தூங்கா நகரின் அற்புத குளம்..!!

சாயங்காலமா எங்கேயாவது காற்றாட நடந்துவிட்டு அப்படியே சில நாட்களில் இரவு சிற்றுண்டியும் முடித்து விட்டு வருவது இன்று பலரின் வழக்கமாக ஆகிவிட்ட ஒன்று. சென்னை போன்ற இடங்களில் பீச் முதன்மையாகவும் பூங்காக்கள் அடுத்த இடங்களிலும் இந்த தேவையை பூர்த்தி செய்கிறது. மதுரையில் இந்த தேவையை பூர்த்தி செய்ய முதல் இடத்தை பிடிப்பது வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் தான்.

நான்கு புற சிறு சுவர்களும் அதை ஒட்டிய நடை பாதையும் உள்ளே உள்ள குளமும் (பெரும்பாலும் தண்ணீர் இருக்காது. தைப் பூசத்திற்கு மட்டும் நீர் வைகை ஆற்றுக்குள் இருந்து மோட்டார் வாயிலாக நிரப்பப்படும்) அதன் உள்ளே இருக்கும் மண்டபமும் கொண்ட தெப்பக்குளம் மனதை கொள்ளை கொள்வதோடு நடை பயிற்சி செய்பவர்களுக்கும், பொழுது போக்குக்காக வருபவர்களும், தனிமை நாடி வருபவர்களுக்கு பாதுகாப்பையும், அமைதியையும், ஆனந்தத்தையும் தரும் ஒரு தனி பெரும் இடமாக திகழ்கிறது.

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் தெப்பக்குளத்தின் மைய கோபுரத்தின் மேலே தெரியும் அந்த முழு நிலவை தரிசிப்பது கண்கொள்ளா காட்சி. அது மட்டுமல்லாது கார்த்திகை தீபம் அன்று அனைத்து சுவர்களிலும் உள் மாடங்கள் மற்றும் மண்டபத்திலும் தீபங்கள் ஏற்றப்பட்டு அந்த ஒளியில் தெப்பக்குளம் ஜெகஜோதியாக நிற்க அதை காண்கின்ற நம் நினைவை விட்டு என்றும் அகலா நிறைவு காட்சியாக நின்று விடும்.

அனைத்து நாட்களிலும் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களை ஈர்க்குமாறு பல விடயங்கள் இங்கு இடம் பெற்று இருக்கும். சிறுவர்களை ஈர்க்க சிறு சிறு ராட்டினங்கள் ஆங்காங்கே சுற்றிக்கொண்டிருக்க பெரியவர்களுக்கோ அங்கு உள்ள மாரியம்மன் கோயிலும், பைரவர் கோயிலும் ஆசி வழங்கிக் கொண்டு இருக்கும்.

மதுரை என்றால், பல தரப்பட்ட உணவிற்கு பஞ்சமா என்ன? அத்தனை சிறு சிறு உணவு கடைகள் குளத்தின் நாற்புறமும் நிரம்பி வழிந்து இருக்கும்.

அரிசி, கேப்பை, கோதுமை, நவதானிய வகை புட்டுகள் மற்றும் இடியாப்பத்திற்கு நாட்டு சர்க்கரை தேங்காய் பூ, தேங்காய் பால், இனிப்பு மற்றும் கார பணியாரம் சூடான தேங்காய் சட்னியுடன், பருத்தி பால், இஞ்சி தேனீர், சுக்கு காபி, தேங்காய் பருப்பு போளி, பஜ்ஜி போண்டா வகைகள், பல வகை தானிய வடைகள் இன்னும் பல நம்ம ஊரு உணவுகளும், பானிப்பூரி, சோடா வகைகள் (அதிலும் புல்சார் சோடா தனி ரகம்) பட்டர் பன், தென்னங்குருத்து, சோளம், ஃபிரைட் ரைஸ், நூடுல்ஸ், மோமோஸ், அரபியன் சுட்ட கோழி, சவர்மா, முட்டை மாஸ் ….. இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.

இது போன்ற பலதரப்பட்ட உணவுகள் சுகாதாரமாகவும் குறைந்த விலையில் நாவிற்கு ருசி ஏற்றி வயிறை கெடுக்காத வகையில் கிடைக்கும். எல்லா உணவுகளையும் சாப்பிட ஒவ்வொரு கடையிலும் கூட்டம் அலை மோதும்.

கி.பி.1645 யில் திருமலை நாயக்கர் மகால் கட்ட தேவைப்பட்ட மண்ணை இங்கு இருந்துதான் எடுக்கப்பட்டதாம். தோண்டிய இடத்தை அப்படியே மக்கள் பயன் பாட்டிற்கு ஏற்றவாறு தெப்பகுளமாக வடிவமைத்து விட்டார் மன்னர் திருமலை நாயக்கர். அதற்கான தோண்டுதல் பணி நடக்கும் போதுதான் மீனாட்சி அம்மன் கோயிலில் வீற்றிருக்கும் முக்குருணி விநாயகர் இங்கு கிடைக்க பட்டதாவும் வரலாறு சொல்கிறது. இந்த குளம் கிட்டத்தட்ட மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலின் சுற்றளவை ஒத்தது.

தைப்பூசம் அன்று தெப்பத் திருவிழா நடைபெறும். அன்று மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து மீனாட்சி அம்மன், சொக்கநாதர் உற்சவம் நடக்கும். பின்னர் மீனாட்சி அம்மனையும் சொக்கநாதரையும் தெப்பத்தேரில் ஏற்றி காலையும் மாலையும் தெப்பகுளத்தின் நீரில் சுற்றி வரவைப்பார்கள். அதை காண லட்சக்கணக்கான மக்கள் வெள்ளம் அலை மோதும். அதற்கு ஒரு மாதம் முன்னர் இருந்தே வைகையில் இருந்து இந்த மிக பெரிய குளத்திற்கு (தமிழ்நாட்டின் மிக பெரியது) நிலத்தடி குழாய்கள் வழியே குளத்தின் உள்ளே நீர் நிரப்பப்படும். தைபூசம் அன்று சிறு படகுகள் விடப்பட்டு மக்களை குதுகாலப்படுத்துவார்கள்.

அந்த காலம் முதல் இன்று வரை மக்கள் மகிழ்ச்சியாக வாழ பயன்படும் நேர்மறை அதிர்வுகள் கொண்ட இடம் இந்த தெப்பக்குளம். தொன்மையான மரபுகள் கொண்ட நகரம் மதுரை. தெப்பக்குளமும் அது மக்களுக்கு தரும் மகிழ்ச்சியும், மதுரை என்ற நகரம் இன்னும் பற்பல இடங்களால் மக்களை எவ்வாறு எல்லாம் கவரும் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

இதை எல்லாம் பேசி கொண்டே இன்றைய என் இரவு உணவே இங்கேயே முடித்துவிட்டேன். ‘மருத பக்கம் வந்தா நீங்களும் வாங்க பாஸூ. தெப்பக்குளத்துக்கு ஒரு எட்டு போய்ட்டு வந்திர்லாம்.’

கட்டுரையாளர்
மருத்துவர். நந்தினி ஆறுமுகம்

புகைப்படம்
சே.அருள்குமரன்

Exit mobile version