சமீபத்தில் கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் மூன்றுகட்டங்களாக டிசம்பர் மாதம் 8, 10 மற்றும் 14-ம் தேதிகளில் நடந்தன. வாக்குகள் எண்ணும் பணி கடந்த 16-ம் தேதி நடைபெற்றது. அதில் ஆளும் சி.பி.எம் கட்சி அதிக இடங்களில் வென்று எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது. கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 சீட்டுகளில், சி.பி.எம் 53 சீட்டுகளை வென்று தனிப் பெரும்பான்மை பெற்றது. பா.ஜ.க 35 சீட்டுகளையும், காங்கிரஸ் 10 சீட்டுகளையும் பிடித்தன. பெரூர்கடா வார்டில் வெற்றிபெற்ற மூத்த வேட்பாளர் ஜமீலா ஸ்ரீதரன் மேயராக தேர்ந்தெடுக்கப்பட பரிசிலினை செய்யப்பட்டார். ஆனால், இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மாநிலம் முழுவதும் எழுந்தது. இதனால் கேரள உள்ளாட்சித் தேர்தலில் முடவன்முகல் வாட்டில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட, 21 வயதான கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரனை மேயராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
21 வயதில் மேயராக பொறுப்பேற்றதின் மூலம் இந்தியாவின் முதல் இளம் மேயர் என்ற பெருமையை ஆர்யா ராஜேந்திரன் பெற்றுள்ளார். சிறு வயதிலேயே சி.பி.எம் கட்சியின் குழந்தைகள் பிரிவான பாலசங்கத்தில் இணைந்து விட்ட ஆர்யா, இப்போது பாலசங்கத்தின் கேரள மாநில தலைவராகவும் உள்ளார். மேலும், இந்திய மாணவர் கூட்டமைப்பின் குழு தலைவராகவும் உள்ளார்.
சி.பி.எம் கட்சி இந்த முறை அதிக அளவு இளைஞர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்திருக்கிறது. “என்னிடம் 100 இளைஞர்களை கொடுங்கள்; இந்த நாட்டை மாற்றி காட்டுகிறேன்” என்றார் விவேகானந்தர்.ஒரு நாடு முன்னேற இளைஞர்களுக்கு ஒரு தலைவன் இருப்பதைக் காட்டிலும், அந்த இளைஞர்களையே தலைவனாக்க வேண்டும். இதைத் தான் கேரளாவில் சி.பி.எம் கட்சி செய்து காட்டியுள்ளது.