திரையுலகை ஆண்ட பேரழகி..ரசிகர்களை கிறங்கடித்த காந்தக் கண்ணழகி சில்க்

தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற கவர்ச்சி கன்னி..தென் இந்திய சினிமாவின் மர்லின் மன்ரோ..பெரிய இயக்குனர் படமானாலும் பெரிய ஸ்டார் படங்களானாலும் அதன் வெற்றிக்கு தன்னுடைய கவர்ச்சி நடனம் அவசியம் என்ற நிர்பந்தத்தை உருவாக்கியவர்.
100 வருட தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் கவர்ச்சியாக நடித்திருந்தபோதும் தனது காந்தக் கண்களால், கவர்ச்சி பாவனைகளால், நடனத்தால் அனைவரையும் கவர்ந்து, கவர்ச்சி கன்னி என்றால்.. இன்றும் நம் நினைவுக்கு வருபவர் நடிகை சில்க் ஸ்மிதா.

ஓர் ஓப்பனை கலைஞராக தன் வாழ்க்கையை தொடங்கி 17 வருடங்கள் இந்திய சினிமா துறையில் முத்திரை பதித்த அவரின் வரலாறு கவர்ச்சியும் கண்ணீரும் சரி விகிதத்தில் கலந்த கதம்பம்.
சில்க் ஸ்மிதா மர்மமாக மரணம் அடைந்து 21 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால்,அவரது நினைவுகள் தமிழ் ரசிகர்களை விட்டு அகலவில்லை. விஜயலட்சுமி என்பது அவரது இயற்பெயர். ஆந்திர மாநிலம் ஏலூருவில் 1960ம் ஆண்டு பிறந்தவர். இளமையில் இவருடைய வசீகரத் தோற்றத்தினால் பலருடைய தொல்லைக்கு ஆளாகியிருக்கிறார். இதனால் பெற்றோர் சில்க்குக்கு சிறு வயதிலேயே திருமணம் முடித்துவைத்தனர். பிறகு குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாக சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
சென்னையில் அவரது உறவினர் சினிமா நடிகை ஒருவருக்கு உதவியாளராக இருந்ததால், தனக்கு துணையாக சில்க்கையும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்துச் சென்று செல்வது வழக்கம். அந்த அனுபவத்தில்தான் அவர் டச் அப் கேர்ளாக வேலைக்கு சேர்ந்தார்.
அப்போதுதான் நடிகரும் இயக்குனருமான வினுசக்ராவர்த்தியின் கண்ணில் பட்டிருக்கிறார். காந்தம் போல கவர்ந்து இழுக்கும் கண்களும், வசீகரமான தோற்றமும் அதையும் தாண்டி அந்த பெண்ணிடம் ஏதோ ஒன்று இருந்ததாக பின்னாளில் ஒரு பேட்டியில் சொன்னார் வினுசக்கரவர்த்தி.

வண்டிச்சக்கரம் திரைப்படத்தில் நடித்த பின்பு இவரது கதாபாத்திரமான “சிலுக்கு” என்ற பெயரும் “ஸ்மிதா “என்ற பெயரும் இணைந்து சிலுக்கு ஸ்மிதா ஆனார். பிறகு கால போக்கில் அதுவே சில்க் ஸ்மிதா என்றானது.
வண்டிச்சக்கரம் படத்தில் சிலுக்கு என்ற பெயரில் சாராயக்கடையில் பணிபுரியும் பெண்ணாக நடித்தார். அந்தப் படம், அவரின் வாழ்க்கை சக்கரத்தை மாற்றியது.. அந்த படத்தால் கிடைத்த அடுத்தடுத்த வாய்ப்புகளை தொடர்ந்து, சினிமாவுக்குத் தேவைப்படும் நடனத்தையும் சில்க்ஸ்மிதா கற்றுக்கொண்டார். சில்க் ஸ்மிதாவின் நடனப்பாட்டு படத்தில் இருக்கிறதா என்று கேட்டு விநியோகஸ்தர்கள் படங்களை வாங்க ஆரம்பித்தனர். 80 களின் தொடக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களில் கூட சில்க் பாடல் அவசியமானதாக இருந்தது. சில்க்கிடம் ரசிகர்கள் எதிர்பார்த்தது வெறும் ஆடை குறைப்பு கவர்ச்சி நடனம் மட்டுமல்ல.சில்க்கின் ஓரப் பார்வை,போதைப் பார்வை,ஏக்கப் பார்வை என வெறும் முகபாவனைகளில் ரசிகர்களின் இதயங்களை வென்று விடுவார் அவர்.
சில்க் ஸ்மிதாவின் குழந்தைத் தனமானப் பேச்சும் பலருக்கு மயக்கத்தை தந்தது. கவர்ச்சி மொழியைப் பல்வேறு பரிணாமங்களில் வெளிப்படுத்தியவர் சில்க்ஸ்மிதா.

