சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாருக்கு 3 நாள் சிபிஐ காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை – மகன் காவல் நிலையத்திலேயே அடித்து கொல்லப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டு, அதில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு எஸ்.ஐ.க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் 2 பேர் உள்ளிட்ட 8 பேர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த வழக்கு ஆரம்பகட்டத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ போலீசார் எடுத்து கடந்த 3 நாட்களாக சாத்தக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்களுடைய விசாரணைகளை மேற்கொண்டார்கள். அங்குள்ள உறவினர்கள், காவல் நிலைய அதிகாரிகள், சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
ஏற்கனவே மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கின்ற காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் எஸ்.ஐ. ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என சிபிஐ போலீசார் நேற்று மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ காவலில் எடுத்து விசாரிப்பதற்காக மனுத்தாக்கல் செய்திருந்தார்கள். இந்த 5 பேரையும், விசாரிக்க வேண்டியிருப்பதால் 5 நாட்கள் தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து, பல்வேறு தரப்பினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல புதிய விஷயங்கள் கிடைத்திருப்பதாகவும், இந்த 5 பேரை காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே கூடுதல் தகவல்களையும், ஆவணங்களையும் தங்களால் பெறமுடியும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது தலைமை குற்றவியல் நீதிபதி ஹேமந்த்குமார், குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 5 காவலர்களையும் இன்று காலை ஆஜர்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார். அந்த அடிப்படையில் மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த காவலர்கள் பலத்த பாதுகாப்புடன் மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு, 5 பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாருக்கு 3 நாள் சிபிஐ காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்ஐ-க்கள் பாலகிருஷ்ணன்,ரகுகணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜையும் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.