தமிழகத்தல் தளர்வுகற்ற 3 வது முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அதனை மீறி வெளியில் சுற்றித்திரிபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் கொரோனாவின் தொற்றின் வேகம் அதிகரித்து வந்ததன் காரணமாக கடந்த ஜூன் 19 ஆம் தேதி முதல் ஜுலை 5 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மதுரை, விருதுநகர், தேனி போன்ற தென் மாவட்டங்களுக்கும் நோய் தொற்று வேகமாக பரவியதால் தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது ஜூலை மாதத்தில் வரக்கூடிய 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று 3 வது தளர்வுகற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் பால், மருந்து விநியோகம் போன்ற அத்தியாவசிய கடைகள் தவிர்த்து அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள 37 மாவட்ட எல்லைகள் மற்றும் வெளிமாநில எல்லைகளும் மூடப்பட்டு தொடர் கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
சென்னையைப்பொறுத்தவரை 193 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் அத்தியாவசிய தேவையின்றி பொது வெளியில் சுற்றித்திரிந்தால் எந்த நிபந்தனையும் இன்றி வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.