தொலைத்துக் கொண்டிருப்பவர்கள் தான் தேட வேண்டும் – The Great Indian Kitchen

மலையாளப் படங்களுக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளன. இதற்கு காதல் சார்ந்த படங்கள் மட்டுமல்லாமல் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை காட்சிப்படுத்தும் விதமும் தான் காரணம். இந்த வகையில் சமீபத்தில் வெளியான  ஒரு படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.  ஜோ பேபி இயக்கத்தில் ஜனவரி 15 ஆம் தேதி வெளியான ‘The Great Indian kitchen’ படம் தான் அது. 


பாரம்பரியத்தை இன்னும் கடைபிடித்துக் கொண்டிருக்கும் ஆச்சாரமான குடும்பத்திற்கு, படித்த நடனத்தில் ஆர்வமுடைய ஒரு பெண் மருமகளாக வருகிறாள். அன்றாட சமையல் வேலைகளை மாமியார் வழக்கம் போல் பார்த்துக் கொண்டிருக்க புதிதாக வந்த மருமகளும் சமையலறை ஜோதியில் ஐக்கியமாகிறாள். மாமியார் தன் பிள்ளைக்கு உதவியாக வெளிநாட்டு சமையலறைக்கு பறந்து விட, முழு சமையலறை பொறுப்பும் மருமகளிடம் வருகிறது. கதை தொடங்குவதும் இங்கே தான். மருமகள் தன்னை தொலைத்துக் கொண்டிருப்பதை உணர்வதும் இங்கே தான். 


தன் மனைவி உயர்கல்வி பட்டதாரியாக இருந்தும் வேலைக்குச் செல்ல அனுமதிக்காமல் பிள்ளைகளை கவனித்து கொள்ள வைத்ததை நினைத்து பெருமை கொள்ளும் மாமனார். அப்பன் சொல்தட்டாத பிள்ளையான கணவன். எனவே, இவளின் வேலைக்கும் ஆப்பு. 


பெண்களுக்கு  மாதவிடாய் ஏற்படும் அந்த ஏழு நாட்கள் மட்டும் சமைக்கக் கூடாதாம். ஆனால், அதே பெண் அந்த நாட்களுக்கு முன்னும் பின்னும் மட்டும் சமைக்கலாமாம். ”அது தீட்டு நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை” என்று சிலர் கூறுவது கேட்கிறது.

மாதவிடாய் நேரத்தில் பெண்களை முன்னோர்கள் தனியாக இருக்கச் சொன்னதற்கு  அவர்களுக்கு ஓய்வு வேண்டும் என்பது தான் காரணம். ஆனால், இது எப்படி ‘தீட்டு’ என மாறியது? புரியவில்லை.
 மாற்றியது யார் என்று தெரியவில்லை. ஆனால், இன்னும் இந்த தீட்டு முறை தொடர அனுமதித்துக் கொண்டிருப்பது பெண்கள் தான். 

தீண்டாமை போன்று மாதவிடாய் தீட்டை  இன்னும் கடைபிடித்துக் கொண்டிருக்கும் சில வீடுகளே இதற்கு சான்று. பெண்ணுக்குப் பெண் தான் எதிரி என்பது எந்த விஷயத்திற்கு பொருந்துகிறதோ இல்லையோ இந்த விஷயத்திற்கு பொருந்தும். 


அடுத்து சமையல். சமையல்,  அது பெண்கள் சமாச்சாரம் என்று ஒதுங்கிக் கொள்ளும் ஆண்கள் இருக்கிறார்கள். சமையல் என்றால் தானே ஒதுங்கி கொள்கிறார்கள். நமக்கு பசி எடுக்கும். பசி எடுத்தால் சாப்பிட வேண்டும். சாப்பிட வேண்டுமென்றால் சமைக்க வேண்டும் என்று சொல்லி பழக்க வேண்டும். ஏன் வேலைக்காக தனியே தங்கியிருக்கும் பேச்சிலர்கள் தங்களுக்குத்தானே சமைக்க கற்றுக் கொள்ள வில்லையா.

இந்த படத்திலும் ஒரு காட்சி தினமும் வெளியே செல்கையில் செருப்பை எடுத்து கொடுக்கும் மனைவி இல்லாத போது, தானே செருப்பை எடுத்து மாட்டிக் கொண்டு போவார் மாமனார். ஆக, பழகினால் அனைத்தும் இயல்பாகிவிடும். சமையலும் இப்படி தான். 


இங்கும் சமையலறை, மாடிப்படி, துணி துவைக்கு இடம், துளசிமாடம், விளக்கு என காட்சிகள் மாறாமல் இருக்கிறது கதாபாத்திரம் தான்  மாறுகிறது. குடும்பப் பொறுப்புகளுக்காக கனவுகளை தொலைத்து விட்டவர்களும் இருக்கிறார்கள். நம் கனவை தொலைத்து விட்டோம் என்று உணராதவர்களும் இருக்கிறார்கள்.      

 ஒரு பொருள் தொலைந்து விட்டால் தொலைந்த இடத்தில் தான் தேட வேண்டும். அதற்கு முதலில் தொலைத்துக் கொண்டிருப்பதை உணர வேண்டும். உணர்ந்த பின் வெளியில் இருந்து யாரும் வந்து உதவ மாட்டார்கள். தொலைத்துக் கொண்டிருப்பவர்கள் தான் தேட வேண்டும். The Great India Kitchen காட்டத் தவறிய இன்னொரு சமையலறை வேலைக்குச் செல்லும் பெண்களுடையது. 

Exit mobile version