இதனால் அந்த காலகட்டத்தில் சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் காத்துக்கிடந்தனர். இதனால், நட்சத்திர நாயகர்களுக்கு இணையான வணிக மதிப்பு சில்க் ஸ்மிதாவுக்கு ஏற்பட்டது.
ரஜினி நடித்த மூன்று முகம், பாயும் புலி, தனிக்கட்டு ராஜா, தங்க மகன், போன்ற படங்களின் வெற்றியில் சில்க்கின் நடனத்துக்கு பெரும்பங்கு இருந்தது.
இன்னொரு பக்கம் கமலின் நேத்து ராத்திரியம்மாவும், பொன்மேனி உருகுதேவும் சிலுக்கின் மாய கவர்ச்சியையும், நடன திறமையையும் இன்றளவும் சொல்லிக்கொண்டிருக்கிறது.

சில்க் என்றாலே கவர்ச்சி பதுமை என்ற பிம்பத்தை உடைத்தெறிந்தவர் பாரதிராசா.அவரின் அலைகள் ஓய்வதில்லை படத்தில்,சில்க் ஸ்மிதா கண்ணியமிக்க அண்ணி கதாபாத்திரத்தை ஏற்றிருப்பார்.
கதாநாயகியின் காதலுக்காக தன் கணவனிடம் வாதிடும் ஆளுமை மிக்க கதாபாத்திரம் ஏற்றிருப்பார். அந்த படத்தில் சில்க் ஸ்மிதாவைப் பார்ப்பவர்கள் யாருக்கும் கவர்ச்சி நடிகை என்ற உணர்வே வராது.

பாலுமகேந்திராவின் நீங்கள் கேட்டவை திரைப்படத்திலும் சில்க்கிற்கு முக்கிய கதாபாத்திரம்.அதில் வரும் அடி ஏய் மனம் நில்லுன்னா நிக்காதடி என்ற பாடல் படத்திற்கு மிகப்பெரிய வணிக பலம்.
மூன்றாம் பிறை திரைப்படத்தில் சில்க் கவர்ச்சி வேடம் ஏற்றிருந்தாலும்,கவர்ச்சி நடனம் ஆடியிருந்தாலும்,அந்த படத்தின் முக்கிய கதாபாத்திரம் சில்க் ஸ்மிதாதான்
சில்க் என்றால் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுபவர் என்ற பிம்பத்தை உடைத்தவர்களில் பாலுமகேந்திரா முக்கியமானவர்.

சாவித்ரி போல தன் நடிப்பாற்றலால் புகழ்பெற வேண்டும் என்பதே சில்க்கின் கனவாக இருந்தது. ஆனால் அவருக்கு அப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. தன்னைத் தேடி வரும் கவர்ச்சி வேடங்களையும் அவரால் ஒதுக்கமுடியவில்லை. இதனால், அவர் மிகப்பெரிய மன அழுத்தத்திற்கு உள்ளானார். இதனால் ஏற்பட்ட வெறுப்பு அவருக்கு கடைசி வரையிலும் இருந்தது.

