புரவி புயலால் உயிரிழந்த 7 நபரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் இழப்பீடு-முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

புரவி புயலால் உயிரிழந்த 7 நபரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பி்ல் கூறியிருப்பதாவது:-

புரவி புயல்
புரவி புயலின் தாக்கத்தால், கடந்த 3.12.2020 அன்று பெய்த அதீத மிக கனமழை மற்றும் 4.12.2020 அன்று பெய்த மிக கனமழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் எனது தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
புரவி புயல் கரையைக் கடக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, உடனடியாக போர்க்கால அடிப்படையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக, உயிர் சேதங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன.

10 லட்சம் இழப்பீடு
இப்புயலின் காரணமாக, கடலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் வீசிய பலத்த காற்றினாலும், பெய்த கன மழையினாலும் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீர் செய்யும் நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புயல் காரணமாக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. எனினும், எதிர்பாராமல் புரவி புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், 6 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

கால்நடைகளுக்கான இழப்பீடு
மேலும், இப்புயல் மற்றும் கன மழை காரணமாக 37 பசு மாடுகள், 4 எருமை மாடுகள், 4 எருதுகள், 28 கன்றுகள் மற்றும் 123 ஆடுகள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாயும், எருது ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயும், கன்று ஒன்றுக்கு 16 ஆயிரம் ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். புரவி புயல் காரணமாக 75 குடிசை வீடுகள் முழுமையாகவும், 1,725 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மேலும், 8 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 410 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

அகற்றும் பணிகள்
புரவி புயல் காரணமாக, சாலைகளில் 66 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சாலையில் விழுந்துள்ள மரங்களை மின் ரம்பங்கள் மூலம் வெட்டி, போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. புரவி புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 27 மின் கம்பங்கள் விழுந்துள்ளன. மின் வயர்கள் சேதமடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்து விழுந்ததனால் சேதமடைந்த மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை சீர் செய்யும் வகையில் மரங்களை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை மாற்றியமைக்கும் பணிகளை மேற்கொள்ள கூடுதலாக மின் துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version