கொரோனா பாதித்தால் என்ன பாடியே ஓட்டிவிடுவேன்…. கலக்கும் திருமூர்த்தி

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மையத்தில் தனிமை படுத்தப்பட்ட நிலையிலும், உடன் இருக்கும் கொரோனா பாதித்தவர்களை உற்சாகப்படுத்தி வரும் பார்வையற்றவரான மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி தான் தற்போது சமூக வலைதளத்தில் ஹாட் டாபிக்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த திருமூர்த்தி, பிறவியிலேயே கண் பார்வை இல்லாத மாற்று திறனாளி. இவரின் தாயார் கடந்த ஆண்டு சர்க்கரை வியாதியால் உயிரிழந்தார். பிறவியிலேயே பார்வை இல்லை என்றாலும், நல்ல குரல்வளத்துடன் இசைத்திறன் கொண்டவர் திருமூர்த்தி.

இயற்கையிலேயே நல்ல குரல் வளத்துடன் பிறந்ததால் திருமூர்த்தி அந்த கிராமத்தில் தனது பாடல்திறன் மூலம் அங்குள்ள மக்களின் செல்ல பிள்ளையாக வளர்ந்து வருகிறார். அங்கு உள்ள அனைத்து வீடுகளிலும் சாப்பிட்டு செல்ல பிள்ளையாக வலம் வரும் 17 வயதே ஆன திருமூர்த்தி 200-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை சரளமாக பாடுவார்.

திருமூர்த்தி தனது சிறுவயதில் கொட்டங்குச்சி மூலம் வாசித்துக்கொண்டே பாட துவங்கினார். பின்னர் வீட்டில் உள்ள பாத்திரங்கள், குடம் போன்று கையில் கிடைக்கும் பொருட்களை இசைக்கருவியாக மாற்றும் வல்லமை படைத்த அவர், இங்கு உபயோகிப்பது தண்ணீர் கேன்.

தனது குரல் வளத்தால் அனைவரையும் ஈர்க்கும் இவர், அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலை பாடியதன் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார். அவரது பாட்டை அப்பகுதியில் வசிக்கும் இளைஞர் அருண்குமார் என்பவர் தனது செல்போனில் பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த அஜித் ரசிகர் மதன் குமாருக்கு அனுப்பியுள்ளார். பெங்களூரில் பணி புரியும் மதன் குமார் அந்த பாடலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

இதனை ஏராளமான அஜித் ரசிகர்கள் பல்வேறு சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ பதிவு செய்த சில மணி நேரங்களில் உலகம் முழுவதும் பரவியது. அவ்வாறு சமூக வலைதளத்தில் டிரென்ட் ஆன இந்த வீடியோவை பார்த்த இசையமைப்பாளர் டி.இம்மான் திருமூர்த்தி தொடர்பு எண்ணை கேட்டிருந்தார்.

இதனை அடுத்து திருமூர்த்தியை செல்போனில் அழைத்து பேசிய அவருக்கு பாராட்டு தெரிவித்ததுடன், ஜீவா நடிப்பில் வெளியான சிறு படத்தில் தனது இசையில் செவ்வந்தியே என தொடங்கும் பாடலை பாட வாய்ப்பளித்தார். பாடலும் சூப்பர் டூப்பராக வெற்றிபெற்றது.

தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் வெளியில் எங்கும் செல்ல முடியாமல், தனது வீட்டிலேயே திருமூர்த்தி முடங்கி கிடந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதியானதால், அவர் பர்கூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் ஒதுக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடன் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சிகிச்சை மையத்தில் பெரும்பாலான நேரங்களில் திருமூர்த்தி அங்குள்ள வாட்டர்கேன் மற்றும் பல் துலக்க பயன்படுத்தப்படும் பிரஸ் மூலம் இசை அமைத்து பாடல்களை பாடி ,அங்குள்ளவர்களை அசத்தி வருகிறார்.
இவர் பாடும் பாடல்களை அங்குள்ள கொரோனா பாதித்தவர்கள் ஆர்வத்துடன் கேட்டு உற்சாகமடைந்து வருகின்றனர். அவர் பாடுவதை செல்போனில் படம் எடுத்து, கைதட்டி உற்சாகமூட்டி பாராட்டியும் வருகின்றனர்.

சமீபத்தில் காலமான எஸ்.பி.பி.யின் பாடல்களையும் பாடி அதற்கு விளக்கமும் தந்து அசத்தி வருகிறார், திருமூர்த்தி. தங்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதையே மறந்து பலரும் மகிழ்ச்சியாக இருக்க இவரது இசை உதவியுள்ளது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இங்கு வாட்டர்கேனும் இசையும் ஆயுதம் என திருமூர்த்தி நிரூபித்துள்ளார். இந்தக்காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version