கவர்ச்சி பாத்திரங்களை ஏற்று நடித்த சில்க் ஸ்மிதா, தன் உடன் நடித்த நடிகர்கள், இயக்குனர்கள், தன்னை சந்திக்க வரும் பத்திரிகையாளர்கள் என அனைவருடனும் மிகக் கடுமையாக நடந்துகொள்பவராக இருந்தார். இதனால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவராகவும் இருந்தார்.
சில்க் ஸ்மிதாவின் இது போன்ற நடவடிக்கைகளுக்கு காரணமிருந்தது.அந்த காலம் முதல் இந்த காலம் வரை பெண் ஒருவர் பொது வெளிக்கு வந்து விட்டால் அவரை கிண்டல் செய்கின்ற ஆண் மொழி அனைவரிடமும் இருக்கிறது. சில்க் ஸ்மிதா இருந்ததோ திரைத்துறையில்,அதுவும் கவர்ச்சி நடிகையாக. கேட்கவா வேண்டும் இந்த ஆணாதிக்க சமூகத்தை.

சராசரி பெண்ணையே போகப் பொருளாக பார்க்கும் சமூகம்,கவர்ச்சி நடிகையை நுகர் பொருளாக மட்டுமே பாவிக்கும். ஆக,இது போன்ற அபாயங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள சில்க் தன்னை கோபக்காரியாக காட்டிக் கொள்ளவேண்டிய நிர்பந்தம் இருந்தது.
திரையிலும் போஸ்டரிலும் தன்னை ரசித்த லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு தான் ஒரு உடல் மட்டுமே என்ற வேதனை சிலுக்கு ஸ்மிதாவிற்கு இருந்திருக்கிறது.

அவருக்குள் இருந்த ஒரு ஆளுமை,சில்க் என்ற கவர்ச்சிப் பதுமையை ஏற்கவே இல்லை. அந்த மனப்போராட்டம் அவரது மரணம் வரை கூட வந்ததது.
திரை உலகே திரும்பிப் பார்க்கும் அளவுக்குப் பெரிய சர்ச்சைகளில் மாட்டுவது சில்க் ஸ்மிதாவிற்கு வாடிக்கையாகி இருந்திருக்கிறது. சிவாஜியின் முன்பு கால் மீது கால் போட்டு அமர்ந்தது சர்ச்சையாக்கப்பட்டது. அதை சிவாஜியே தவறாக நினைக்கவில்லை என்றாலும், மற்றவர்களால் தவறாகப் பேசப்பட்டது. பல நடிகைகள் பெரிய நடிகர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார்கள்.இருந்தாலும் ,ஒரு கவர்ச்சி நடிகைக்கு என்ன இவ்வளவு அகங்காராம் என்கிற பொதுபுத்தியே இது போன்ற பிரச்சனைகளை பெரிதாக்கியது.

இந்த சம்பவத்தைப் போலவே, எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு சில்க் ஸ்மிதா வர இயலாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் உண்மையில்,சிரஞ்சீவியுடன் இருந்த கடைசி நாள் படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு நிகழ்ச்சிக்கு போக முடியாததுதான் காரணம்,. உண்மை இப்படி இருக்க இந்த சம்பவங்களையெல்லாம் திரையுலகினரும், பத்திரிக்கைக்காரர்களும், சீனியர் நடிகர்களை அவமதிக்கிறார் என்று பேசி பேசியே பூதாகரப்படுத்தினர்.

இந்த குற்றசாட்டுகள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் சில்க் ஸ்மிதா குறுகிய காலத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில், 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டே இருந்தார். அவர் பெயரை வைத்தே ‘சில்க்… சில்க்… சில்க்’ என்ற படம் வெளிவந்தது. அந்த அளவிற்கு சினிமா சந்தையின் வெற்றிக் குதிரையாக சில்க் இருந்தார்.


