நெரிபடும் ஊடகக் குரல்வளை…என்னவாகும் ஜனநாயகம்?…..

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் தலைமைப்பொறுப்பில் இருக்கும் குணசேகரன் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அதே தொலைக்காட்சியில் பணியாற்றும் ஆசிப் முகமது பணிவிலக நிர்பந்திக்கபட்டிருக்கிறார். இது ஊடக சுதந்திரத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  

அண்மைக் காலங்களில் தமிழகத்தில் ஊடகங்கள் மீதான தாக்குதல் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. ஊடகத் தலைமைகள் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரியது. இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் தீப்பிடித்தது போன்ற பரபரப்பு. ஏனென்றால் மாரிதாஸ் என்ற ஒருவர் தமிழ் முன்னணி ஊடகங்களில் பணியாற்றும் சிலர் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் குணசேகரன் குறித்தும், அதே தொலைக்காட்சியில் பணியாற்றும் ஆசீப் முகமது மற்றம் சில ஊழியர்கள் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தார் மாரிதாஸ்.

மாரிதாஸ் ஏன் இப்படிப்பட்ட விமர்சனத்தை முன்வைக்கிறார். அதன் பின்புலம் என்ன? கடந்த 2018ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் நடிகர் எஸ்.வி.சேகர் ஊடகங்களில் பணியாற்றும் பெண்கள் குறித்து மிகவும் அருவறுக்கத்தக்க வகையில் சில கருத்துகளை பதிவிட்டிருந்தார். இதற்கு பல்வேறு ஊடகவியலாளர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அப்போது பற்றிய தீ இப்போது கொழுந்துவிட்டு எரிகிறது. ஊடகத்தின் குரல்வளையை அதிகாரத்தின் கரம் கொண்டு நெரிக்கும் செயலை தற்போது சிலர் முன்னெடுத்து வருகிறார்கள். ஆனால் அதற்கு சில நேர்மையான ஊடகவியலாளர்களும் பலியாவது தான் வேதைனயின் உச்சம்.

மாரிதாஸ் தனது பதிவில் குணசேகரனின் பின்புலம் திராவிட கழகம் என்றும், அதனால் அவர் தொடர்ந்து இந்துக்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டும் பேசியும் வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். எங்காவது மறைமுகமாகவோ, நேர்முகமாகவோ இந்துக்களை தாக்கும் விதமான கருத்துகளை குணசேகரன் பேசியிருக்கிறார் என்பதை இவர்கள் ஆதாரத்துடன் முன்வைக்க முடியுமா? ஆட்சியாளர்கள் கருத்தியல் ரீதியிலும், வெகுஜன விரோதமாகவும் முடிவெடுக்கும் நேரங்களில் அவற்றை சுட்டிக் காட்டுவதும், தட்டிக்கேட்பதும் தான் ஊடகத்தின் தலையாய கடமை. எதற்காகவும், யாருக்காவும் சமரசம் செய்து கொள்ளாமல் அந்தக் கடமையை செய்து வருகிறார் குணசேகரன். ஆட்சியில் யார் இருந்தாலும் அவர்கள் தவறை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

குறிப்பாக நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோது அதனால் கிராமப்புற, ஏழை மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என பல்வேறு விவாதங்களை நடத்தியவர் குணசேகரன். ஒக்கி புயல் தாக்கத்தின் போது வாழ்விழந்த மீனவர்களின் நிலை மீது ஊடக வெளிச்சம் பாய்ச்சியவர் குணசேகரன். எதையும் இட்டுக்கட்டி சொல்லவில்லை அவர். நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டியிருந்தார். தன் கடமையைச் செய்தார். அதற்காக குணசேகரன் இந்துக்களுக்கு எதிராகவும், வலதுசாரி அமைப்புகளுக்கு எதிராகவும் பரப்புரை மேற்கொள்கிறார் என்பது வடிகட்டிய முட்டாள்தனம்.

இதே போல் தான் ஆசிப் முகமது, ஜீவானந்தம், நெல்சன் சேவியர், செந்தில், கார்த்திகை செல்வன் போன்ற ஊடகவியலாளர்கள் மீதும் சேற்றை வாரியிறைத்திருக்கிறார் மாரிதாஸ்.

இவர்கள் அனைவர் மீதான குற்றச்சாட்டாக மாரிதாஸ் குறிப்பிடுவது இவர்கள் அனைவரும் திராவிட சிந்தனையுள்ள திமுக ஆதரவாளர்கள் என்பது தான். அவர் குறிப்படுவது போலவே இவர்கள் அனைவரும் திராவிட சிந்தனையுள்ளவர்கள் தான் என்றாலும் கூட அதில் என்ன தவறு இருக்கிறது. ஊடகங்களில் பணியாற்றுபவர்களுக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்க கூடாதா? பொதுமக்கள் எதை உண்ண வேண்டும், எதைப் படிக்க வேண்டும் போன்ற அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல்களை தொடர்ந்து பொதுமக்கள் இதைத் தான் சிந்திக்க வேண்டும் என்ற கருத்தியல் வன்முறையும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கிறது. இது ஆரோக்கியமான போக்கு இல்லை என்பதை சமூகத்திற்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

