மன்னர் ஆட்சியில் தொடங்கி 21 ஆம் நூற்றாண்டு வரை நீதிக்கேட்கும் போராட்டம் இன்னும் மீண்டப்பாடில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தன் கணவனுக்கு நேர்ந்த அநீதியை மன்னர் அவையில் வைத்து நீதி கேட்டகண்ணகி முதல் பசுமாட்டிற்கு நீதி வழங்கிய மனுநீதிசோழன் உள்பட மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் போதெல்லாம் தற்போது வரை நீதிமன்றங்கள் தான் முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது.
இதனை பெருமைப்படுத்தும் விதமாக தான் ஒவ்வொரு ஆண்டும் நீதித்துறையை போற்றும் வகையில் “சர்வதேச நீதி நாள் ஜூலை 17 ஆம் தேதி” கொண்டாடப்படுகிறது. ஏன் இந்த நாளில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது பற்றி பார்க்கலாம்!..
உலக நாடுகளில் போர்க் குற்றங்கள், இனப்படுகொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்று பல வகையான குற்றச் செயல்கள் குறித்து விசாரிக்க சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் நெதர்லாந்தில் உள்ள தி ஹேக் நகரில் செயல்படுகிறது. ஆனால் இந்த நீதிமன்றத்தை உருவாக்குவதற்கான உடன்படிக்கை என்பது இத்தாலியின் ரோம் நகரில் 1998 ஆம் ஆண்டில் இதே ஜூலை 17 ஆம் நாளில் தயாரானது.
எனவே இந்த ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதற்கான முதல் கூட்டம் உகாண்டாவின் கம்பாலா நகரில் 2010, ஜூன் 1 ஆம் தேதியினை நடந்தது. அப்போது தான் ஜூலை 17-ம் தேதியினை உலக நீதி நாளாகக் கடைப்பிடிக்கலாம் என்று ஐ.நா சபையின் மூலம் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, 2010 முதல் தற்போது வரை சர்வதேச நீதிக்கான உலக நாள் கொண்டாடப்படுகிறது.
நீதித்துறையின் தற்போதைய நிலை என்ன?
குறிப்பாக இன்றைய காலக்கட்டத்தில் நீதிமன்றங்கள் தான் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவும் அரசிற்கு வழிகாட்டியாகவும் இருந்து வருகிறது என்றால் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. பொதுவாக தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மக்களின் உரிமைக்கான போராட்டம், தாக்குதல், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அரசின் மீது அவதூறு வழக்கு போன்ற அனைத்து அடிப்படை விஷயங்களில் ஏற்படும் குறைபாடுகளை சரி செய்ய நீதிமன்றத்தினை மக்கள் சர்வ சாதாரணமாக அணுக தொடங்கினர். அதிலும் பல முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினையும் பெற்று வருகின்றனர். .
உதாரணமாக தமிழகத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது, கோவில்களில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை, தமிழகர்களின் வரலாற்று பொக்கிஷமான கீழடியினை மீட்டெடுத்தது, தற்போது கொரோனா காலக்கட்டத்தில் அரசு என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பற்றிய வழிமுறைகளை வகுப்பது போன்ற பலவற்றில் நீதிமன்றத்தில் தலையீடு அளப்பெரியதாக உள்ளது. மேலும் கிராமத்தில் பல ஆண்டுகளாக சரி செய்யாமல் கிடக்கும் அடிப்படை பிரச்சனைகளை சரி செய்வதற்கு கூட பொது நல வழக்குகளை மக்கள் நாடத்தொடங்கிவிட்டனர்.
மகாகவியின் கூற்றுப்படி, எல்லாரும் ஓர் நிறை; எல்லாரும் ஓர் விலை; எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ என்பதற்கேற்றால் போல், மண்ணில் பிறந்த எல்லோரும் சமமானவர்கள். ஆண் பெண் என்ற பாகுபாடின்றி,படித்தவர் படிக்காதவர், ஏழை பணக்காரர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதமே இல்லாமல் வாழ வேண்டும் என்பதே சட்டத்தின் விருப்பமாக உள்ளது. மேலும் நாட்டின் நடக்கும் கொடுமைகளைத் தட்டிக்கேட்க நல்ல ஆயுதமாகவும் திகழ்கிறது நீதித்துறை. எனவே இத்தகைய சிறப்பு வாய்ந்த நீதித்துறை குறித்த அடிப்படை சட்டத்தினை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்நாளில் அனைவரின் விருப்பமாக உள்ளது.