அலிபாபா நிறுவன தலைவர் ஜாக் மா இரண்டு மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அவர் எங்கே போனார் என்று தெரியவில்லை என்பது தான் உலகத்தின் தலைப்புச்செய்தி.
சரி, அது என்னங்க அலிபாபா?
சீனவர்த்தக உலகில் தவிர்க்க முடியாத ஒரு பெயர் அலிபாபா. அலிபாபாவை தெரிந்து கொள்ளவதற்கு முன் அந்த பெயருக்குப் பின்னால் இருக்கும் ஜாக் மாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அலிபாபா நிறுவனத்தை தொடங்குவதற்கு முன் அவர் ஆங்கில ஆசிரியர். அந்த ஆசிரியர் பணியும் அவ்வளவு சீக்கிரம் அவர் கைகளில் கிடைக்கவில்லை. ஜாக் மாவின் பள்ளி முதல் கல்லூரி வாழ்க்கை வரை அனைத்திலும் தோல்வி தான்.
சீனாவில் சுற்றுலா துறை வளர்ச்சி அடைந்து கொண்டிருந்ததால் வெளிநாட்டு பயணிகளும் அதிக அளவில் வர ஆரம்பித்தனர். ஆங்கிலத்தில் ஆர்வம் கொண்டிருந்த சிறுவன் மா யுன். மா யுன் என்பதுதான் ஜாக் மாவின் உண்மையானபெயர். சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களிடம் பேசி ஆங்கில அறிவை வளர்ப்பதற்காகவே 45 நிமிடம் சைக்கிளில் சென்று, அவர்களுக்கு இலவச டூரிஸ்ட் கைடாக மாறினார். அப்படி, சுற்றுலா வந்த ஒரு பயணியுடன் நட்பு ஏற்பட்டது. அவருக்கு மா யுன் என்ற பெயர் வாயில் நுழையாமல் இருக்க, ஜாக் மா என்று அழைக்க ஆரம்பித்தார். பின்னாளில் அந்த பெயரே நிலைத்து விட்டது.
சீனாவில் இணையம் என்ற சொல்லையே யாரும் அறிந்திருக்க வில்லை. ஜாக் மாவுக்கு இணையம் அறிமுகமானது அவர் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லும் போது தான். புதிதாக இணையத்தை பார்த்ததும் அதில் எதையாவது தேட நினைத்து பீர் என்று தேடியுள்ளார். அதில் எல்லா நிறுவனங்களின் பீர்களும் வந்துள்ளது. ஆனால், சீனாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் பெயர் கூட இல்லை. தன்நாட்டு தயாரிப்புகள் எதுவும் இணையத்தில் இல்லை என்பது தெரியவருகிறது. சீனாவிற்கு சென்றதும் முதல் வேலையாக china page என்ற வலைதளத்தை தொடங்கி சீனாவில் உள்ள பொருட்களை பட்டியலிட்டு சந்தைப்படுத்தினார். அதன்பின் முதலீடுகள் கிடைக்காத காரணத்தால் அந்த வலைதளம் கைவிடப்பட்டது. ஆனால் இதில் பெற்ற அனுபவம், அவரது சில நண்பர்களுடன் சேர்ந்து வீட்டிலேயே அலுவலகம் ஒன்றை தொடங்க வைத்தது. தன் நிறுவனத்துக்கு எல்லோரும் அறிந்த பெயரை வைக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கு அவர் தேர்வு செய்தது, அரேபிய கதையான அலிபாபாவும் நாற்பது திருடர்களும். அலிபாபா என்றவுடன் நாற்பது திருடர்களும், திறந்திடு சீசேவும் எல்லோருக்கும் நியாபகம் வரும். இது தான் அவரின் எதிர்பார்ப்பும். ஒரு பெயர் அனைத்து தரப்பு மக்களிடமும் நன்கு அறிமுகமாகி இருக்க வேண்டும்.
சீனாவில் உள்ள பொருட்கள் அனைத்தையும் தன் நிறுவனத்தின் மூலம் உலக சந்தையில் அறிமுகப்படுத்தினார்.படிப்படியாக முதலீடுகள் குவிய தொடங்கியதும் அலிபாபா நிறுவனம் சீனாவின் நம்பர் 1 ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக மாறியது.
இந்நிலையில், தன் நிறுவனத்தின் வளர்ச்சியை தடுப்பதாக குற்றம்சாட்டி, “சீன அரசின் வங்கி மற்றும் நிதிதுறை தன் பழமைவாதத்தை கைவிடவேண்டும்” என்று, அக்டோபர் மாதத்தில் வெளிப்படையாகவே கூறியிருந்தார் ஜாக் மா. இந்த குற்றச்சாட்டின் எதிரொலி நவம்பர் மாதத்தில் தெரிந்தது. ஜாக் மா தன் ‘ANT’ நிறுவனத்தின் புதிய பங்குகளை வெளியிட்டு 2.62லட்சம் கோடி திரட்ட திட்டமிட்டார். ஆனால், பங்குகளை வெளியிடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சீன அரசு அந்த நிறுவனத்தை தடை செய்தது. இதனால் அலிபாபா நிறுவன பங்குகளும் சரிந்தது. மேலும், சட்ட மீறலில் ஈடுபட்டதாக கூறி ஜாக் மாவிற்கு அபராதமும் விதித்தது. அவரது நிறுவனம் முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி ஜாக் மாவிடம் விசாரணை நடத்தி வருவதால் அவர் சீனாவை விட்டு வெளியே செல்லக்கூடாது என தடைவிதித்தது.
இதன் பின், ஜாக் மா பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. தன்னுடைய அறக்கட்டளை சார்பில், ‘ஆப்ரிக்காவின் வணிக நாயகர்கள்’ என்னும் நிகழ்ச்சியை ஜாக் மா நடத்தி வருகிறார். இதன் இறுதிப்போட்டியில் ஜாக் மா பங்கேற்று, வெற்றியாளர்களுக்கு 1,100 கோடி ரூபாய் ஊக்கப்பரிசு வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் 14ல் நடந்த இறுதிப்போட்டியில் ஜாக் மா பங்கேற்க வில்லை. மேலும், அந்நிகழ்ச்சியின் வலைதளத்தில் இருந்து ஜாக் மாவின் படங்களும் நீக்கப்பட்டுள்ளது. இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சீனாவை விட்டு வெளியேற தடைஇருப்பதால், ஜாக் மா எங்கே? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது அலிபாபா நிறுவனர் ஜாக் மாவிற்கும், சீன அதிபர் ஷீ ஜிங்பிங்கிற்குமான நேரடி மோதலா?