லட்சக்கணக்கான ரசிகர்களை ஏங்க வைத்த சுமிதா, திருமணம் செய்து கொள்ளவில்லை. யாரோடும் நெருங்கி பழகாத சில்க் விழாக்களிலும், நிகழ்ச்சிகளிலும் ஒரு தாடிக்காரருடன் காணப்பட்டார்.அவர் பெயர் ராதாகிருஷ்ணமூர்த்தி. சில்க் சுமிதாவும், அவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். ராதாகிருஷ்ணமூர்த்தி ஒரு டாக்டர். சில்க் மிக பிஸியாக நடித்து கொண்டிருந்தபோது அவரின் கால்ஷீட், சம்பளம், வங்கி கணக்குகளை இந்த தாடிக்காரர்தான் கவனித்திருக்கிறார். ஆம் அவரை அப்படித்தான் பத்திரிகைகள் அழைத்தன.
பிஸியாக நடித்து கொண்டிருந்த சில்க் சுமிதா சொந்தப்படம் எடுத்தார். தெலுங்கில் இரண்டு படங்களையும், மலையாளத்தில் ஒரு படத்தையும் சொந்தமாக தயாரித்தார்.ஆனால் மூன்று படங்களுமே பெரிய தோல்வியைத் தழுவின. கையில் இருந்த பணம் எல்லாம் போய்விட்டது. இந்த அதிர்ச்சியை சில்க் ஸ்மிதாவால் தாங்க முடியவில்லை. பிறகு நடிக்க வந்தவர் கடனை அடைத்து கொஞ்சம் காசு சேர்க்க சில வருடங்கள் ஆகியிருக்கிறது.
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் சில்க் ஸ்மிதாவிற்கு 30 வயது நிரம்பியிருந்தது. வயதானாலும் பேச்சிலும்,நடிப்பிலும் அவர் கவர்ச்சி குறையவில்லை.ஆனால் போட்டிக்கு நிறைய கவர்ச்சி நடிகைகள் வந்துவிட்டனர். அவர்களுக்கு சம்பளமும் குறைவு. இதையெல்லவற்றையும் விட, 90 களில் அறிமுகமான கதாநாயகிகளே கவர்ச்சிப் பாத்திரத்தையும் சேர்த்து நடிக்க தயாராகயிருந்தனர். ஒரு வழியாக திரைத்துறையிலிருந்து விலகி தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தலாம் என்று நினைத்தபோதுதான் யாரும் எதிர்பாராத வகையில் அவரது மரணம் நிகழ்ந்தது..
1996 வருடம் செப்டம்பர் 23 ம் தேதி சிலுக்கு தன் படுக்கையறையில் தூக்கில் தொங்கினார். அவரின் மரணம் தற்கொலைதானா,அல்லது கொலையா என்ற பல்வேறு கோணங்களில் ரசிகர்கள் அலசினர்.

தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதா என்ற மந்திரப் பெயர் ஏற்படுத்திய மாயாஜாலம் இன்றளவும் கூட சிலாகித்துப் பேசப்படுகிறது. அவர் விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப இன்னும் யாரும் வரவிலலை என்பது ரசிகர்களின் தீர்ப்பு. மயங்க வைக்கும் குரலாலும்,கவர்ச்சி நடனத்தாலும் தமிழகத்தையே கட்டிப் போட்டசிலுக்கின் மரணம் ஒரு புரியாத புதிராகவே இன்றளவும் உள்ளது

திரை வாழ்க்கை வண்ணமயமாக இருந்தாலும், சில்கின் நிஜ வாழ்க்கை எத்தனை சோகமானது என்பதைஅவர் தற்கொலை செய்து கொண்டதற்கு அடுத்த நாளே நிரூபித்தது. ராயப்பேட்டை மருத்துவமனை பிணக் கிடங்கில் தேடி வந்து பார்த்து அழக் கூட யாருமற்ற நிலையில்இருந்திருக்கிறது அவரது உடல். அவரது இறுதிச் சடங்கின்போது விரல்விட்டு எண்ண கூடிய அளவிற்கே திரைதுறையினர் கலந்து கொண்டுள்ளனர். அவரின் கால்சீட்டிற்காக ஏங்கிய பல ஜாமபவான்கள் எட்டிக் கூடப் பார்க்க வில்லை என்பதுதான் சோகம்.

Exit mobile version