிடைக்காத மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைக்குப் பேச்சுத்திறனும், கற்பனைத்திறனும் கேள்விக்குறியாகிவிடுகின்றன. செல்போனின் துணையுடன் வளரும் மழலைகளுக்கு, மற்றவரின் கண்களைப் பார்த்துப் பேசும்திறன் இருப்பதில்லை. சரளமாகப் பேசும் திறனும் இருக்காது. காரணம், இவர்கள் உரையாடலுக்குப் பழக்கப்படவில்லை. பெற்றோர்கள் இவர்களுடன் செலவிட வேண்டிய நேரத்தில் டிஜிட்டல் திரைக்குள் மூழ்கியிருப்பதே இக்குற்றச்சாட்டின் பின்னணி.
ஏற்கெனவே இருந்த இந்த செல்ஃபோன் சிக்கல், இந்த பொதுமுடக்க காலத்தில் – வொர்க் ஃப்ரம் ஹோம் செட்டப்பில், இன்னும் மோசமாகி, இன்றைய சூழலில் குடும்பங்களைப் பிரிக்கும் வில்லன்களாக செல்போன்கள் மாறி இருக்கிறது. குறிப்பாக, டீன்ஏஜ் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடைவெளியை அதிகப்படுத்தியதில் செல்போனுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.
இவற்றையெல்லாம் தவிர்க்க, பெற்றோர் தரப்பிலிருந்து, குழந்தைகளோடு நேரம் செலவிடுவதற்கான வழிமுறைகளை, அவர்கள் கண்டறிய வேண்டும். அதுமட்டுமே பிரச்னையை தடுக்கும் பிரம்மாஸ்திரம்! குறிப்பாக, குழந்தைகளுக்கான கதைசொல்லிகளாக, பெற்றோர் தம்மை தாமே வடிவமைத்துக் கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் ஆன்லைன் வகுப்புகளை தவிர்க்க முடியாது என்பதால், அந்த நேரத்தில் மட்டும் குழந்தைகளுக்கு மொபைலை கொடுக்க வேண்டும். மற்ற நேரங்களில், குழந்தைகளின் உள்ளம் மொபைலை தேடாதாவாறு, அவர்களை என்கேஜ்டாக பெற்றோர்தான் வைத்திருக்க வேண்டும்!
பெற்றோர் தங்களின் குணங்களை திருத்திக் கொண்டால், நாளடைவில் குழந்தைகளையும் தங்களை திருத்திக் கொள்வர். ஏனெனில், முன்பே சொன்னது போல, குழந்தைகள் எப்போதும் பெற்றோரின் நகல்தான்!
கட்டுரையாளர்: ஜெ.நிவேதா