கோவை அருகே பள்ளியை தரம் உயர்த்த தொழிலதிபர் ஒருவர் ரூ.3 கோடி மதிப்பு ஒன்றரை ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார்.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே எளச்சிபாளையத்தில் 1957-ல் கட்டிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தற்போது 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். உயர்நிலை கல்வி கற்க மாணவர்கள் 15 கி.மீ., தூரம் செல்ல வேண்டி இருந்தது. இதனால், நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இடப்பற்றாக்குறையால், பள்ளி தரம் உயர்த்தப்படவில்லை. பொதுமக்கள், தன்னார்வலர்கள் இணைந்து பள்ளியை தரம் உயர்த்த முயற்சி எடுத்தனர்.
பள்ளி அருகே ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நிலம் இருந்தது. தொழிலதிபரான ராமமூர்த்தியை கிராம மக்கள் அணுகி, பள்ளிக்கு நிலம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்ற ராமமூர்த்தி, ரூ. 3 கோடி ரூபாய் மதிப்பு ஒன்றரை ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார்.
ராமமூர்த்தியின் தந்தை அப்பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளிக்கு 50 சென்ட் நிலத்தை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசுப் பள்ளிக்கு நிலத்தை தானம் வழங்கிய ராமமூர்த்திக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தொழிலதிபர் ராமமூர்த்தியை பாராட்டினார்.
ராமமூர்த்தி பேசுகையில், “பள்ளி தரம் உயர்த்தப்பட்டு, மாணவர்கள் முன்னேறினால், அதுவே எனக்கு மன நிறைவு தரும். பள்ளிக்குத் தேவையான உதவிகளை இயன்றவரை செய்யத் தயாராக உள்ளேன்” என்றார்.