தமிழகத்துக்கு மேலும் 5 லட்சத்து 8 ஆயிரத்தி 500 கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் நாளை, சென்னை வர உள்ளதாக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளா.
தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாம் களை சுகாதாரத் துறைச் செயலர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தடுப்பூசி நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரிக்கிறது. இது வரை தமிழ்நாட்டில் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். பொங்கல் விடுமுறை என்பதால் முதல் இரண்டு நாட்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
சில மாநிலங்களில் எல்லா நாட்களும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. தமிழகத்தில் தோய்வின்றி வாரம் முழுவதும் தடுப்பூசி செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சுகாதாரப் பணியாளர்களை தொடர்ந்து அடுத்த கட்டமாக முன்களப்பணியாளர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளனர். இதில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி ஊழியர்கள் பட்டியல் தயாராகி உள்ளது என்று தெரிவித்தார்.