கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு..!!

madurai septic tank death
maharashtra man

மின் மோட்டாரை சரி செய்வதற்காக கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய ஒப்பந்த தொழிலாளர்கள் மூன்று பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 70-வது வார்டில் கழிவுநீரை வெளியேற்றும் பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தொட்டிக்குள் இருந்த மின்மோட்டார் பழுதடைந்து போனதாக தெரிகிறது. இதை சரிசெய்வதற்காக கழிவுநீர் தொட்டிக்குள் சரவணன் என்கிற தொழிலாளர் இறங்கியுள்ளார்.

அப்போது அவருக்கு விஷவாயு தாக்கி மூர்ச்சை அடைந்து விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவரை காப்பாற்ற தொட்டிக்குள் சிவக்குமார், லட்சுமணன் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் இறங்கியுள்ளனர். அவர்களும் விஷவாயு தாக்கியதில் மயக்கமடைந்து விழுந்தனர்.

வெளியே நின்றிருந்த கார்த்திக் என்பவர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சிவக்குமாரை மீட்டனர். ஆனால் உரிய நேரத்தில் 108 அவசர ஊர்தி வாகனம் வரவில்லை. அதனால் இருசக்கர வாகனத்தில் வைத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறினர். அதற்கு தொட்டிக்குள் விழுந்திருந்த இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆட்சியர் அனிஸ் சேகர் விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.

விதிமீறல் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தால், ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்தும் செய்யப்படும் என்று கூறிய அவர், அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

Exit mobile version