வலதுசாரி சிந்தனையுள்ளவர்கள் நாட்டில் இருக்கும் போது இடதுசாரி சிந்தனையுள்ளவர்கள் இருக்கக் கூடாதா?பாஜகவை ஆதரிப்பவர்கள் ஊடகங்களில் இருக்கும் போது திமுகவை ஆதரிப்பவர்கள் இருக்கக் கூடாதா?. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவின் போது வட இந்திய ஊடகவியலாளர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது வடமாநிலங்களில் பாஜக முன்னிலை என தொடர்ந்து செய்திகள் வர வர என்னுடன் இருந்த வட இந்திய ‘ஊடகவியலாளர்கள்’ கொண்டாடித் தீர்த்தார்கள். எனக்கு ஆச்சரியம்….அப்படி ஒரு மகிழ்ச்சி அவர்கள் முகத்தில். இதற்காக அத்தனை ஊடகவியலாளர்கள் மீதும் பாஜக ஆதரவாளர்கள் என காழ்ப்புணர்ச்சியுடன் குற்றம் சாட்டுவதா?. அரசியல்வாதியாக பொதுவாழ்க்கைக்கு வந்தவர்கள் விமர்சனத்திற்கு அஞ்சக் கூடாது. மேலும் சகித்துச் செல்லும் மனப்போக்கு கொண்டிருக்க வேண்டும். ஆனால் சிலர் தன் மீது குற்றம் சொல்பவர்கள் மீது சேற்றை வாரியிறைப்பது எதிர்மறை அரசியல்.

இப்போது ஏன் இந்த விவகாரம் பெரிதாக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இதற்குப் பின்னாலும் அரசியல் இருக்கிறது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் முக்கிய ஊடகங்களின் தலைமைப் பொறுப்பில் இருந்தாலோ, பணியாற்றினாலோ யாரோ சிலருக்கு நட்டம். அவர்கள் இல்லாவிட்டால் தாம் நினைப்பதை சாதிக்க முடியும் என்பது சிலரின் எண்ணம். தமிழ்மண்ணில் திராவிட சிந்தனை ஒவ்வொருவர் மனதிலும் தெரிந்தோ தெரியாமலோ புரையோடிக் கிடக்கிறது. அதை வேரறுக்க முடியாது. தமிழன் கம்யூனிஸ்டாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் திராவிடத்தின் படிமம் எங்கோ ஒரு மூலையில் இருக்கத்தான் செய்யும். அதை மறைக்க முடியாது. திராவிட சிந்தனைக்கு எதிராக நேரடியாக அரசியல் செய்ய முடியாத சிலருக்கு ஊடகம் என்னும் வாகனம் தேவைப்படுகிறது. அதனால் ஊடகத்தின் தன்மானம் குறையாமல் இழுத்துச்செல்லும் சிலரை காவு கேட்கிறார்கள். இதை அனுமதிப்பது நம் சவக்குழியை நாமே பறிப்பதற்கு சமம். நம்மை சிதைக்க நாமே விறகு அடுக்குவதற்கு சமம்.

நாம் எப்படியான நெருக்கடியில் இருக்கிறோம் என்பதற்கு சான்றாக ஒருவரின் ட்விட்டர் பதிவை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கிஷோர் கே சாமி என்பவரின் ட்விட்டர் பதிவு. அதில் மிக நேரடியாக, திமிராக மிரட்டல் விடுத்திருக்கிறார் அவர். கார்த்திகை செல்வன் அடுத்து நீ. ஒட்டுமொத்த இடதுசாரிகளும் உனக்கு ஆதரவாக இருக்கலாம். ஆனால் நீ எப்படி வேட்டையாடப்படப் போகிறாய் என்று பார். கொஞ்சம் கருணையை எங்களிடம் எதிர்பார்த்தால் நீயாக விலகிவிடு. எப்படியிருந்தாலும் நீ ஊடகத்திற்கு இழிவு. எப்படிப்பட்ட எதேச்சதிகார மனநிலை இருந்தால் ஒருவருக்கு இப்படி பொதுவெளியில் மிரட்டல் விடுக்க முடியும்? கார்த்திகைசெல்வனுக்கும், கிஷோர் கே சாமிக்கும் பங்காளிச் சண்டையா என்ன? கார்த்திகை செல்வனால் அவர் பாதிக்கப்பட்டாரா? பின் கார்த்திகை செல்வன் மேல் ஏன் இவ்வளவு வன்மம் கிஷோருக்கு. நேர்மையுடன் ஊடகப் பணியாற்றுவது தவறா?

ஆட்சியாளர்கள் தவறிழைத்தால் சுட்டிக்காட்டாமல், வாய்மூடி மவுனமாய் இருப்பது சமூகத்திற்கு செய்யும் துரோகமல்லவா?. இங்கே கிஷோர் கே சாமி யார், அவர் பின்புலம் என்ன என்பது பற்றி நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை. அதைப்பற்றிய கவலையும் நமக்கு வேண்டாம். ஆனால் ஊடகத்தின் குரல்வளை நெறிக்கப்படுவதை யாரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இப்படி வெளிப்படையாக மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது அரசும் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன் என்பது தான் புரியாத புதிர். யார் தவறு செய்தாலும் ஒரு தலைப்பட்டசமில்லாமல் ஆய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

“தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்

சொல்லலும் வல்லது அமைச்சு”- என்கிறார் வள்ளுவர். எதையும் நன்கு ஆய்ந்து அறிதலும், ஆராய்ந்த பிறகே செய்தலும், எதையும் ஒருதலைப்பட்சமாக செய்யாமல் இருத்தலுமே நல்ல அரசு என்பது வல்லுவன் வாக்கு. ஊடக சுதந்திரத்தையே காப்பாற்ற முடியாவிட்டால் நாம் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என பொதுமக்கள் நினைக்கத் தொடங்கினால் அதன் விளைவு வரும் தேர்தலில் விடியும். ஆட்சியாளர்கள் கவனத்திற்கு…

சுரா-

Exit mobile version