திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாததால் 7 கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துவதால் கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்த தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. எனினும், வைரஸ் பாதிப்பும் அதன் உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், கொரோனா தடுப்பு மருந்து ஆகியவைகளின் தட்டுப்பாடுகள் நிலவி வருகின்றன. சில இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் இறக்கவும் செய்கின்றனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றி வந்த 7 நோயாளிகள் உயிரிழந்ததாகவும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் தான் இந்த உயிரிழப்பு நிகழ்ந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது முதற்கட்ட தகவல் என்றபோதிலும் இதுவரை உறுதிப்படுத்தப்பட வில்லை. இதனிடையே அண்டை மாநிலங்களில் இருந்து கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் சிலிண்டர்கள் ரயில் மூலமாக தமிழகத்தை அடைந்துள்ளன.
