அண்ணாவை தொட்டவர்கள் மீது அம்மா வழியில் நடவடிக்கை – ஓபிஎஸ் கோபம்

கன்னியாகுமரியில் அண்ணா சிலை மீது காவிக் கொடி கட்டிய சம்பவத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் தொடர்பான மோதல்கள் முற்றும் சமயத்தில் எல்லாம், தலைவர்களின் சிலைகள் அவமதிப்பது எனும் மோசமான பழக்கம் வழக்கமாகிவிட்டது. சமீபத்திலும் கோவையில் பெரியார் சிலைக்கும், புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கும் கூட காவி சாயம் மற்றும் காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பெரியார் சிலையை அவமதித்த இளைஞர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் பேரறிஞர் அண்ணா சிலையின் பீடத்தில் மர்ம நபர்கள் சிலர் காவி கொடி கட்டிய சம்பவம் மீண்டும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் தெரிவித்து இருப்பதாவது, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலையை மர்மநபர்கள் அவமதிப்பு செய்தும் பீடத்தில் காவிக் கொடியும் கட்டிச் சென்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் பொதுவாழ்வில் ஈடுபட்டு சமூகத்திற்காக பாடுபட்ட தலைவர்களை அவமதிக்கும் வகையில், அவர்களின் சிலைகளை களங்கப்படுத்துவது, சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அம்மாவின் அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கையை எடுக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

Exit mobile version